வியாழன், 9 ஜூன், 2016

ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை... பூசி மெழுகும் மெயின் மீடியா வியாபாரிகள்

அப்பலோ மருத்துவமனை
டில்லி அப்பலோவில் கைது செய்யப்பட்டவர்கள்டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வறுமையை பயன்படுத்தி  சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது. டில்லி அப்பல்லோவில் கைது செய்யப்பட்டவர்கள்</ இக்குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வெள்ளியன்று அப்பல்லோவின்  மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர்  மற்றும் மருத்துவமனையிலிருந்த  மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. டெல்லியிலுள்ள மேலும் இரண்டு பெரிய தனியார் மருத்துமனைகள் மற்றும் அப்பல்லோவின்  சில ஊழியர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சிறுநீரக மோசடி அப்பல்லோவின் மூத்த மருத்துவர்களால் தான் நடத்தப்படுவதாகவும் தன் மகன் அதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையை உடைத்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள சைலேசின் தாயார் சுமன்லதா. இம்மோசடிக்கு பின்னால் இருப்பவர்கள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஆதித்யாவின் தந்தையோ  மருத்துவமனை உயர் அதிகாரிகளின் துணையில்லாமல் தன் மகன் செய்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை
இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் என்பவனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இம்மோசடி கும்பல் தமிழ்நாடு,மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வறுமையிலிருக்கும் மக்களிடம் ஆசைகாட்டி டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறது. இவர்களிடம் 2-3 லட்சம் கொடுத்து சிறுநீரகத்தை பெற்று அதை வசதி படைத்த நோயாளிகளுக்கு 25-30 லட்சங்களுக்கு விற்றிருக்கிறது. அப்பல்லோவின் மூத்த மருத்துவர்கள் இம்முறைகேடான அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார்கள்.
உறுப்பு மாற்று திசு இடமாற்று சட்டம் – 2011  சட்டவிதிகளின்படி, இறந்தவர்கள் அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறவினர்களின் ஒப்புதலுடன் உறுப்புகளை எடுக்கலாம். மாறாக உயிரோடு இருப்பவர்களிடமிருந்து எடுத்து மாற்றுவது என்றால் அதற்கு மூன்று வரையறைகளை கொடுத்துள்ளது இச்சட்டம். 1 . தானம் கொடுப்பவர் நோயாளியின் நெருங்கிய ரத்த உறவாக இருக்க வேண்டும் அல்லது 2.ஏதாவது சிறப்பான காரணங்களுக்காக நோயாளி மீது தானம் கொடுப்பவருக்கு பிணைப்பு இருக்கவேண்டும் பொருளாதார நோக்கம் இருக்க கூடாது; 3.தனிச்சிறப்பான சூழ்நிலையில் இரு நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களான தானம் கொடுப்பவர்களையும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ளலாம். அதாவது கணவருக்கு தானம் செய்ய மனைவி தாயாராக இருந்தும் சிறுநீரகம் பொருத்தமில்லாத பட்சத்தில் இதே போன்று திண்டாடும் மற்றொரு குடும்பத்தினரும் இவரும் இடம் மாறி தானம் செய்யலாம்.
சைலேசின் குடும்ப உறுப்பினர்
சைலேசின் குடும்ப உறுப்பினர்
மேற்கண்ட விதிமுறைகளை உறுதி செய்த பிறகே சம்பந்தப்பட்ட மருத்துவமனை உறுப்புகளை மாற்ற வேண்டும்.இதற்காக மருத்துவமனைகள்  அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அல்லாதவர்களை கொண்ட இரண்டு கமிட்டிகள் அமைத்து மொத்த நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது சட்டவிதி.
ஆனால் அப்பல்லோ மோசடியில் சிறுநீரகம் பிடுங்கப்பட்டவர்களையும் வாங்கியவர்களையும் உறவினர்களாக சித்தரிக்கும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து மேற்கண்ட சட்டவிதிகளை மீறியுள்ளது இக்கொள்ளை கும்பல்.  இவ்வாவணங்களை சரிபார்க்க வேண்டிய அப்பல்லோவின் மூன்று மருத்துவர் கொண்ட குழுவோ இப்போலி ஆவணங்களை ஏற்றுக்கொண்டு உறுப்பு மாற்றுக்கு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை பரிசோதித்ததில் சிறுநீரகம் வாங்கியவர்களின் முகவரிகள் சில போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை முறைப்படுத்தும் நோக்கில்  கடந்த நவம்பர் முதல் “உறுப்பு மற்றும் திசு தானத்திற்கான தேசிய பதிவேடு” ஆரம்பிக்கப்பட்டு அதன் வழியாக மட்டுமே உறுப்பு மாற்று செய்வது டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி தானம் வேண்டுவோர் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தானம் கொடுப்பவர்களும் இதே போன்ற முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தேவையை பொருத்து உறுப்புகள் தானம் நடைபெறும்.இது டெல்லியில் நடைமுறையில் அமலில் இருந்தாலும் அப்பல்லோவில் இம்முறை பின்பற்றப்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
இத்தனைக்கு பிறகும்  போலியான ஆவணங்கள் மூலம் சிலர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி தனக்கு பொறுப்பில்லை என கையை விரிக்கிறது அப்பல்லோ. உலக தரம் வாய்ந்த அப்பலோவால்  பிரத்யேகமாக இரண்டு குழு அமைத்தும் போலி ஆவணத்தை கண்டறிய முடியவில்லை என்பது அதன் தரத்தை குறிக்கிறதா அல்லது அப்பல்லோ உண்மையை மறைக்கிறதா ? எதுவானாலும் அதற்கும் அப்பல்லோதான்  பொறுப்பேற்க வேண்டும். நடந்திருப்பது ஒரு கொள்ளை நாளை நோயாளிகளை கொலை செய்துவிட்டு மருத்துவர் போலி ஆவணத்தை கொடுத்து சேர்ந்த போலி மருத்துவர் என்று கூட இவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இப்படியான தரமற்ற வழிமுறைகளை(பிராசஸ்) கொண்டிருக்கும் மருத்துவமனை இது போன்று வேறு என்னென்ன குற்றங்கள் இழைத்திருக்கிறது அல்லது துணைபோயிருக்கிறது என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
பொதுவில் இது போன்ற கார்ப்பரேட் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளின் முறைகேடுகள் தவறுகள் வெளிவர அவர்கள் அனுமதிப்பதில்லை. இம்முறைகேடு பனிப்பாறையின் நுனி தான். தனியார்மயம் என்ற பனிப்பாறை உள்ளுக்குள் மறைந்திருக்கிறது.  குறிப்பாக மறுகாலனியக்கத்திற்கு பிறகு மருத்துவதுறை சேவை என்ற நிலையிலிருந்து மாறி பல மடங்காக லாப மீட்டும் தொழிலாகிவிட்டது. அது  ரியல் எஸ்டேட் போன்ற ஒரு தொழில். இதில் அறநெறிகளுக்கு இடமில்லை. அப்படி அறநெறியை எதிர்பார்ப்பதையே குற்றமாகவும்; சந்தையில் தலையிடுவதை மாபெரும் பாவம் என்கிறது புதிய தாராளமயாக்கல் கொள்கை. மருத்துவகல்லூரியிலிருந்து கார்ப்பரேட் மருத்துவமனை வரை கோலோச்சும் முதலாளித்துவ லாப வெறியின் தவிர்க்க முடியாத விளைவுகள் தான் இது போன்ற மோசடிகள்.
ரவி  வினவு.com

கருத்துகள் இல்லை: