புதன், 6 பிப்ரவரி, 2019

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் ஈழப்படுகொலையைப் பற்றி பேசி இருக்க வேண்டுமா?


டான் அசோக் :   ஏ.ஆர்.ரஹ்மானைக் கூட இந்த ஈழ வியாபாரிகள் விட்டுவைக்கமாட்டேன் என்கிறார்கள். ஆஸ்கர் கிடைத்தபோது அவர் ஈழப்படுகொலையைப் பற்றி பேசி இருக்க வேண்டுமாம். போரே நின்றிருக்குமாம். நியாயம் கிடைத்திருக்குமாம். அடேங்கப்பா!
ஆஸ்கர் மேடை அமெரிக்கர்களுக்கே பதற்றம் தரும் மேடை. அங்கிருக்கும் அரசியல் அப்படி. இன்னமும் ஹாலிவுட்டில் வெள்ளைக்காரர்கள் மட்டுமே நடிக்கும் 'whitewashed movies' பற்றியும், கறுப்பினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றியும் பிரச்சினை நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மார்லன் ப்ராண்டோ ஒருமுறை அமெரிக்க பூர்வகுடி பெண் ஒருவரை தன் சார்பில் ஆஸ்கர் வாங்க அனுப்பியதுடன், அமெரிக்க பூர்வகுடிகளின் மோசமான நிலைமையை பேச வைத்தார். அப்போது 'Boooo' என சத்தம் எழுப்பியதுடன் அந்தப் பெண்ணை ஒழுங்காக பேச விடாமல் அவசரமாக மேடையை விட்டு அனுப்பினார்கள். அதனால் ஒரு பலனும் இல்லை. இத்தனைக்கும் அது அமெரிக்க உள்நாட்டு விவகாரம். அதற்கே அங்கே இந்த வரவேற்புதான். இதில் எங்கேபோய் ஈழத்தை பற்றி அமெரிக்க சினிமா மேடையில் பேசுவது, பிரச்சினையை தீர்ப்பது!!

பேசியிருந்தால் ரெஹ்மானை ஏளனமாகப் பார்ப்பதுடன், அதன்பின் சர்வதேச அரங்கில் புறக்கணித்திருப்பார்கள். அவரால் தமிழ் பாடல்களை ஹாலிவுட் படங்களின் பின்னணி இசையில் இப்போதுபோல ஒலிக்கச் செய்திருக்க முடியாது. சர்வேத அரங்கில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட்தான், இந்திய சினிமாக்காரர்கள் என்றாலே இந்திக்காரர்கள்தான் என்கிற மாயையை உடைத்தவர் ரெஹ்மான். அவர் வளர்ச்சியில் எந்தத் தொய்வு ஏற்பட்டாலும் இழப்பு அவருக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூடத்தான்.
ஆகமொத்தம் ஈழப்போருக்கும், அதன் தோல்விக்கும், அங்கு நடந்த இனப் படுகொலைக்கும் காரணமாக அதற்கு சம்பந்தமில்லாத எதையாவது உளறி, எவரையாவது குற்றம் சொல்லவேண்டும். அது கலைஞரில் இருந்து ரெஹ்மானில் இருந்து அடுத்த தெரு அப்பாவி சுப்பிரமணி வரை யாராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதில் நேரடியாக பங்குகொண்ட ராஜபக்சேவை மறந்தேவிட்டார்கள். தனியொரு அத்தாரிட்டியாக போராடிய, பொறுப்பேற்க வேண்டிய புலிகளை புனிதமாக்கிவிட்டார்கள். சரி நம்மளாவது புலிகளைப் பற்றியும், அவர்களின் தோல்விக்கான காரணங்களையும் பற்றியும் பேசலாம் என்றால், உடனே நமக்குக் கிடைப்பதோ துரோகிப் பட்டம்!!!
ஈழ வியாபாரிகளே, இன்னும் எத்தனைநாள்தான் இப்படி யாரையாவது கைகாட்டிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? பிழைப்புக்காக நியாய உணர்ச்சியை அடகு வைத்து விட்டீர்கள். கொஞ்சம் மான உணர்ச்சியாவது வேண்டாமா?
-டான் அசோக்
2-02-2019

கருத்துகள் இல்லை: