சனி, 2 ஏப்ரல், 2016

40 சதவிகித கமிஷன் இல்லாமல் எந்தத் திட்டமும் நிறைவேற முடியாது என்பது அரசு விதியாகிய அவலம்....

savukkuonline.com: தேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு. c302011 ஆண்டின் தொடக்கம் இந்த ஆண்டு போல இல்லாமல், கடும் தேர்தல் பரபரப்புடன் பிறந்தது.    2006ம் ஆண்டு முதல், விளம்பரம் என்ற மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகளாக இருந்த பெரும்பாலான ஊடகங்கள், திமுகவை வெறித்தனமாக விமர்சிக்கத் தொடங்கின.   திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள், குறைபாடுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று அத்தனையையும் ஊடகங்கள் தோண்டி எடுத்து பட்டியலிடத் தொடங்கின. ஜனவரி மாதத் தொடக்கம் முதலாகவே திமுகவின் சரிவு வெளிப்படையாக தென்படத் தொடங்கியது.   ஆனால் இந்த சரிவுகளை உணர மறுத்த திமுக, உளவுத்துறை தெரிவித்த 110 தொகுதிகளில் வெற்றி என்ற பொய்க்கணக்கை நம்பி கொண்டு தேர்தலை எதிர்கொண்டது.


2016ல் அது போன்ற பரபரப்புகள் இல்லை. மார்ச் மாதம் முடிந்த நிலையில் கூட மே மாதத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் இன்னமும் முழுமையாக களத்தில் இறங்கவில்லை. இதோ அதோ என்று இழுப்பறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விஜயகாந்தும் ஒரு வழியாக மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகி, ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.    பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், இன்னமும் சுறுசுறுப்பின்றி உள்ளன.  தேர்தலுக்கு இன்னமும் 45 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்ன அவசரம் என்று இருக்கிறார்களோ என்னவோ.

இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்களின் முன்னால் ஊசலாடும் ஒரே கேள்வி, தற்போதைய அதிமுக அரசு தொடர வேண்டுமா இல்லையா என்பதே.    தமிழகம் எப்போதும் இரு திராவிடக் கட்சிகளிடையே மாறி மாறி பங்கு போடப்பட்டு வந்துள்ளது.   கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் பல முனை போட்டி நிலவுகிறது.    திமுக மற்றும் அதிமுக ஒரு புறம். முதல்வர் கனவுகளோடு களங்காணும் அன்புமணி மற்றும் சீமான் மறு புறம் என்றால், நடமாடும் கார்ல் மார்க்ஸாக விஜயகாந்தை மாற்றியுள்ள மக்கள் நலக் கூட்டணி மற்றொரு புறம்.

2011ம் ஆண்டு போல, ஊடகங்கள் பெருமளவில் அதிமுக அரசுக்கு எதிராக திரும்பவில்லை என்பது உண்மையே.   கடந்த திமுக ஆட்சியில் விளம்பரங்களை அளித்து ஊடகங்கள் கட்டிப்போடப்பட்டது என்றால், இந்த அதிமுக அரசு விளம்பரங்கள் என்ற கேரட்டை காட்டிக் கொண்டே, ஒத்து வராத ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு என்ற பிரம்பை வீசிக் கொண்டே இருந்தது.    அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ஒருவரை விடாமல் அவதூறு வழக்கு போட்டு வெளிப்படையான மிரட்டலில் அதிமுக அரசு கடந்த நான்காண்டுகளாக இறங்கி வந்தது.    ஆனால், குறைந்தது தேர்தல் சமயத்திலாவது உறக்கத்தை கலைத்து விழித்தெழ வேண்டிய ஊடகங்கள், தேர்தல் நெருங்கிய பின்னரும் கூட, ஜெயலலிதாவுக்கு மயிலிறகு சாமரம் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.   ஊடகங்கள் செய்யத் தவறிய பணியை சமூக வலைத்தளங்களும், வாட்சப்பும் செய்து கொண்டு உள்ளன என்பதே ஒரு ஆறுதலான விஷயம்.

தனது மக்கள் விரோத கொள்கைகளை ஜெயலலிதா ஒரு காலமும் நிறுத்தமாட்டார் என்பதற்கான பெரும் அறிகுறி, மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை பதிவு செய்திருக்கும் தேச விரோத வழக்கு.  “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.

மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக ஒரு பாடலைப் பாடிய குறறத்துக்காக பாடகன் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த இதே அதிமுக அரசுதான் தற்போதைய கைதுகளையும் அரங்கேற்றியுள்ளது.   மதுவிலக்குக்கு எதிராக ஒரே ஒரு குரல் கூட எழுந்து விடக்கூடாது என்பதில் அதிமுக அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.     தேர்தல் நேரமானாலும், மக்களிடையே மதுவிலக்கு கோரிக்கைக்கு எவ்வளவு பெரிய ஆதரவு இருந்தாலும், மதுவால் அரசு கஜானாவுக்கும், தனிப்பட்ட வசூலுக்கும் எவ்விதத்திலும் குறை நேர்ந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே ஜெயலலிதா அரசு கவனமாக இருக்கிறது.

இந்தத் தேர்தலில் முக்கியமான கருப்பொருள் என்ன ?   அதிமுக அரசு எப்படியும் அகற்றப்பட வேண்டும் என்பதே அது.   அப்படி அகற்றப்பட்டே ஆக வேண்டிய அளவுக்கு அதிமுக அரசு என்ன செய்தது அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

2006 திமுக அரசாங்கம் அடுத்தடுத்து செய்த பல்வேறு தவறுகள், 2ஜி ஊழல், போன்ற விவகாரங்களால் ஏற்பட்ட கடுமையான கோபம், அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது.    ஆனால் அந்த பதவியை தங்களது செல்வாக்குக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே அதிமுக எடுத்துக் கொண்டது.    பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே தேமுதிகவோடு ஏற்பட்ட கடுமையான மோதல் இதை வெளிப்படுத்தியது.

அதிமுக அரசு பொறுப்பேற்றதும், முதல் வேலையாக தலைமைச் செயலகத்தை பழைய புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார் ஜெயலலிதா.    புதிய தலைமைச் செயலக கட்டிடம், ஒரு தேவையற்ற கட்டுமானம் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, பல நூற்றுக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பரிசீலிக்க மறுத்தார் ஜெயலலிதா.   அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார்.     அரசு அலுவலர்களை குடியேற்ற வேண்டிய அக்கட்டிடம் ஆபரேஷன் தியேட்டர்களாக இன்று மாறியுள்ளது.     நிர்வாக வசதி என்று மாற்றத்துக்கு ஜெயலலிதா காரணம் கூறினாலும், திமுக அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் என்ற ஒரே நோக்கத்தில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை.

பெரும்பான்மையான கல்வியாளர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட சமச்சீர் கல்வியை அடாவடியாக ரத்து செய்து, அதன் பின்பு பல முறை நீதிமன்றத்தால் குட்டுப் பட்டார் ஜெயலலிதா.    இதைத் தொடர்ந்து சமச்சீர் கல்விக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தையும் குப்பையில் எரிந்து விட்டு, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே புதிதாக பாடப்புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.

இதன் காரணமாக பள்ளி திறந்தும் இரண்டு மாதத்துக்கு மேல் எந்தப் பாடப்புத்தகங்களை படிப்பது என்று மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர்.   புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் ஊழல் என்று அப்போதே ஊழல் புகார் கிளம்பியது.    சிங்கிள் கலரில் ஏ4 அளவில் அச்சடிக்க அரசு வழங்கி வந்தது ரூபாய் 34.  ஜெயலிதா அரசு பொறுப்பேற்றதும், இந்தத் தொகை ரூபாய் 70ஆக உயர்த்தப்பட்டது.     பைண்டிங் செய்ய வழங்கப்பட்டு வந்த ரூபாய் 24 உயர்த்தப்பட்டு 40 ஆகியது.      இப்படி புதிய புத்தகங்கள் அச்சடிப்பதால் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற பண விரயத்தைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.    அந்தக் குழு அம்மாவின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் சொம்பு ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்பட்டு, சமச்சீர் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க குறைபாடுகள் நிரம்பியது என்று பரிந்துரை செய்தது.  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பரிந்துரையை ஏற்காமல், சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.   இதையும் ஏற்றுக் கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.

உச்சநீதிமன்றமும், ஜெயலலிதா அரசின் மேல் முறையிட்டு மனுவை நிராகரித்தது.  “புதிதாக ஒரு அரசு பொறுப்பேற்றுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிராகரிக்க முடியாது.    முந்தைய அரசு ஒரு அரசியல் தலைவர் எழுதிய பாடலை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது ஆட்சேபகரமானது என்றால், அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம்.  அதற்கு பதிலாக, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பாடத்திட்டத்தையே நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு மேல்முறையீடு செய்ய வேறு வழியில்லை என்ற காரணத்தால், அமைதியானார் ஜெயலலிதா.      ஜெயலலிதாவின் இந்த அரசியல் விளையாட்டு, லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கிறது என்ற எண்ணத்தை விட, திமுகவின் திட்டங்களை நீக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியே ஜெயலலிதாவிடம் மேலோங்கி காணப்பட்டது.    ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்று அவரது ஆதரவாளர்களால் கட்டி வைக்கப்பட்ட பிம்பம் உடைந்தது.

சென்னை துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்கு செல்கிறது என்ற காரணத்தால், சென்னை துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மதுரவாயல் பறக்கும் பாதை உருவாக்கப்பட்டது.     ஏறக்குறைய 5000 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகத்தின் மூலமாக அனுப்புகின்றன.  சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் சென்னை  நகருக்குள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.  இந்த குறுகிய நேரத்துக்குள்தான் கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பயணித்து, சென்னை துறைமுகத்தை வந்தடைய வேண்டும்.   அங்கேயும் லாரிகளின் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும்.   இந்த காரணத்தினால், பெரும்பாலான நிறுவனங்கள், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிருஷ்ணாபட்டினம் தனியார் துறைமுகத்துக்கு செல்கின்றன.    தமிழகத்தின வருவாய் குறைந்த வருவதை தவிர்ப்பதற்காகவே மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது.   இத்திட்டம் 2013ம் அன்று முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும்.  ஆனால் ஜெயலலிதாவால் இன்று முழுமையடையாத தூண்களாக அத்திட்டம் முடங்கியுள்ளது.

மதுரவாயல் பறக்கும் சாலை கட்ட உத்தரவு பெற்ற நிறுவனம் சோமா என்டர்பிரைசஸ்.    அந்த பறக்கும் சாலைக்கான உத்தரவைப் பெறுவதற்கே, சோமா என்டர்பிரைசஸ் நிறுவனம், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை “நன்றாக கவனித்த பிறகே” உத்தரவை பெற்றது.    இதன் காரணமாகவும், மேலும் பறக்கும் சாலைக்கான தூண்கள் அமைக்கும் பணி 80 சதவிகிதம் நிறைவுற்ற நிலையிலும், மேலும் 40 சதவிகித கமிஷனை தர முடியாது என்று சோமா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.

அடுத்த வாரமே, ஜெயலலிதாவிடமிருந்து, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் வடிவமைப்பு பிழையாக உள்ளது என்ற அறிக்கை வெளியானது.   உடனடியாக பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.    தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன் என்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதாவின் நிர்வாக லட்சணம் இதுதான்.

40 சதவிகித கமிஷன் இல்லாமல், தமிழகத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே மாறிப் போனது.

தொடரும்.

கருத்துகள் இல்லை: