வெள்ளி, 10 ஜூன், 2016

தமிழக மத்திய அரசுகளின் உதவியின்றி முல்லை பெரியாறு அணை கட்ட முடியாது...கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், முல்லைப்பெரியாறில் தமிழக அரசின் உதவியின்றி புதிய அணை கட்ட முடியாது என்று கூறிய கேரள முதல்-மந்திரி அனைத்துக்கட்சி கூட்டத்தை நிராகரித்தார். கேரளாவில் சமீபத்தில் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற பினராயி விஜயன், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் இருவேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அங்கு புதிய அணை கட்ட தேவையில்லை என முதலில் கூறியிருந்த அவர், பின்னர் அதை மறுத்தார். இவ்வாறு முதல்–மந்திரியின் கருத்தில் குழப்பம் நிலவியதால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது அவர் இது குறித்து கூறுகையில், ‘முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் இதை தமிழக அரசின் உதவி மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது’ எனக்கூறினார்.
இந்த விவகாரத்தில் புதிய பிரச்சினை எதுவும் இல்லாததால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியமில்லை என கூறிய அவர், அப்படி எதுவும் புதிய பிரச்சினை உருவெடுத்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தொடர்பான கேரள அரசின் வாதத்தை தமிழகமும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொள்ளாததால், சர்வதேச நிபுணர் குழு மூலம் அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: