குஜராத்தில் அறிவியல் பாடம் : மகாபாரதத்தில் ஸ்டெம் செல்கள், வேதங்களில் கார்கள்!
குஜராத்தின் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்
பள்ளி மாணவர்களுக்கான புதிய கட்டாய பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இந்திய
கலாச்சாரம், வரலாறு, புவியியல் பற்றிய தகவல்களை கற்பிப்பதோடு நிற்கப்
போவதில்லை. அறிவியல் பற்றி குறிப்பாக முக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றி
தனது சொந்த கண்ணோட்டத்தையும் அவை கற்றுக் கொடுக்கப் போகின்றன.
‘அறிவியல்
உண்மை’கள் அடங்கிய தேஜோமய் பாரத் புத்தகத்தை எழுதிய, ஆர்.எஸ்.எஸ்சின்
கல்விப் பிரிவான வித்யா பாரதி நிறுவனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்
தீனாநாத் பத்ரா.
“…ஸ்டெம் செல் ஆராய்ச்சியை தாங்கள்தான் கண்டு பிடித்ததாக அமெரிக்கா
சொல்லிக் கொள்கிறது. ஆனால், இந்தியாவின் டாக்டர் பால்கிருஷ்ண கன்பத்
மாதாபூர்கர் உடல் உறுப்புகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான வடிவுரிமையை
ஏற்கனவே பெற்றிருக்கிறார். இந்த ஆராய்ச்சி புதியது இல்லை, டாக்டர்
மாதாபூர்கர் இதை மகாபாரதத்திலிருந்துதான்கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். .
‘குந்திக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான ஒரு மகன் பிறந்தான். இரண்டு ஆண்டுகளாக கருத்தரிக்க முடியாமல் இருந்த காந்தாரி இதைக் கேள்விப்பட்டவுடன் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவரது வயிற்றிலிருந்து ஒரு சதைப் பிண்டம் வெளியில் வந்தது. ரிஷி வியாசனை வரவழைத்தனர். அவர் சதைப் பிண்டத்தை பார்த்து விட்டு அதை ஒரு குளிர்ச்சியான குடத்தில், சில மூலிகைகளுடன் போட்டு வைத்தார். பின் அந்த சதைப்பிண்டத்தை 100 துண்டுகளாக வெட்டி அவற்றை நெய் நிரம்பிய 100 குடங்களில் தனித்தனியாக போட்டு வைத்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து 100 கவுரவர்கள் பிறந்தனர்.’
மகாபாரதத்தில் இதைப் படித்ததும், மாதாபுர்கர் ஸ்டெம் செல் தன்னுடைய கண்டுபிடிப்பு இல்லை என்று உணர்ந்தார். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” தேஜோமய் பாரத் பக்கம் 92-93.
“தொலைக்காட்சியை 1926-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் லோகி பயர்ட் என்ற பாதிரியார் கண்டுபிடித்தார் என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால், இதை விட புராதனமான தூர்தர்சனுக்கு நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறோம். இந்திய ரிஷிகள் தமது யோகக் கலையின் மூலம் திவ்ய திருஷ்டியை பெற்றிருக்கிறார்கள். தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு இதில் ஆரம்பித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மகாபாரதத்தில் அஸ்தினாபுர அரண்மனைக்குள் உட்கார்ந்து கொண்டு தனது திவ்ய சக்தியை பயன்படுத்தி சஞ்சயன் குருட்டு திருதராஷ்டிரனுக்கு குருட்சேத்திரத்தில் நடக்கும் மகாபாரத போர் பற்றி நேரடி வருணனை அளித்திருக்கிறார்.” — பக்கம் 64.
“இன்று மோட்டார் கார் என்று அறியப்படுவது வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. அது அனஷ்வா ரத் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக ஒரு ரதம் குதிரைகளால் இழுக்கப்படுகிறது. அனஷ்வா ரத் என்றால் குதிரைகளால் இழுக்கப்படாத ரதம் என்று பொருள் அல்லது யந்த்ர ரதம். அதுதான் இன்றைய மோட்டார் கார். ரிக் வேதம் இதைப் பற்றி குறிப்பிடுகிறது…” — பக்கம் 60
மேலே சொன்ன பகுதிகள்’ அடங்கிய தேஜோமய் பாரத் என்ற 125 பக்க புத்தகம் குஜராத் அரசின் அனைத்து ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டாய பாடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் வரலாறு, அறிவியல், புவியியல், மதம் மற்றும் பிற “அடிப்படைகள்” பற்றிய “உண்மைகளை” சொல்ல முயற்சிக்கிறது.
தேஜோமய் பாரத் புத்தகம், ஆர்.எஸ்.எஸ்சின் கல்விப் பிரிவான வித்யா பாரதி நிறுவனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீனாநாத் பத்ராவால் எழுதப்பட்ட இன்னும் 8 புத்தகங்களுடன் வினியோகிக்கப்பட உள்ளது. குஜராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு குஜராத் பாடநூல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பத்ராவின் புத்தகங்கள் மாநில அரசால் கட்டாய பாடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை தாங்கி வெளியாகியுள்ளது.
புத்தகத்தில் ஆத்யாத்மிக் பாரத் (ஆன்மீக இந்தியா), அகண்ட பாரத் (பிரிக்கப்படாத இந்தியா), விக்யான்மய் பாரத் (விஞ்ஞான இந்தியா), சமர்த் பாரத் (திறமையான இந்தியா) போன்ற அத்தியாயங்கள் உள்ளன.
புத்தகத்தின் உள்ளடக்க ஆலோசகர் ஹர்ஷத் ஷா, காந்திநகர் குழந்தைகள் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர். அவர் 2006 வரை குஜராத் வித்யாபாரதியின் தலைவராக இருந்தவர். மேற்பார்வை குழுவில் வித்யா பாரதியுடன் தொடர்புடைய ருதா பர்மார் மற்றும் ரேகா சுதாஸ்மா ஆகியோர் உள்ளனர்.
“தேஜோமய் பாரத் நமது செறிவான கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம், தேசப் பற்று பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கிறது. மாணவர்களுக்கு பொருத்தமான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வினியோகிக்கப்பட உள்ளன. மற்றவர்களுக்கு ரூ 73 விலையில் 5,000 பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.” என்கிறார் ஹர்ஷத் ஷா.
தேஜோமய் பாரத்தின் “உண்மை”களை என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்துடன் எப்படி பொருத்துவீர்கள் என்று கேட்ட போது, அகமதாபாத் மண்டல கேந்திரீய வித்யாலயா கூட்டமைப்பின் உதவி ஆணையர் பி தேவ் குமார், “அரசின் கொள்கைகளை பின்பற்றி அமல்படுத்துவதுதான் அரசு ஊழியரான எனது கடமை. என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தில் இது வரை எந்த மாற்றமும் எங்களுக்கு சொல்லப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
(அதாவது, இந்துத்துவத்திற்கேற்ப என்.சி.ஆர்.டி அறிவியல் பாடத் திட்டங்களை மோடி அரசு மாற்றி அமைத்தால், அடிபணிந்து மாணவர்களுக்கு அதை போதிப்பதுதான் தனது கடமை என்கிறார் அவர்)
நமது நாட்டை இந்தியா என்று அழைப்பதற்கு தேஜோமய் பாரத் எதிர்ப்பு தெரிவிக்கிறது. “நமது அன்புக்குரிய பாரத பூமியை சூத்திர பெயரான ‘இந்தியா’ என்று அழைத்து நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது. நமது நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பிரிட்டிஷாருக்கு என்ன உரிமை இருக்கிறது. நாம் இந்த சதித்திட்டத்துக்கு பலியாகி நமது நாட்டின் ஆன்மாவை மறந்து விடக் கூடாது” (பக்கம் 53)
“மதத்துக்காக உயிரை விடுவது சிறந்தது. அன்னிய மதம் துன்பத்தின் ஊற்றுக் கண்” என்று இந்தப் புத்தகம் பக்கம் 118-ல் குறிப்பிடுகிறது. “குரு கோவிந்த் சிங்குக்கு அஜித் சிங், ஜூசார் சிங், ஜோராவர் சிங், ஃபதே சிங் என்று நான்கு மகன்கள். அவர்களை மதம் மாற்றுவதற்காக அரசரின் ஆட்கள் பெரிதும் முயற்சித்தார்கள். ஆனால், “எங்கள் தாத்தா குரு தேஜ்பகதூர் இந்து மதத்தை காப்பதற்காக உயிர் தியாகம் செய்தார். அது போல நாங்களும் எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர எங்கள் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று கூறி விட்டார்கள்.
சரி, அவர்களே சொல்லிவிட்டார்கள், வேசிமகன் என்றழைக்கப்படும் சூத்திரர்களுக்குத்தான் இந்தியா சொந்தம், பார்ப்பன பனியா ‘மேல்’ சாதியினருக்குத்தான் பாரதம் சொந்தம்! இனி பாரதத்திற்கு பாடை கட்டும் வேலையை பார்த்தால்தான் உழைக்கும் மக்களின் இந்தியாவை மீட்க முடியும். இல்லையேல் மீண்டும் மனு தருமம், வருணாசிரம கொடுமைகள், கல்வி-அறிவை மறுக்கும் பார்ப்பனிய குருகுல மடங்கள், பெண்களின் கால்களுக்கு சங்கிலி போடும் ஆணாதிக்க கொடுமைகள் அத்தனையும் முழு வீச்சில் அமல்படுத்தப்படும்.
நன்றி Science lesson from Gujarat: Stem cells in Mahabharata, cars in Veda
இந்த தருணத்தில் அதாவது 2014-ம் ஆண்டில் நடக்கும் மோடி ஆட்சி எப்படி இருக்குமென்று 1993-ம் ஆண்டே கணித்த, “நாமக்கட்டி ஆளப் போகுது...” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடலை கேட்டு மகிழுங்கள்.
பாரதீய ஜனதா… எப்பேற்பட்ட கட்சி தெரியுமா. பார்ப்பனர்கள், பணக்கார சேட்டுக்கள், பழைய மன்னர்கள் இவனுங்க நடத்துற கட்சி.
அத்வானியும், அசோக் சிங்காலும், முரளி மனோகர் ஜோஷியும், பஜாஜும், டால்மியாவும், விஜயராஜே சிந்தியாவும் எல்லாம் மேப்படி ஆளுங்கதான்.
இவனுங்க ஆட்சிக்கு வந்தா கேடு காலம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. உழைப்பாளி மக்கள் எல்லாருக்கும் ஊத்திக் கொழைச்சி ஒரே நாமமா போட்டுருவானுங்க. சாமானியப்பட்ட நாமம் இல்ல, ராஆஆஆம நாமம்.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு
நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
ஏ படிச்சவனுக்கு பட்ட நாமம்,
பாட்டாளிக்கு குட்ட நாமம்
விவசாயிக்கு வட்ட நாமம்
நம்ம தேசத்துக்கே இரட்டை நாமம்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
விடியகாலம் எழுந்திருச்சி, வேகமாக குளிச்சு முழுவி
மாட்டுக்கெல்லாம் நாமம் போட்டு, மறக்காம சாணம் போட்டு
ஏரு பூட்டி வயலில் இறங்கி, வேர்வை சிந்த பாடுபட்டு
அந்தி சாயும் நேரம் பார்த்து ஆண்டை வூடு திரும்பி வந்து
வுழுந்து அவனை கும்பிட்டாக்க
ரெண்டு உண்டக்கட்டி தந்திடுவான்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பறையடிக்கிற சாதிக்கு பட்டம் படிப்பெல்லாம் எதுக்கு
துணி வெளுக்குற சாதிக்கு தொழில் கல்விதான் எதுக்கு
அப்பன் தொழிலை செய்யிறதுக்கு இட ஒதுக்கீடு எதுக்கு
மண்டலுக்கு பண்டல் கட்டு, மனுநீதியை தூசி தட்டு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
சங்கம் வைக்க வேணுமா, இந்தா புடி சார்ஜ்ஷீட்
ஏ இன்குலாபு சிந்தாபாத், இன்கிரிமென்டு கட்டு
போனசு வேணுமா போயிட்டு வா டிஸ்மிஸ்ஸூ
அட கோரிக்கையை சொல்லணும்னா வேற ஒரு ரூட்டு இருக்கு
ஒரு கொட்டாய கட்டிகிட்டு பஜகோவிந்தம் பாடு.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
கடனப்பத்தி கவலை விடு, கடவுள் மேல பாரத்தை போடு
ஆலயங்கள் இருக்கும் போது ஆலைகள் எதுக்கு விடு
அகண்ட பாரதத்திலே அமெரிக்காவை இழுத்துப் போடு
அந்த அமெரிக்கா காரனையும் இந்துவாக மாத்திப்புடு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
அம்மான்னு சொல்லாதே, மாதாஜின்னு சொல்லு
அப்பான்னு சொல்லாதே, பிதாஜின்னு சொல்லு
வணக்கத்தை தள்ளு, நமஸ்தேஜி சொல்லு
ஆழக் குழி தோண்டி தமிழ அதில் தள்ளு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பண்டாரம் பரதேசிங்கதான் பள்ளிக்கூட வாத்தியாரு
பத்து அவதாரங்கதான் பாரதத்தின் வரலாறு
பூகோள பாடத்திலே சிவன் தலையில கங்கை ஆறு
அப்ப பாடம் நடத்துறது யாரு
வரலாறு சொல்லித் தர வாரியாரு வருவாரு
விஞ்ஞான தமிழ் வாத்தியாரெல்லாம் விட்டாப் போதும்னு ஓடுவாரு
அத்தனைக்கும் அத்தாரிட்டி காஞ்சி சங்கராச்சாரியாரு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
– மக்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டில் வெளியிட்ட “அசுர கானம்” என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ள பாடல்.
60 நிமிட பாடல் ஒலி குறுந்தகடு பார்ப்பனிய இந்து மதவெறியை எதிர்ப்போரின் ஆயுதம் அசுரகானம்
குறுந்தகட்டின் விலை ரூ 30
தொடர்புக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக