செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

குழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர்கள் மீது நடவடிக்கை!

குழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர்கள் மீது நடவடிக்கை!மின்னம்பலம் : சாமிக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குழந்தைகள் உரிமை ஆணையம் கூறியுள்ளது.
"இன்று சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஶ்ரீ முண்டகன்னியம்மன் கோவிலில் எங்கள் செல்வங்கள் பழம் குத்தப்பட்டது" என்று ரமேஷ் என்பவர் நேற்று(ஆகஸ்ட் 5) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்தப் பதிவு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கவனம்பெற்றது. குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் துன்புறுத்தும் இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவித்துவருகிறார்கள்.
குழந்தைகளின் உடலில் எலும்பிச்சை பழம் குத்தப்பட்டு, உடல் முழுவதும் விபூதி பூசப்பட்டு வண்டியில் அழைத்துச் செல்லுமாறு புகைப்படங்களை அவர்களது தந்தை வெளியிட்டிருந்தார். குழந்தைகள் இருவரும் அழுதவாறு அமர்ந்திருக்கிறார்கள்.

அவற்றில் சில பதிவுகள்:
அதில் ராஜா: "எல்ல கடவுளும் சொல்வது இது ஒன்றுதான்.. மனிதனாக இருந்தால் புரிந்து கொள்ளுங்கள் ... தன் குழந்தைகளை காயப்படுத்தி கடவுளை சென்று பார்ப்பதை விட.. பிற குழந்தைகளின் பசியாற்றிப் பார் அந்தக் கடவுள் உன்னை வந்து பார்ப்பார்".
நவின் ஆண்டனி தாஸ்: "பக்தி கடவுள் என்றால்.. என்னவென்றே அறியாத குழந்தைகளை வன்கொடுமை செய்த பெற்றோர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள். வன்மையான கண்டனங்கள்".
எம்பி குமார்: "பக்தி வேண்டும் பயித்தியம் கூடாது".
இப்படி பல்வேறு கண்டனங்கள் குவிந்த நிலையில், இதுதொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குழந்தைகள் உரிமை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி "கே.கே நகர் பகுதியில் உள்ள நாகத்தம்மன் கோவிலில் பால் குடம் எடுத்தாள்" என்ற பதிவையும் ரமேஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: