செவ்வாய், 29 மார்ச், 2016

ஸ்டாலின் : விரோதிகளையும் துரோகிகளையும் கலைஞர் மன்னிக்க கூடியவர்.....ஸ்டாலின் சொன்னா சரிதான்....

சென்னை, துரோகிகளையும், விரோதிகளையும் மன்னிக்க கூடிய தலைவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார். கட்சியில் இணைந்தனர் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் நேற்று இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பெரியசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சொத்துக்குவிப்பு வழக்கு

எப்படிப்பட்ட விரோதிகளையும், துரோகிகளையும் மன்னித்து, மறந்து அவர்களை சகோதரர்களாகவோ, சகோதரிகளாவே ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரை நாம் பெற்று இருக்கிறோம். இதை உணர்ந்த காரணத்தால் தான் நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள். மே 16-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு சில நாட்கள் கழித்து 19-ந்தேதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. மலரும் செய்தி உங்களுக்கு கிடைக்கும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

நாம் இருக்கும் தமிழகம் செழிக்க வேண்டும். இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். இன்றைக்கு இருக்கும் முதல்-அமைச்சர் மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ கவலைப்படவில்லை. அவருக்கு இருக்கும் கவலை எல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தம்மை எவ்வாறு விடுவித்துக்கொள்ள முடியும் என்பது தான். ஆனால் மக்களை பற்றி நினைக்கும் ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கருணாநிதி தான்.

நாடகம்

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தலைவர் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? அவற்றை அவர் செயல்படுத்தினாரா? தேர்தல் நெருங்குகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தயார் செய்யும் பணியிலும், நேர்காணல் நடத்தும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில், அமைச்சர்கள் வீட்டில் சோதனை, வீட்டுக்காவல், பணம் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே? கட்சி தலைமை செய்த தவறை மறைக்க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல மக்களை ஏமாற்ற ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள்.

ஒரு மத்தியமந்திரியே தமிழக முதல்-அமைச்சரை பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார். இந்த ஆட்சியில் வளர்ச்சி பணி இல்லை. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தவர்களையும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் தவறு செய்தவர்கள் மீதும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரசாரம்

ஏதோ வந்தோம், கட்சியில் இணைந்தோம் இல்லாமல் நீங்கள் இப்போதே பிரசாரத்தை தொடங்க வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் முந்தைய தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இப்போதைய அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் எடுத்து சொல்ல வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துகள் இல்லை: