வெள்ளி, 15 ஜூன், 2018

கிணற்றில் குளித்த தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்!


மின்னம்பலம் :மகாராஷ்டிராவில் விவசாயக் கிணற்றில் குளித்ததால் இரு தலித் சிறுவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவோம் மாவட்டத்தின் வகாதி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் தலித் சிறுவர்கள் இருவர் ஜூன் 10ஆம் தேதியன்று குளித்துள்ளனர். குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது அவர்களை வழிமறித்த அப்பகுதி இளைஞர்கள் 2 போ் சிறுவர்களின் ஆடைகளைக் களைந்து பெல்ட், கம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது இளைஞர்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். வீடியோ எடுக்கும்போது சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்துக் கதறுகின்றனர். எனினும் சிறுவர்களைத் தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருவதைத் தொடர்ந்து சிறுவர்களைத் தாக்கிய ஈஸ்வா் ஜோஷி, பிரஹ்லாத் லோகா் ஆகிய இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர்கள் தாக்கப்படும் வீடியோவை குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ.வும், இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “2016ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உனாவில் மாட்டுத் தோலை வைத்திருந்ததற்காக நான்கு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தற்போது மகாராஷ்டிராவில் தலித் அல்லாதவர்களின் கிணற்றில் குளித்ததற்குத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உனாவில் பாதிக்கப்பட்டர்வர்களுக்கு நீதி கிடைத்திருந்தால், மகாராஷ்டிராவில் இது நிகழ்ந்திருக்காது” என ஜிக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று குஜராத்தில் சமீபத்தில் மோஜ்தி என்ற விலை உயர்ந்த காலணியை அணிந்ததற்காக 13 வயதுச் சிறுவனை நான்கு பேர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: