புதன், 8 ஆகஸ்ட், 2018

அண்ணாவின் அருகில் துயில்!

அண்ணாவின் அருகில் துயில்!
மின்னம்பலம்: திமுக தலைவர் கலைஞர் அண்ணா சதுக்கத்தில் அண்ணாவின் அருகில் துயில் கொள்கிறார்.
ராஜாஜி அரங்கத்திலிருந்து திமுக தலைவர் கலைஞரின் உடல் இன்று (ஆகஸ்ட் 8) மாலை 6.00மணிக்கு அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கலைஞரின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வீரப்ப மொய்லீ, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கலைஞரின் உடலிலிருந்து தேசியக் கொடியை அகற்றிய ராணுவ வீரர்கள் அதனை ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு மு.க.அழகிரி, ராஜாத்தி அம்மாள்,செல்வி, துர்கா ஸ்டாலின்,தமிழரசு,கனிமொழி அவரது கணவர் அரவிந்தன், முரசொலி செல்வம் என குடும்பத்தினர் ஒவ்வொருவராக கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி மகன் ஆதித்யா இருவரும் அழைத்துவந்து கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வைத்தனர்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்த, இந்திய ராணுவத்தினர் கலைஞரின் உடலை அண்ணாவுக்கு அருகே துயில்படுத்தும் பணியை தொடங்கினர்.

கருத்துகள் இல்லை: