செவ்வாய், 29 மார்ச், 2016

சங்கராச்சாரி மீது கொலை முயற்சி வழக்கு!...காஞ்சி ஜெயேந்திரரிடம் குற்றச்சாட்டு பதிவு; கண்ணீரோடு பதில் அளித்தார்

சென்னை, ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெயேந்திரரிடம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கண்ணீரோடு ஜெயேந்திரர் பதில் அளித்தார். அரிவாள் வெட்டு : சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன். இவரை, கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி மர்மநபர்கள் இருவர் வீடு புகுந்து ராதாகிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர்.


இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காஞ்சீபுரம் தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சோமசேகர கனபாடிகள்

போலீசார் நடத்திய விசாரணையில், சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிராகவும், அவர் மீது குற்றம் சுமத்தியும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு மொட்டை கடிதங்கள் பல சென்றன. இந்த கடிதங்களை ராதாகிருஷ்ணன் அனுப்புவதாக நினைத்து அவர் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த், கண்ணன், குமார், லட்சுமணன், பூமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

ஜெயேந்திரர் ஆஜர்

இந்த வழக்கு விசாரணையின்போது, கதிரவன், அப்பு ஆகியோர் இறந்து விட்டனர். ஜெயேந்திரர் உள்பட 9 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் 55 பேர் சாட்சியம் அளித்தார்கள். அதேபோல, 220 சாட்சி ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணைகள் முடிந்த நிலையில், போலீஸ் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காலை சுமார் 11.15 மணியளவில் ஜெயேந்திரர் தன் உதவியாளர்களுடன் கோர்ட்டுக்குள் வந்தார்.

கண்ணீர் ததும்ப...

நீதிபதிக்கு முன்பு போடப்பட்டிருந்த நாற்காலியில் ஜெயேந்திரர் உட்கார வைக்கப்பட்டார். பின்னர் அவரிடம், இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், 88 கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது, சரியானது அல்ல, பொய் என்று மட்டும் ஜெயேந்திரர் பதிலளித்தார். அந்த பதிலை நீதிபதி ராஜமாணிக்கம் பதிவு செய்துகொண்டார்.

ராதாகிருஷ்ணனை இருவர் அரிவாளால் வெட்டியது குறித்து கேள்வி கேட்டபோது, அதற்கு கண்களில் கண்ணீர் ததும்ப குற்றச்சாட்டை மறுத்து ஜெயேந்திரர் பதிலளித்தார்.

காஞ்சி சங்கர மடத்தின் மகாபெரியவருக்கு 100-வது பிறந்தநாளை முன்னிட்டு கனகாபிஷேகம் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கும், இந்த கனகாபிஷேகத்தை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசுவதற்கு திட்டமிடப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு மட்டும் ‘ஆமாம்’ என்று பதிலளித்தார்.

தள்ளுமுள்ளு

விசாரணை முடிந்த பின்னர், அவர் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அவரை பார்க்க கோர்ட்டு வளாகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். ஊடகத்தினரும் அவரிடம் பேட்டி எடுக்க முயற்சித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு நடந்தது. ஆனால் யாரிடமும் பேசாமல் ஜெயேந்திரர் தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

ஜெயேந்திரரிடம் விசாரணை முடிந்த பின்னர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயராஜ், குற்றம் சுமத்தப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல் வெங்கட்ராமன், வக்கீல் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.  dailythanthi.in

கருத்துகள் இல்லை: