ஞாயிறு, 10 ஜூன், 2018

பன்னீர் எடப்பாடி அணியே அதிமுக ... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியே அதிமுக - தேர்தல் கமிஷன் அறிவிப்பால் தினகரனுக்கு பின்னடைவுமாலைமலர் :அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னை: அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.



ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுகளும், புதிய விதிகளும் தேர்தல் கமி‌ஷன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.
தற்போது அதற்கு தேர்தல் கமி‌ஷன் ஒப்புதல் அளித்தள்ளது. அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த முடிவை தேர்தல் கமி‌ஷன் தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்தல் கமி‌ஷன் முடிவுக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் கமி‌ஷனின் அங்கீகாரத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: