வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சிலை கடத்தல் வழக்கில் .. டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு

tamil.oneindia.com -veerakumaran. :  
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது என்றும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

 Srirangam statue missing case: TVS group chairman Venu Srinivasan applies for preventive bailமேலும் கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரங்கராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
இன்று இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் சிலைக் கடத்தல் பிரிவு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆறு வார காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு நாளை விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர் என்பதால் இந்த வழக்கில் தன்னை கைது செய்து விசாரிக்க கூடும் என்ற எண்ணத்தில் அவர் முன்ஜாமீன் கோரி உள்ளதாக தெரிகிறது.
தனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் பிரிவு தனது விசாரணையை துவங்கும் முன்பாக வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications

கருத்துகள் இல்லை: