வெள்ளி, 1 ஏப்ரல், 2016

கரைந்து போன கிரானைட் வழக்கு... பி.ஆர்.பி வெளியே வந்த கதை!

விகடன்.com :  ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது, சல்மான் கான் வழக்கின் மீதான தீர்ப்பு என சமீபகாலங்களில் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்த்து வரும் நிலையில், பி.ஆர்.பி வழக்கின் தீர்ப்பு  இடியாக இறங்கியுள்ளது. நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்களை போக்கும் ஓர் முயற்சியாக மாஜிஸ்திரேட் விசாரிக்கப்பட்டு, சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சொல்லப்படும் கிரானைட் குவாரி மோசடி வழக்கு, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு. மதுரை மாவட்டம், மேலூரில்தான் இந்த மோசடிகள் பெருமளவில் நடந்தது. மேலூரில் மட்டும் கிரானைட் குவாரி மோசடி தொடர்பாக பதிவான வழக்குகள் 90க்கும் அதிகம்.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர் பி.ஆர்.பழனிச்சாமி. அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கிரானைட் முறைகேடு குறித்த செய்திகளும், சகாயம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையும் கிரானைட் மோசடியின் பிரம்மாண்டத்தை கண் முன் நிறுத்தியது.

காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவானாலும்,  நீதிமன்றம் அத்தனையையும் விசாரணைக்கு ஏற்கவில்லை. மிக சொற்பமாக மூன்றே மூன்று வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம். பல்லாயிரம் கோடி மோசடி நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில்,  பி.ஆர்.பழனிச்சாமிக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவை மறுக்கப்படாத ஆதாரங்கள் என்றும் சொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பி.ஆர்.பழனிச்சாமி. இத்தனைக்கும் பின்னால் இருப்பவர்தான் நீதிபதி மகேந்திரபூபதி.
சர்வசாதாரணமாய் கிடைத்தது ஜாமீன்

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக சகாயம் அளித்த அறிக்கையின்படி,  90க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  பி.ஆர்.பி. உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 80க்கும் அதிகமான குவாரிகளில்,  அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து குவாரிகளை இயக்க முதலில் அனுமதி கோரிய போது அதை முதலில் நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால் அதன் பின்னர்தான் இந்த வழக்கு வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. முதலில் குவாரிகளை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், பின்னர் மதுரை மாவட்டம் தவிர்த்து  பிற மாவட்டங்களில் குவாரிகளை நடத்திக்கொள்ளலாம் என அனுமதி அளித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
அதோடு முடியவில்லை. மதுரையில் உள்ள 5 காவல்நிலையங்களை குறிப்பிட்டு, அந்த காவல்நிலையங்களில் எந்த வழக்கிலும் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  அதோடு சரி,  எல்லாமே மாறின. இந்த வழக்கில் கைதானவர்கள் சர்வ சாதாரணமாய் ஜாமீனில் வெளிவந்தனர். எந்த நெருக்கடியும் நீதிமன்ற தரப்பில் இல்லை. அதை எதிர்த்து அரசு தரப்பு வாதிடவும் இல்லை. ஆந்திராவில் நிலக்கரி, சுரங்க ஊழலில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் ஜாமீன் கிடைக்காமல் சிறைவாசம் அனுபவித்து வந்த போது, பி.ஆர்.பி. வகையறாக்களுக்கு சர்வ சாதாரணமாய் ஜாமீன் கிடைத்திருந்தது.

உயர் நீதிமன்றம் கண்டித்தும் கேட்கவில்லை


மறுபுறம் மேலூர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆரம்பத்தில் இருந்தே இதில் அரசு தரப்பு எதிராக, அதாவது பி.ஆர்.பி.க்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார் என நீதிபதி மகேந்திர பூபதி மீது புகார் எழுந்தது. எடுத்துக் கொள்ளப்பட்ட 3 வழக்குகளிலும்,  குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த பொதுச் சொத்துக்களைச் சேதம் விளைவிப்பதைத் தடுத்தல், வெடிபொருள் சட்டம் போன்ற குற்றச்சாட்டுக்கள் விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மூன்றாவது, போலீஸ் சமர்ப்பித்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. அதனால், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டதை தொடர்ந்து, முகாந்திரம் உள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால் அதன் பிறகும் கூட அதை கண்டுகொள்ளவில்லை மேலூர் நீதிபதி மகேந்திரபூபதி. இதன் உச்சம்தான் தமிழகத்தையே மிரளவைத்த கிரானைட் வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்தது.

4 ஆண்டுகளில் கரைந்து போன வழக்கு

2012ம் ஆண்டு கிரானைட் குவாரிகளில் ரெய்டு, ஏராளமான வழக்குகள் பதிவு, வங்கி கணக்கு முடக்கம் என பிரம்மாண்டமாய், விஸ்வரூபமாய் இருந்த கிரானைட் வழக்கு, 4 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், இப்போது காணாமல் போய் விட்டது.

பி.ஆர்.பி. கைதான போது மதுரை பகுதியில் ஒரு பேச்சு எழுந்தது. "பி.ஆர்.பி. மீண்டும் வருவார். ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. இவர்கள் நிரூபிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் பி.ஆர்.பி. இல்லாமல் எதுவும் இயங்காது" என ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிரூபணமாகியுள்ளது.
கிரானைட் ஆலைகளை இயக்க உச்ச நீதிமன்றத்திலேயே முடியாது என சொல்லப்பட்ட நிலையில், மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, அவசர கதியில் விசாரித்து, மின்னல் வேகத்தில் ஜாமீன் வழங்கியது துவங்கி இப்போது பி.ஆர்.பி. விடுவிக்கப்பட்டது வரை இந்த வழக்கில் ஏராளமான மர்மங்கள்.

சல்மான்கான், லாலு, ஜெயலலிதா வரிசையில்...

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பிணை வாங்கி சந்தோஷமாய் வெளியே வருகிறார் லாலு பிரசாத் யாதவ். குடிபோதையில் கார் ஓட்டி, நடைபாதையில் படுத்து தூங்கிய ஏழைகள் மீது ஏற்றி ஒருவரை கொன்ற சல்மான் கான், 13 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து தண்டனை பெற்ற பின்னரும், அன்றே அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. 19 ஆண்டுகள் மிக மிக மெதுவாய் வழக்கை நடத்தி, அதில் தண்டனை உறுதியான பின்னர், ஓரிரு மாதங்களில் மிக மிக வேகமாக வழக்கில் இருந்து விடுதலையும் பெற்று,  தண்டனை கிடைத்த பின்னரும், மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தபோதும் விடுவிக்கப்படுகிறார்கள் குற்றவாளிகள்.

அந்த வரிசையில் இப்போது பி.ஆர்.பழனிச்சாமியும் சேர்ந்துள்ளார். ஏதாவது பிரச்னை என்றால் நீதி கேட்க நீதிமன்றம் போகலாம். அந்த நீதிமன்றமே பிரச்னைனா?

-  ச.ஜெ.ரவி

கருத்துகள் இல்லை: