திங்கள், 4 பிப்ரவரி, 2019

திருநாவுக்கரசர் பதவி பறிபோனது ஏன்? .. தினகரனையும் கூட்டணியில் சேர்க்க திருநாவுக்கரசர் விரும்பினாரா?

2½ ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவி பறிபோனது ஏன்? பரபரப்பு தகவல்கள்
தினத்தந்தி : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 2½
ஆண்டுகளாக இருந்த சு.திருநாவுக்கரசரின் பதவி பறிபோனது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பேசப்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, யாரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிப்பது என்று கட்சி தலைமை யோசித்தபோது, ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர் ஆகிய 2 பேரின் பெயர்கள் அடிபட்டன. கடைசியில் சு.திருநாவுக்கரசருக்கு பதவி வழங்கப்பட்டது.
 கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை சு.திருநாவுக்கரசர் வகித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது. “நாடாளுமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர் பதவியில் இருப்பேன்” என்று சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அவர் உறுதியாக தெரிவித்திருந்தார். ஆனால், அவரது நம்பிக்கை வீணாக போய்விட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டி தலைவர்கள் தான் அதிகம். ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டு கோஷ்டி தலைவர்கள் டெல்லி செல்வதும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் ‘பஞ்சாயத்து’ செய்து அனுப்புவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய ஆதரவாளர்கள் சிலருக்கு மாவட்ட தலைவர்கள் பொறுப்பை வழங்கினார். இது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு ஜி.கே.வாசனின் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைத்து சென்றார். இதனால், கோஷ்டி பூசல் என்பது இலைமறை காயாகவே தெரிந்தது.

ஆனால், திருநாவுக்கரசர் பதவிக்கு வந்தபிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பு என்பது இல்லாமல் போய்விட்டதாக கட்சித் தொண்டர்களே வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். கட்சிப் பணிகளில் அவர் தீவிரம் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. திருநாவுக்கரசரும், ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனும் பலமுறை வெளிப்படையாக மோதிக்கொண்டனர். கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருசிலர் டெல்லிக்கு சென்றே கட்சி மேலிடத்தில் திருநாவுக்கரசர் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஆனாலும், திருநாவுக்கரசரை மாற்றும் முயற்சிகள் பலிக்கவில்லை.

தற்போது, நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், மேற்கொண்டு கட்சிகளை இழுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், டி.டி.வி.தினகரனையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் அவர் சுணக்கமாக இருந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தி.மு.க.வுடன் நல்லுறவுடன் இல்லாத நிலையில், மேற்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் திருநாவுக்கரசரை நீடிக்க செய்வது நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாதிக்கும் என்று கட்சி மேலிடம் கருதியதாக தெரிகிறது.

எனவே தான் அவசர அவசரமாக திருநாவுக்கரசரை மாற்ற கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. புதிய தலைவராக யாரை நியமிப்பது என்ற கேள்வி வந்தபோது, பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ்.அழகிரி ஆகியோரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பீட்டர் அல்போன்ஸ் ஏற்கனவே தி.மு.க.வுடன் நட்புடன் இருந்து வருவதால், தொகுதி பங்கீட்டு விஷயத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதிய காங்கிரஸ் மேலிடம் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது.

செயல் தலைவர்கள் பதவி ஏன்?
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவதை ஒத்திவைத்துவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தலைவர் நியமிக்கப்பட்டது போல், செயல் தலைவர்கள் 4 பேரும் நியமிக் கப்பட்டுள்ளனர். அதாவது, எச்.வசந்தகுமார், கே.ஜெய குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இந்த பதவிக்கு தேர்வு பெற்றுள்ளனர். ஆனால், செயல் தலைவர் பதவி என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிது ஆகும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பிறகு, அனைத்து மாநிலங்களிலும் அவர் செயல் தலைவர்களையும் நியமித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: