வியாழன், 9 ஜூன், 2016

ஜெயா to கோகுல இந்திரா :திரும்பவும் அழுது என்னை ஏமாற்றப் பார்க்காதீங்க. வெளியில போங்க...’


ஆன்லைனில் தயாராக இருந்தது வாட்ஸ் அப். ஏதோ மெசேஜ் டைப்பிங் ஆனபடி இருந்தது. சற்றுநேரத்தில் வந்து விழுந்த அந்த மெசேஜ் இது.
“முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராமீது முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக கார்டன் வட்டாரத்திலிருந்தே தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மோகனிடம் தோற்றுப்போனார்.
கடந்த 2011 தேர்தலில், அதிமுக வென்று ஆட்சியமைத்தபோது வணிகவரித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் கோகுல இந்திரா. ஆனால், பதவிக்குவந்த சில மாதங்களிலேயே பல புகார்கள் கிளம்பியது. உடனடியாக, கோகுல இந்திராவை அந்தத் துறையில் இருந்து சுற்றுலாத் துறைக்கு மாற்றினார் ஜெயலலிதா. அங்கேயும் துறைசார்ந்த புகார்கள் கோகுல இந்திராவைச் சுற்றிவந்தன.
2013ம் ஆண்டு, அவரை அமைச்சரவையில் இருந்து தூக்கினார் ஜெயலலிதா. 2014ம் ஆண்டு, மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தார். அதற்குக் காரணம், அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் குறிப்பாக, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அதிக ஓட்டுகளை வாங்கிக் குவித்தது. இதற்குக் காரணம் கோகுல இந்திரா. அதனால், பதவி மீண்டும் தேடிவந்தது. கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கோகுல இந்திரா, அப்போது கோ-ஆப்டெக்ஸ் எம்.டி-யாக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸுடன் பல விவகாரங்களில் நேருக்குநேராக சண்டை போட்டார். அத்துடன், சகாயத்தையும் அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்யவைத்தார். இதெல்லாம் மக்கள் மத்தியில் முகம் சுழிக்கவைத்த சம்பவங்கள்!’’
”இதெல்லாம் பழைய கதை… இதற்கும், இப்போது கோகுல இந்திராமீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி ஃபேஸ்புக்கில் இருந்து வந்து விழுந்தது.பதிலை டைப்செய்ய ஆரம்பித்திருந்தது வாட்ஸ் அப். “கோகுல இந்திரா தோல்விக்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் அதிமுக-வில் எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை. இளவரசியின் மகன் விவேக்கின் நண்பர்கள் நிறையப்பேர் அண்ணாநகரில் வசிக்கிறார்களாம். அவர்கள் விவேக்கிடம் சில தகவல்களைச் சொல்ல, விவேக் களத்தில் இறங்கியிருக்கிறார். அண்ணாநகர் தொகுதியில் பல இடங்களில் நேரடியாக விவேக் விசாரணையில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். கோகுல இந்திராவின் அண்ணன் தேவபாண்டியன். இவர் ராமநாதபுரத்தில் வசிக்கிறார். தேர்தல் சமயத்தில் இவர் சென்னைக்கு வந்துவிட்டாராம். இவர்தான் கட்சி நிர்வாகிகளுடன் பேசியது, வாக்காளர்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுத்தது என முக்கிய வேலைகளை எல்லாம் பார்த்திருக்கிறார். ‘தங்கச்சி இல்லைன்னா இங்கே எதுவும் நடக்காது. பார்த்து எல்லாம் வேலை செய்யுங்க..’ என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகாரத் தோரணையிலேயே தேவபாண்டியன் பேசியதாகச் சொல்கிறார்கள். அத்துடன், ‘அம்மாவுக்கு அடுத்து எல்லாம் தங்கச்சிதான் தெரியும் இல்ல…அம்மா ஜெயிலுக்கு போனப்போ தங்கச்சி அழுததைப் பார்த்து அம்மாவே அசந்துட்டாங்க…அதனால தங்கச்சியை இனி யாராலும் அசைக்கவே முடியாது..’ என்றும், அவர் சில நிர்வாகிகளிடம் பேச… அது அப்படியே கட்சிக்காரர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது.

இதுமட்டுமல்ல; கோகுல இந்திரா ஓட்டு கேட்கப்போன பல இடங்களில் அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது. மற்ற தொகுதியில் எல்லாம் வாக்காளர்களுக்கு காதும், காதும் வைத்ததுபோல பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அதிமுக பண விநியோகம் செய்கிறது என்ற செய்தி மீடியாவில் வெளிவந்தது அண்ணாநகர் தொகுதியில் இருந்துதான். அதுவும், இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லிவிட்டு பணம் கொடுக்கச் சொன்னது கோகுல இந்திரா ஐடியாவாம். இதெல்லாம் அப்படியே மீடியாவில் பிளாஷ் ஆகிவிட்டது. அதுவும் இல்லாமல், சூளைமேடு பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் போனபோது கட்சி நிர்வாகி ஒருவரை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டார்களாம். அவரோ, அங்கிருந்தபடியே கோகுல இந்திராவுக்குப் பேசியிருக்கிறார். ‘நாமதான் ஜெயிக்கப் போறோம்.
எல்லோரையும் ஒழுங்கா இருக்கச் சொல்லு… இல்லன்னா நடக்கிறதே வேற… நான் யாருன்னு தெரியும் இல்ல…’ என்று கோகுல இந்திரா பேசியிருக்கிறார். கட்சி நிர்வாகியோ, உணர்ச்சிவசப்பட்டவராக அதை ஸ்பீக்கர் போனில் போட்டுவிட்டாராம். கூடியிருந்தவர்கள் எல்லோரும் இதைக்கேட்டு இன்னும் டென்ஷன் ஆகிவிட்டார்களாம். இந்தத் தகவல் அந்தப் பகுதி முழுக்க பரவியிருக்கிறது. அந்தக் கோபத்தில் அதிமுக-வுக்கு ஓட்டுப் போட இருந்தவர்கள்கூட கோகுல இந்திராவின் அடாவடியால் போடவில்லை என்கிறார்கள். இதெல்லாம் விவேக் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதில் பைனல் டச் என்ன தெரியுமா? ‘நான் தோற்றுப்போனாலும் எனக்குக் கவலை இல்லை. அம்மா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க. எனக்கு மிக முக்கியமான பதவி ஒண்ணு தேடி வரப்போகுது!’ என்று கோகுல இந்திரா பேசியதும் விவேக் காதுக்குப் போயிருக்கிறது. எல்லா விவரங்களுடன் அவர் ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டார். விவேக் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு டென்ஷன் ஆன ஜெயலலிதா, பூங்குன்றனை இண்டர்காமில் தொடர்புகொண்டு, ‘இந்திராவை வரச் சொல்லுங்க…’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.” என்ற பதில் மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
“வந்தாரா இந்திரா?” -இது ஃபேஸ்புக்கின் அடுத்த கேள்வியாக இருந்தது.
“வராமல் இருப்பாரா… ஏதோ முக்கியப் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என உற்சாகமாகத்தான் கார்டனுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், திரும்பிப் போகும்போது பேய் அடித்தவர்போல திரும்பியிருக்கிறார். ‘எனக்குத் தெரியாம இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க…உங்களையெல்லாம் நம்பித்தானே பொறுப்பைக் கொடுத்தேன்….” என்று ஆரம்பித்து வறுத்தெடுத்துவிட்டாராம். கோகுல இந்திராவோ, அழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா அதற்கெல்லாம் அசரவில்லையாம்.
‘திரும்பவும் அழுது என்னை ஏமாற்றப் பார்க்காதீங்க. வெளியில போங்க...’ என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகுதான் அவர் வகித்துவந்த பதவி பறிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.” என்று, அடுத்த அப்டேட்டை செய்துவிட்டு ஆஃப்லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.   minnambalam.com/

கருத்துகள் இல்லை: