வெள்ளி, 10 ஜூன், 2016

விழுப்புரம் :13 மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை வைஜெயந்திமாலா

சரியாகப் படிக்கவில்லை என்று கூறி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கிறது பாலி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில் சுமார் ஐம்பது மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். கோடை விடுமுறை முடிந்து கடந்த 2ம் தேதி தான் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே படித்த மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கும், பல புதிய மாணவர்களும் சேர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் ஆரம்பத்திலேயே மாணவர்களை பயமுறுத்தினால்தான் நம்மிடம் பயப்படுவார்கள், படிப்பார்கள் என்பதற்காக நெஞ்சைப் பதற வைக்கும் வேலையை செய்திருக்கிறார் அப்பள்ளியின் ஆசிரியை வைஜெயந்திமாலா. இவர் இதே பள்ளியில் 14 வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.

பள்ளியில் புதியதாக சேர வரும் குழந்தைகள் அனைவரும் பழங்கள்,கற்பூரம் என்று ஆசிரியர்களுக்குக் கொடுப்பது இங்கு வழக்கம். இந்நிலையில் நேற்று(வியாழன்) ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இனிமேல் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி, அந்த சிறு தளிர்களின் காலில் கற்பூரத்தை வைத்து கொளுத்தியிருக்கிறார் ஆசிரியை வைஜெயந்திமாலா. வலி தாங்காமல் கதறிய அந்தப் பிஞ்சுகளிடம் வீட்டில் யாரிடமாவது சொன்னால் நாளைக்கும் இதே மாதிரிதான் நடக்கும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.
இதனால் குழந்தைகள் வீட்டில் எதையும் சொல்லாமல் அழுது கொண்டே படுத்துவிட்டன. காலையில் குழந்தைகளின் கால்கள் புண்ணாகிப் பழுத்துப் போய் இருந்ததைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டிருக்கிறது அவர்களின் பெற்றோர்களுக்கு. அப்புறம் என்ன ஏதென்று விசாரித்ததில் உண்மை தெரிந்து துடித்திருக்கிறார்கள். உடனே பள்ளிக்கு சென்று இதுகுறித்து ஆசிரியையிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் அப்போது கூட சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல், ”உங்கள் குழந்தைகள் என்ன செத்தா போய்விட்டார்கள்” என்று திமிராக பதில் அளித்திருக்கிறார் ஆசிரியை வைஜெயந்தி மாலா. உடனே அனைத்துப் பெற்றோர்களும் கோபமடைந்ததால் பயந்து போன ஆசிரியை, உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.  விகடன்.com

இந்நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு பின்னர் ஆசிரியை வைஜெயந்திமாலா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் கிராமமே கொந்தளிப்பானதால் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் இருவரையும் உடனே சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டிருக்கிறது கல்வித்துறை.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரான அனிதா பேசும்போது, “நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். நேற்று படிக்கவில்லை என்று சொல்லி என் காலில் கற்பூரத்தை வைத்து கொளுத்துனாங்க. எனக்கு ரொம்ப வலிச்சதால அழுது கத்தும்போது அது கீழ விழுந்துடுச்சி. உடனே இன்னொரு கால்ல வச்சி கொளுத்தினாங்க. அப்புறம் அதுவும் கீழ விழுந்துடுச்சி. உடனே இத வீட்ல யாருகிட்டயும் சொல்லக் கூடாதுனு டீச்சர் சொன்னதால நான் அப்பா, அம்மாகிட்ட சொல்லல” என்கிறார் வலியில் துடித்தவாறு.

பிரச்னைகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர அரசின் அனைத்து துறைகளும் கையாள்வதே இப்படியான பணியிடை நீக்கம். ஆனால் இவர்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கான சரியான தண்டனை என்பது பணி நீக்கமாகத்தான் இருக்க முடியும். கவனிக்குமா கல்வித் துறை?

ஜெ.முருகன்

கருத்துகள் இல்லை: