76 ஆண்டுகால
நட்பு, இதில் வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, இரண்டு
முறை கட்சி பிளவு பட்டது, ஒன்றாக பதவியை துறந்தது, குடும்ப விழாக்கள்,
கருணாநிதியின் திருமணம், அவரது பிள்ளைகளின் திருமணம், பேரன் பேத்திகளின்
திருமணம், ஓய்வில் ஒதுங்கி நோயுற்ற காலம் என அனைத்திலும் ஒன்றாக
இருந்துள்ளார் அன்பழகன்.
கருணாநிதியை
விட ஒரு வயது மூத்தவர். முரசொலியின் வைரவிழாவில் கருணாநிதி இல்லாத குறையை
சமகால தலைவரான அன்பழகன் இருந்து தீர்த்து வைத்தார். கடந்த ஏப்ரல் மாதம்
கருணாநிதியைக்காண அன்பழகன் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென
அன்பழகனின் கையை பிடித்து அந்த இயலாமையிலும் தன்வசம் இழுத்த கருணாநிதி, தன்
வாழ்வோடு எப்போதும் இணைந்திருந்த அந்த கைக்கு முத்தம் கொடுத்தார்.இதைப்பார்த்த அங்கிருந்த மற்றவர்களும், அன்பழகனும் நெகிழ்ந்து போயினர். தனது நண்பனுக்காக பேச முடியாத நிலையில் கருணாநிதி தன் அன்பைக்காட்டிய அந்த தருணம்தான் இறுதித்தருணம். அதன் பின்னர் அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நேரத்தில் பார்த்தார்.
நேற்று கருணாநிதியின் இறுதிச்சடங்கில் சவப்பெட்டியில் உடல்வைக்கும் முன் ஆளுநர் முதல் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடும்பத்தார் மட்டும் ரோஜாப்பூக்களை தூவி கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த மரியாதை கருணாநிதியின் உற்ற நண்பர் க.அன்பழகனுக்கு மட்டும் அளிக்கப்பட்டது. அவரை ஸ்டாலினும், கனிமொழியின் மகன் ஆதித்யாவும் கைத்தாங்களாக அழைத்து வந்தனர். ரோஜாப்பூவை கையில் வாரி அவரது உயிரற்ற உடலின் காலடியில் போட்ட அன்பழகன் அழுத்தமாக தனது நண்பரை வெறித்து பார்த்தப்படி நின்றார்.
அப்போது அவரை போகலாம் என்று அழைத்த ஸ்டாலினும் அந்த பார்வையில் இருந்த பல கதைகளை புரிந்து மவுனமாக நின்றுவிட்டார். பின்னர் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவுடன் அவரை கைத்தாங்கலாக இருவரும் அழைத்துச் சென்றனர். செல்வதற்கு முன்னும் மீண்டும் அதே பார்வையால் சில நொடிகள் பார்த்துவிட்டு திரும்பிச்சென்றார் அன்பழகன்.
அரசியல் வாழ்வில், வெற்றி பெற்ற பல தருணங்களில் வெற்றி மாலைகளுடன் வளம் வந்த நண்பர் கருணாநிதியை ரசித்த அந்த தருணங்களை, ரோஜா மலர்களை தூவி இறுதி பயணத்தில் வழியனுப்பும் நேரத்தில் நினைத்து பார்த்திருப்பாரோ? அன்பழகனுக்கு மட்டுமே வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக