ஞாயிறு, 10 ஜூன், 2018

குட்கா: அதிகாரிகள் மீது பண மோசடி வழக்கு!

குட்கா: அதிகாரிகள் மீது பண மோசடி வழக்கு!மின்னம்பலம் : குட்கா ஊழல் தொடர்பாகப் பெயர் குறிப்பிடப்படாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத் துறையினர் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக திமுக சார்பில் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றிக் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டுமெனப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஜெ.அன்பழகன் மனுவும் அளித்திருந்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் சிபிஐ விசாரிக்க தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, விசாரணையைத் தொடங்கிய சிபிஐயின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய மத்திய கலால் துறை அதிகாரிகள், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது ஐபிசி 120பி சட்டப் பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (1988) கீழும் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. குட்கா ஊழல் வழக்கில் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்துவருகிறது.
இந்த நிலையில், குட்கா ஊழலில் தொடர்புடைய பெயர் குறிப்பிடப்படாத மத்திய மாநில அரசு அதிகாரிகள் மீது மத்திய அமலாக்கத் துறை கடந்த 8ஆம் தேதி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: