சனி, 11 ஜூன், 2016

மதுரை அரசு மருத்துவமனை: லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மகனை பறிகொடுத்த தந்தை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால், கணபதி 20 நிமிடம் வரிசையில் நின்று உள் நோயாளிகள் அனுமதிச் சீட்டை வாங்கியுள்ளார்.
அப்போது ஸ்டெரெச்சர் தள்ளும் மருத்துவமனை ஊழியர், கணபதியிடம் 300 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் ஸ்டெரெச்சரை தள்ளுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கணபதி லஞ்சம் தர மறுத்ததால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜேந்திரப் பிரசாத்தை ஸ்டெரெச்சரிலேயே ஊழியர் விட்டுச் சென்றுள்ளார். அதனால், கணபதியே ஸ்டெரெச்சரை தள்ளிக் கொண்டு, உள் நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி, லஞ்சம் கேட்ட நபர் மீது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் அந்த நபரை தேடினர். ஆனால், அவர் தலைமறைவானார்.
இதையடுத்து, மருத்துவமனை டீனிடம் கணபதி புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரிக்க டீன் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக டீன் எம்ஆர். வைரமுத்து ராஜுவிடம் கேட்டபோது, உயிரிழப்பு வருந்தத்தக்கதுதான். லஞ்சம் கேட்ட நபர் மருத்துவமனை ஊழியர் இல்லை. அவர் இடைத்தரகராக இருக்கக்கூடும். விசாரித்து வருகிறோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் அளவுக்கு உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த நோயாளிக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கண்டிப்பு காட்டிய மருத்துவர்கள், நுழைவுச்சீட்டு சீட்டு வாங்கச் சொல்லி அலைக்கழித்தது, லஞ்சம் கேட்டு ஊழியர் ஸ்ட்ரெச்சரை தள்ள மறுத்தது உள்ளிட்ட காரணங் களால் தாமதமான சிகிச்சையால் ஒரு உயிரிழப்பு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் உள்ள அனைத்து பகுதிகளும் சிசிடிவி கேமரா க்களில் கண்காணிக் கப்படுகிறது. அதனால், சிகிச்சைக்கு தாமதமான சம்பவங்களை கேமரா பதிவு மூலம் ஆராய்ந்து லஞ்சம் கேட்ட நபரை பிடித்து விசாரித்தால், இந்த துயரச் சம்பவத்தின் பின்னணி தெரிய வரும். தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் உதவியாகவும் இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: