ஞாயிறு, 10 ஜூன், 2018

சென்னை: ஒரே வாரத்தில் 35 பேரிடம் செயின் பறிப்பு!

மின்னம்பலம் : சென்னையில் ஒரே வாரத்தில் 35 பேரிடம் செயின் பறிப்பு, 19 பேரிடம் செல்போன் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை மற்றும் செல்போன் திருட்டு போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளாக உள்ளன என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக முகூர்த்த தினங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தும் பெற்றோர்கள் எனக் குறிவைத்து மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும், தினமும் 100க்கும் மேற்பட்ட செல்போன் திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் வயதான பெண்கள் மற்றும் பணத்துடன் செல்வோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனக் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 138 வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க காவல் துறையினர் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை: