செவ்வாய், 12 ஜூன், 2018

விஜயதாரிணி கண்ணீர் .. ஆவேசம் : சபாநாயகர் தகாத வார்த்தைகள் கூறினார் .

விஜயதரணிசகாயராஜ் மு :vikatan :
சட்டப்பேரவையில் சபாநாயகர் கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, பேரவை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, தனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து விஜயதரணி பேசிக்கொண்டே இருந்தார். அப்போது, `நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக்கொண்டீர்களா’ எனச் சபாநாயகர் கேட்டுள்ளார். அதனால் ஆவேசம் அடைந்த விஜயதரணி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகரின் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

இதன் பின்னர், சட்டப்பேரவையில் நடந்த விவரத்தை விஜயதரணி கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு கேட்ட தன்னை, உள்நோக்கத்தோடு அவைக் காவலர்களைக்கொண்டு தள்ளிக்கொண்டுப்போய் முறைகேடாக உடம்பில் எல்லாம் அடிபடும் நிலைக்கு கையில், வயிற்றில், நெஞ்சில் கையை வைத்தும் புடவையைப் பிடித்து இழுப்பதும் போன்ற அநாகரிகமான செயல்பாடுகளில் இந்த அவையில் இருப்பவர்கள் ஈடுபட்டு, அவைக்காவலர்களால் வெளியேற்றம் செய்கிறார்கள்.
இறந்த மக்களுக்காக இழப்பீடு கேட்ட பெண் எம்.எல்.ஏ என்றுகூட பாராமல் மிக மோசமாக இன்றைக்கு சபாநாயகர் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக்கொண்டீர்களா என்றெல்லாம் சபாநாயகர் கேட்கிறார். ஒரு பெண் எம்.எல்.ஏ-வை பார்த்து, ஒரு சபாநாயகர் கேட்கிற கேள்வியா இது. ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்து இங்கே மக்களுக்காகப் போராட நாங்கள் வந்திருக்கிறோம். என்னைப் பார்த்து சபாநாயகர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இப்படி அசிங்கப்பட்டு இந்த அவையில் நாங்கள் செயல்பட வேண்டுமா. தனியாகப் பேசிக்கொள்கிறீர்களா என அவமானப்படுத்துவது வேறு யாரும் அல்ல; சபாநாயகர்தான். இந்த அசிங்கத்துக்கு சபாநாயகர் பொறுப்கேற்க வேண்டும்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: