செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

சென்னை .. தாறுமாறாக ஓடிய கார். இருவர் உயிரிழப்பு

தாறுமாறாக ஓடிய கார்: 2 பேர் பலி!மின்னம்பலம் :சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரண்டு பேர் பலியாகினர்.
சென்னை துரைப்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் பென்ரீகன். சென்னை உயர் நீதிமன்றத்தில், இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி இந்திரா பானர்ஜியை வழியனுப்பும் விழா நேற்று (ஆகஸ்ட் 6) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பென்ரீகன், நேற்று மாலை 4.30 மணியளவில் சாந்தோம் வழியாக அடையாறு செல்லும் சாலையில் தனது காரை ஓட்டிவந்தார். திடீரென இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மற்றொரு கார், ஒரு சரக்கு ஆட்டோ மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.


இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பென்ரீகனை, அங்கிருந்த மக்கள் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்ததும், போக்குவரத்து போலீசார் அங்கு வந்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட பென்ரீகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த அமீர்ஜகான், அபுதாகீர், அருண் பிரகாஷ், இளையராஜா, மார்கரெட் மற்றும் பிரகாஷ் ஆகிய ஆறு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் அமீர்ஜகான் மற்றும் அபுதாகீர் ஆகிய இருவரும், இன்று (ஆகஸ்ட் 7) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். படுகாயமடைந்த மார்கரெட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: