வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு


தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்புமாலைமலர் : 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்
உள்ள அம்சங்கள் வருமாறு:- அத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு-தனியார் பங்களிப்புடன் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு மானியத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாயும், பொது விநியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த 333.81 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும்.  2019-20 நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை வீட்டு வசதியினை ஏற்படுத்தும் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.18,273 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.5,911 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.482 கோடி, குடியிருப்புகள் மேம்படுத்த ரூ.100 கோடி, பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி, குறைந்தபட்ச தேவைகள் திட்டத்துக்காக 364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக 5 ஆயிரத்து 269 கோடி திட்ட மதிப்பீடு பரிசீலனையில் உள்ளது

2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5.85 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படும்.  சென்னை கோயம்பேட்டில் 296.50 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடுத்தர குடும்பங்களுக்கு வரும் ஆண்டில் 1.97 லட்சம் குடியிருப்புகளை கட்ட அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: