சனி, 16 ஜூன், 2018

வைகோ : அணைகள் பாதுகாப்பு சட்டம் பெருங்கேடு! அணைகள் பறிமுதல் சட்டம் ?

அணைகள் பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்குப் பெருங்கேடு!மின்னம்பலம் : அணைகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அணைகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா, 2018க்கு மத்திய அமைச்சகம் கடந்த 13ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்தபோது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத் தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உட்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும். இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இதனைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நான் நேரில் சந்தித்து, உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தினேன் என்று குறிப்பிட்ட வைகோ, "வர இருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற நிம்மதியோடு இருக்கும் நிலையில், நம் தமிழ்நாட்டின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதைப் போல, அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வர நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்து, ஜூன் 13 ஆம் நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தந்து இருக்கின்றது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"இந்த அணை பாதுகாப்பு மசோதா குறித்த விவரங்கள் எதுவும் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி அவர்கள் கூறியதோடு, ‘மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது’ என்றும் தெரிவித்து இருக்கின்றார்.எனவே, அணை பாதுகாப்பு மசோதாவின் முழு விவரங்களையும் மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்" என்று கூறியுள்ளார்.
"மூடு மந்திரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு இந்த மசோதாவைச் சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நதிநீர் உரிமைப் போராளிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்" என்றும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: