ஞாயிறு, 5 ஜூன், 2016

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு? ஊத்தி மூட முடியுமா?

முறையற்ற வழியில்தான் பணம் வந்ததா?” சூடுபிடிக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு!
மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் எழுச்சி - வீழ்ச்சிகளோடு இணைந்து பயணித்துக்கொண்டிருக்கிறது சொத்துக் குவிப்பு வழக்கு.

1996-ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு கொடுங்கனவாக மாறியது இந்த வழக்கு. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பெருமையைப் பெற்றுள்ள ஜெயலலிதாவை இப்போதும் அலைக் கழிக்கிறது இந்த வழக்கு. இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில், ஏறத்தாழ இறுதிவாதம் நிறைவடைந்துவிட்டது. அதன் சுருக்கம் இங்கே...


‘‘வரி செலுத்துவதெல்லாம் முறையான வருமானமல்ல!”

ஜூன் 1-ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்தவா ராய் அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக  அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, தனது வாதத்தை முன்வைத்தார். “ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒருவர் மற்றொருவருக்கு, மாற்றி மாற்றிக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாகச் சொல்கின்றனர். அவர்களுக்குள்ளாக, ஒருவர் மற்றொருவரிடம் இருந்து பெற்ற கடன்தொகையை வைத்து, தொழில் தொடங்கியதாகக் காட்டுகின்றனர். அந்தத் தொழில்களில் வந்த லாபம் மூலம் பல சொத்துக்களை வாங்கியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒருவர் மற்றொருவருக்கு கடன் கொடுத்த பணம், கடன் கொடுத்தவருக்கு எங்கிருந்து வந்தது, எந்த வழியில் வந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை.

அந்தச் சொத்துக்களுக்கு முறையாக அவர்கள் தொடக்கத்தில் வருமானவரியைக்கூடச் செலுத்தவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பாக ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பிறகும், நான்கு மாதங்கள் கழித்துத்தான், வருமான வரியை ஜெயலலிதா தரப்பு செலுத்தியது” என்று வாதிட்டார்.
‘‘வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது குற்றமா?”

மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகளில் ஒருவரான பி.சி.கோஷ், “வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்ப்பது குற்றமா? ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர், அவருடைய உறவினரிடம் இருந்து கொஞ்சம் கடன் வாங்கி, வேறு தொழிலில் அதை முதலீடு செய்து, அதன்மூலம் சொத்துக்கள் வாங்கினால், அது குற்றமா? அதைக் குற்றமாகக் கருத முடியாது. கடனாக வாங்கிய பணத்தை, முதலீடு செய்யும் தொழிலும், அதன்மூலம் அவர்கள் ஈட்டும் வருமானமும் தவறான வழியில் இருந்தால் மட்டுமே அதைக் குற்றமாகக் கருத முடியும்” என்றார்.

‘‘பணம் வந்ததற்கான வழியே தெரியவில்லை!”

நீதிபதி பி.சி.கோஷ் சொன்ன உதாரணத்தை ஏற்றுக்கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்​பட்டு உள்ளவர்கள் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து வைத்துள்ளனர். அது நிரூபிக்கப்​பட்டுள்ளது. அதற்கு, வருமானவரியை மட்டும் செலுத்திவிட்டால், அந்த வருமானம் நல்ல வருமானம் என்றாகாது.  வருமானவரித் துறை, நீங்கள் செலுத்தும் வரியை வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால், அது எந்த வழியில் வந்தது? வந்த வழி, முறையானதா - முறையற்றதா என்பது பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாது. அந்தக் கேள்விகளை அரசுத் தரப்புதான் எழுப்பும். அதற்கான பதிலை நீதிமன்றங்கள் முடிவு செய்யும். அந்த வகையில் விசாரணை நீதிமன்றம், அது தவறான வழியில் வந்த பணம் என்று தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்​பட்டவர்களால், அது சரியான வழியில்தான் வந்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் அந்தப் பணம் முறையற்ற வழியில் வந்தது என்பதற்கான ஆவணங்களை வைத்து இருக்கிறீர்களா? இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றனர். அப்போது எழுந்த சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் ஆப்தே, “அரசுத் தரப்பு அப்படி எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. மாறாக, அடர்ந்த புதரில் இலக்கற்று அம்பு எய்வதைப்போல குற்றம்சாட்டுகின்றனர்” என்றார்.

அதற்குப் பதிலளித்த ஆச்சார்யா, “அடிப்​படைக் குற்றச்சாட்டை எழுப்புவதுதான் அரசுத் தரப்பின் வேலை. அதில் தனக்குத் தொடர்பில்லை என்பதற்கான ஆதாரங்களைக் காட்டி, தங்களை நிரூபிக்க வேண்டியது குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கடமை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறியும் போதிய ஆதாரங்களை அரசுத் தரப்பு, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது”என்று சொல்லி தன்னுடைய வாதத்தை முடித்தார்.

‘‘வழக்கின் தன்மையை கர்நாடக உயர் நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை!”

அதன்பிறகு ஆஜரான கர்நாடக அரசின் மற்றொரு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்ல. கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு என்பதை முதலில் உணர வேண்டும். இப்போது இங்கு வாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள், கர்நாடக உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படிக் கையாண்டுள்ளது, உயர் நீதிமன்றம் செய்த அடிப்படைத் தவறுகள் என்ன,  கணக்கீடுகளில் செய்யப்பட்ட வெளிப்படையான பிழைகள் குறித்துத்தான். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இந்த வழக்கின் தன்மையையும் கர்நாடக உயர் நீதிமன்றம் சரியாகப் புரிந்துகொள்ளவே இல்லை. மிகச் சாதாரணமாக விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அது குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் உயர் நீதிமன்றம் கையாண்டு உள்ளது. 66 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளும் உயர் நீதிமன்றம், வருமானத்தை அதிகமாக்கிக் கடன்களை வருமானமாக்கி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சம்பாதித்தச் சொத்துக்களை 10 சதவிகிதத்துக்கும் குறைவாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கணக்கீடுகளைக் குழப்பி உள்ளது. வெளிநாட்டில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத்த 1.5 கோடி ரூபாய் பணத்தை வருமானமாக உயர் நீதிமன்றம் எப்படி எடுத்துக் கொண்டது என்பதற்கு எந்த விளக்கமும் அதன் தீர்ப்பில் இல்லை. அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா அந்தப் பணத்தை? 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் போயஸ் கார்டனில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.  பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் 3 வழிகளில் தீர்ப்பு வழங்கலாம்” என்று சொல்லி தனது வாதத்தை நிறைவுசெய்தார்.
‘‘முறையான ஆவணங்கள் இல்லை!”

  அதன்பிறகு வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் சேகர் ஆப்தே, சுருக்கமாக தன்னுடைய வாதத்தை வைத்தார். “அரசுத் தரப்பு முறையான ஆவணங்களை முன்வைக்கவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் சரியான ஆய்வுகளுக்குப் பிறகே தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. விசாரணை நீதிமன்றம் சொத்துக்களில், அதிக மதிப்பீடுகளைச் செய்துள்ளது” என்று சுருக்கமாக வாதிட்டார். இதோடு அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதிவாதம் நிறைவடைந்துவிட்டது.

7-ம் தேதி அடுத்த விசாரணை...

சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிவாதம் நிறைவடைந்ததை அடுத்து, கர்நாடக அரசின் வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஒரு கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக வாதிட அனுமதி கேட்டார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் சேகர் ஆப்தே மறுப்புத் தெரிவித்தார். ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் லூத்ராவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 7-ம் தேதிக்கு அந்த விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

- ஜோ.ஸ்டாலின்

முன்னோட்டத் தீர்ப்பு!

அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 2004-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ்பால் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முகம்மது அஸரப்பின் சகோதரருக்கும் ராஜீவ்பாலுக்கும் இடையே பகை இருந்து வந்தது. ராஜீவ்பாலை கொல்ல பல முறை முயற்சிகள் நடந்து 2004 டிசம்பர் 28-ம் தேதி கொல்லப்பட்டார். காலம் உருண்டோடியது. சமாஜ்வாடி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ‘இதனால் விசாரணை ஒழுங்காக நடக்காது. சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ எனச் சொல்லி ராஜீவ்பாலின் மனைவி பூஜாபால் கீழ் நீதிமன்றத்தில் மனுப் போட்டார். ‘கணவரை கொன்றவர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணை கேட்டு அவர் போட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகின. 12 வருடங்களாகத் தொடர் சட்டப் போராட்டம் நடத்திய பூஜாபால், கடைசியில் உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டினார். அங்கு, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

‘‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி முழுமையான, நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் கீழ் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையை மீண்டும் நடந்தலாம். இந்த நியாயத்தின் அடிப்படையில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் போட முடியும். மறு விசாரணை, புலன் விசாரணை, மீண்டும் புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை, மீண்டும் நீதிமன்ற மறு விசாரணை என எது செய்வதாக இருந்தாலும் நியாயத்தின் அடிப்படையில் செய்ய எங்களுக்கு அதிகாரம் உண்டு’’ என அந்த வழக்கில் சொன்னது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு கடந்த ஜனவரி 22-ம் தேதி எழுதப்பட்டது. இந்தத் தீர்ப்பை எழுதியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி அமித்தவா ராய்.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளில் ஒருவர்தான் அமித்தவா ராய். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது நோட்ஸ் எடுப்பது அமித்தவா ராய்தான். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மறு விசாரணைக்குப் போகலாம் என்பதுதான் நீதித்துறை வட்டாரத்தில் டாக்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி    நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: