செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பெருமை வராமல் பாஜக அரசு பார்த்துக்கொள்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

THE HINDU TAMIL : கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசிய ஸ்டாலின் “தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எந்த வகையிலும் பெருமை வந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது, என குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதேபோல், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார். கீழடியில் ஊராட்சி சபைக் கூட்டம் முடிவடைந்ததும் அங்கு நான்கு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். அப்போது மத்திய அரசால் திட்டமிட்டு ஆய்வுப்பணிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து தி.மு.க தலைவரிடம் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அப்போது ஐந்தாம் கட்ட பணிக்கு நேற்று அனுமதியளித்துள்ள மத்திய அரசு, தொடர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதி செய்ய வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன், கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு:
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கீழடி ஊராட்சிக்கு நான் வந்திருக்கின்றேன். மகாத்மா காந்தியடிகள் கிராமம் தான் கோவில் என்று அடிக்கடி சொல்வது போல், ஒரு பக்தனாக ஒரு கோவிலுக்கு நான் வந்திருக்கின்றேன். பக்தர்களின் கோவிலாக மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நாட்டினுடைய வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய கீழடி இது.
கீழடி என்ற இந்த ஊராட்சிக்கு வரலாற்றுச் சிறப்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கீழடி ஊராட்சிக்கு வந்ததில் நான் புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் உட்கார்ந்து இருக்கின்றேன். இந்த மண்ணில் நிற்கிறது என்பதும் நடக்கிறது என்பதும் ஒரு பெருமையாக நான் கருதுகின்றேன்.
இதைவிட மிகப் பெரிய பெருமை நீங்கள் எல்லோரும் இந்த ஊரிலே இருப்பதுதான். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று சொல்வோம். அது ஒரு வீர மொழியாக ஆட்சி மொழியாக வரலாற்றில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஒரு வாசகமாக அமைந்திருக்கின்றது. எனவே, அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த ஊர்தான் கீழடி.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது, எப்படிப்பட்ட வரலாற்றைப் பெற்றிருந்தது என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில், அதற்கு உதாரணமாக இரண்டு தடயங்கள் உண்டு. ஒரு தடயம் என்னவென்று கேட்டீர்களென்றால், ஆதிச்சநல்லூர் பகுதியில் தமிழினம் வாழ்ந்ததற்கான தடயம் அங்கிருக்கின்றது. ஆதிச்சநல்லூர் தடயத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு இடுகாடு இருந்த இடம். அடுத்து இரண்டாவது எங்கு என்று பார்த்தால், இந்த கீழடி தான்.
இந்தக் கீழடி அகழ்வாராய்ச்சியைப் பொறுத்தவரையில், ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சொல்லி 2014 ஆம் ஆண்டு அதற்கான ஒரு ஆய்வுப் பணியை மத்திய அரசு துவங்கியது. அப்படி துவங்கிய அந்த ஆய்வு பணிக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் என்கின்ற அதிகாரி நியமிக்கப்பட்டு அந்தப் பணியை சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். நான் அவரை பலமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நேரில் சந்தித்தபோது அவர் இதைப்பற்றி நிறைய செய்திகளை என்னிடத்திலே சொன்னார்கள். திடீரென்று அந்த அதிகாரியை மோடி அரசு மாற்றி வேறொரு அதிகாரியை நியமித்தார்கள்.
வேறு ஒருவரை இங்கு நியமித்ததால் அந்த ஆராய்ச்சிக்கு தடை ஏற்பட்டது. அந்த ஆராய்ச்சியை ஒழுங்காக செய்து நிறைவேற்றி விட்டால், தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் பெருமை வந்து சேர்ந்து விடுமென பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் ஓரவஞ்சனையோடு செயல்பட்டு மாற்றி விட்டார். பி.ஜே.பியை பொறுத்தவரைக்கும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நாட்டில் இருக்கும் குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புகளை மறைக்கின்ற பணிகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு இங்கிருக்கும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் முறையான விசாரணை நடத்த போராடினோம். இப்போது ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.  இது எதற்கு என்றால் இப்பொழுது தேர்தல் வரப்போகிறது. எனவே ஊரை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகம்.”
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை: