செவ்வாய், 29 மார்ச், 2016

தினமலர் : தென் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி?

தென் மாவட்டங்களில், தேர்தல் பணிகளை கவனிக்க, கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டு, தென் மாவட்டங்களில் கட்சியின் தளபதியாக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், தென் மாவட்டங்களில், கட்சியின் செயல்பாடுகள் வேகம் இல்லாமலேயே இருந்து வந்தன. 'நமக்கு நாமே':
'நமக்கு நாமே' திட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பயணங்களை கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டங்களில் மேற்கொண்டிருந்தாலும், அவரால், எதிர்பார்த்த அளவுக்கு, தென் மாவட்டங்களில் கட்சியை துாக்கி நிறுத்த முடியவில்லை. அதேநேரம், கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, தென் மாவட்டங்களை குறிவைத்து நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள், தென் மாவட்ட மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில், சற்று எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, கருணாநிதி நம்புகிறார்.


அதனால், சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களில், கனிமொழியை முன்னிலைப்படுத்த, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேவையானால், துாத்துக்குடி அல்லது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், அவரை போட்டியிட வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழி, கடந்த ஐந்தாண்டுகளாக, தென் மாவட்டங்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில், தென் மாவட்ட வளர்ச்சிக்காக, பார்லிமென்டில் குரல் எழுப்பி வருகிறார். இதற்காக, சில போராட்டங்களையும் நடத்தி உள்ளார். துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏரியாவில், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை தத்தெடுத்து, எம்.பி.,க்கள் நிதியின் கீழ் நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்னொரு கிராமத்தை எம்.பி.,க்கள்தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தத்தெடுத்து, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். வேட்பாளராக்க முடிவு:
திருநெல்வேலி பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில், அவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இரண்டு முறை பொதுக்கூட்டம் போட்டு, அரசுக்கும், போலீசுக்கும் எதிராக குரல் எழுப்பி உள்ளார். அதேபோல, நெல்லை மாவட்டத்தில், மதுவால் பாதிக்கப்பட்ட விதவைகளை வைத்து, மது ஒழிப்பிற்காக, கருத்தரங்குகளை நடத்தி உள்ளார். இப்படி பல்வேறு போராட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தி இருக்கும் கனிமொழி, தென் மாவட்டங்களில் நிறைந்திருக்கும் நாடார் இனத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தென் மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.அனேகமாக, தென் மாவட்டங்களில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், கனிமொழியை வேட்பாளராக நிறுத்தும் திட்டமும் உள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: