
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக சமத்துவ படை அமைப்புக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 12 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக சமத்துவ படை அமைப்பின் தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சமூக சமத்துவப்படைக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சிக்கு 1 தொகுதி, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி, தற்போது சமூக சமத்துவ படைக்கு ஒரு தொகுதி என மொத்தம் இதுவரை 12 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தற்போது வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக