வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் கொலை . 5 பேர் கைது திருபுவனத்தில், 2–வது நாளாக போலீஸ் குவிப்பு

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது திருபுவனத்தில், 2–வது நாளாக போலீஸ் குவிப்புதினத்தந்தி :கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருபுவனத்தில் நேற்று 2–வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது42). திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளரான இவர், திருபுவனத்தில் சாமியானா பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். மேலும் கேட்டரிங் ஏஜெண்டாகவும் இருந்து வந்தார்.!;

கடந்த 5–ந் தேதி காலை இவர், சமையல் வேலைக்கு ஆட்களை அழைப்பதற்காக திருபுவனம் ஆதிதிராவிடர் தெருவுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு பிரிவை சேர்ந்த சிலருக்கும், ராமலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்று இரவு ராமலிங்கம் வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று இருந்தார். திருபுவனத்தில் உள்ள ஒரு தெருவில் சென்றபோது, அவருடைய ஆட்டோவை ஒரு கார் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய கும்பல், ராமலிங்கத்தை ஆட்டோவில் இருந்து இறக்கி அவருடைய இரு கைகளையும் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அங்கேயே போட்டு விட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர்.
கைகள் வெட்டப்பட்டதால் ராமலிங்கத்திற்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. அப்போது அந்த பகுதி வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமலிங்கத்தை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
கொலை தொடர்பாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மதமாற்றம் செய்வதை தட்டிக்கேட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திருவிடைமருதூர் மேல சாலை அப்துல்கலாம் மகன் அசாருதீன்(26), குறிச்சிமலை ஆஜாபகுதீன் மகன் முகமது ரியாஸ்(27), திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த சர்தார்கான் மகன் நிஜாம்அலி(33), திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதியை சேர்ந்த யாகூப் மகன் சர்புதீன்(60), அதே பகுதியை சேர்ந்த மந்திரிஅலி மகன் முகமது ரிஸ்வான்(23) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதன் காரணமாக நேற்று 2–வது நாளாக திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேற்று போலீசார் ஆங்காங்கே இரும்பு தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தெருவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலையான ராமலிங்கத்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு சென்றார். ஆனால் போலீசார் அவரை அந்த வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. எச்.ராஜாவின் காரை வழிமறித்த போலீசார் வேறு வழியாக செல்லும்படி கூறினர். இதனால் பா.ஜனதாவினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்று வழியில் சென்ற எச்.ராஜா, கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை: