வியாழன், 14 ஜூன், 2018

முதல் தீர்ப்பு வந்தவுடன் எழுந்த ஆரவாரம் இரண்டாவது தீர்ப்பு வந்தவுடன் அடங்கியது

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது சென்னை ஐகோர்ட்      மாலைமலர் : 18   எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் தமிழக சட்டசபை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.  முதல் தீர்ப்பு வந்தவுடன் எழுந்த ஆரவாரம் இரண்டாவது தீர்ப்பு வந்தவுடன் அடங்கியது
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. வேளாண்மை, கைத்தறி துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் சட்டசபையில் இன்று நடந்து கொண்டிருந்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பகல் 1.35 மணிக்கு சட்டசபை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
தீர்ப்பு வெளியான நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து வெளியே சென்றனர். தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி அறிவித்த தீர்ப்பு அதிமுக உறுப்பினர்களின் காதுக்கு எட்டியதும் மேஜையை தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், தகுதி நீக்கம் செல்லாது என இரண்டாவது நீதிபதி சுந்தர் அறிவித்த தீர்ப்பு உறுப்பினர்களை எட்டியதும் அந்த ஆரவாரம் அப்படியே அடங்கியது. மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டுள்ளதால், இப்போதைக்கு ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கருத்துகள் இல்லை: