புதன், 8 ஆகஸ்ட், 2018

கிரிஜாவும் குருமுர்த்தியும் அடாவடி ..மெரீனா அரசு மறுப்பு...தொண்டர்கள் கொதிப்பு!

கலைஞரின் உடல் மெரீனாவில் அடக்கம் செய்யப்பட கூடாது  என்று குருமூர்த்தி டுவீட்டரில் தெரிவித்துள்ளான்
மின்னம்பலம்: திமுக தலைவர் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம்
ஒதுக்க தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதுபற்றி முதல்வருக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோரும் திமுக முக்கிய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து கலைஞர்: முரண்டு பிடிக்கும் முதல்வர் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு கலைஞர் காலமான தகவலை காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வாசலில் இன்று இரவு 7.30 மணியளவில் பேட்டியளித்த துரைமுருகன், “திமுக தலைவர் கலைஞரை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த முழுமையான பதிலும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

துரைமுருகன் பேசிய சில நிமிடங்களில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வரை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரிடம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலனை செய்தார். இதனிடையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் மறைந்த செய்தியை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலாளர்,
“மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்யவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும், அன்னாரது இறுதி சடங்கு அன்று (8.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும், அன்னாருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், அன்னாரின் மீது தேசிய கொடி போர்த்தி, இராணுவ மரியாதையுடன் குண்டு முழக்க மரியாதையும் வழங்கவும், தமிழ்நாடு அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கவும், அந்த காலகட்டத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் அரசு சார்ந்த விழாக்கள் இரத்து செய்யப்படும்” என்றும் முதல்வர் உத்தரவுகளை வரிசைப்படுத்தியுள்ளார்.
மேலும், “காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்” என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நினைவிடத்துக்கு இடம் கேட்ட நிலையில்...முதல்வர் இதுகுறித்து விளக்கமளிக்காமல் தலைமைச் செயலாளர் மூலம் பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. ”இடம்கொடு இடம்கொடு மெரினாவில் இடம்கொடு...வேண்டும் வேண்டும் மெரினாவில் தலைவருக்கு இடம் வேண்டும்...” என்று காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் முழக்கமிட்டபடி இருக்கின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ 80 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவர் கலைஞர் அவர்களுக்குரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் சென்னை காமராஜர் சாலையில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்திற்குள் உடலை நல்லடக்கம் செய்துகொள்ள அனுமதி வழங்கிடுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கலைஞர் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடவும் முடிவெடித்திருக்கிறது திமுக.

கருத்துகள் இல்லை: