வினவு.com :நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க !
மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம் – பாகம் 2
விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் க. இளமங்களம் தப்பாட்ட குழுவினரின்
இசை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தோழர் கணேசன் உரை
தமிழகத்தில் இன்று ஒரு திருவிழா களைகட்டத் தொடங்கி இருப்பதாக அனைத்துப்
பத்திரிகைகளும் எழுதுகின்றன. அதுதான் ’தேர்தல் திருவிழா,
ஜனநாயகத்திருவிழா’. இது யாருக்கானது? தமிழக மக்களுக்கானதா? ஒரு ஊரில் சாவு
நடந்துவிட்டால் அந்த ஊரில் எவ்வளவு முக்கியமான விழா என்றாலும் அந்த சாவை
எடுத்துவிட்டுத்தான் மறு வேலையைப் பற்றி யோசிப்பார்கள். டாஸ்மாக்
சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல்
திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானது இல்லையா?சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் குடிநோயாளிகளாக உள்ளனர். நடுத்தர வயது ஆண்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளும் குடித்து சீரழிகிறார்கள் என்றால் அதற்கு காரணம் டாஸ்மாக். ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் ஏவப்பட்டுள்ள அணு ஆயுதம்தான் டாஸ்மாக். இந்த மிக முக்கியப் பிரச்சனையைப் பற்றி பேசாமல் தேர்தல் ஒரு கேடா?
டாஸ்மாக் சாராயத்தால் குடிநோயாளிகளான தமிழக மக்கள் சிந்திக்க முடியாத அடிமைகளாகி வருகிறார்கள். இளம் வயதில் விதவையான பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருவரையும் இழந்து அனாதையான குழந்தைகள் என ஒரு சமூகமே சீரழிவதற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூடாமல் எப்படி நேர்மையான நியாயமான தேர்தலை நடத்த முடியும்? ?
நியாயமான தேர்தல் என்று இவர்கள் சொல்வது இல்லாத கடவுளை இருப்பதாக காட்ட முயற்சிப்பது போன்றது. கடந்த முறை இந்த ஆணையம் நடத்தி வைத்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருடர்கள் ஐந்தாண்டுகள் நாட்டை கொள்ளையடித்தார்களே அப்போது இந்த தேர்தல் ஆணையம் எங்கே போயிருந்தது.
எந்தக் கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை. அனைத்து வேட்பாளர்களும் அயோக்கியர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மக்களுக்குத் தெரிந்த இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, அதே மக்களிடம் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நியாயமான தேர்தல் நடைபெற ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறது.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு கேமரா என்று அராஜகம் செய்வது தேர்தல் ஆணையம்தான். இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களும், சிறு வணிகர்களும்தான். கல்யாணம் உள்ளிட்ட தங்களுடைய நல்ல காரியங்களுக்கு மக்கள் எடுத்துச் செல்லும் பணத்தையும், சிறு வணிகர்கள் வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லும் பணத்தையும் பறிப்பதைத்தவிர தேர்தல் ஆணையம் வேறு என்ன செய்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டுமென்றால் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வைத்துள்ள பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ள இடத்தில் போய் பறிக்க வேண்டும். இதற்கு துப்பில்லை. ஜனநாயகமான தேர்தல் என்று சொல்லும் தேர்தல் ஆணையம்தான் உண்மையில் ஜனநாயகத்தின் விரோதியாக உள்ளது. தேர்தல் நடத்தை விதியைக் காரணம் காட்டி சாதாரண மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கிறது.
உழைக்கும் மக்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடந்து வருகிறதே அதனால் நமக்கு என்ன பயன். இந்த தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். தேர்தலில் ஓட்டுப்போட்டால் கல்விக் கட்டணத்தை குறைக்க முடியுமா? விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? அல்லது மத்திய மாநில அரசுகள் இந்த நாட்டை கூறுபோட்டு விற்பதைத்தான் தடுக்க முடியுமா?
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை அக்கல்லூரி நிர்வாகம் பகிரங்கமாக படுகொலை செய்தது. இதில் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு கான்ஸ்டபிள் முதல் கலெக்டர் வரை, மருத்துவக் கல்லூரி முதல்வர் முதல் துணை வேந்தர் வரை அனைவரும் கூட்டுக்கிரிமினல்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. எஸ்.வி.எஸ் பிரச்சனையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கல்வித்துறையுமே இப்படி கிரிமினல் துறையாகத்தான் உள்ளது. கல்வித்துறை மட்டுமல்ல, ஆற்று மணற்கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடுவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாய நிலங்களை பறித்து விவசாயிகளை பட்டினிப் போட்டுக்கொள்வது அனைத்தும் இந்த அரசுதான். இப்படி நாட்டிலுள்ள எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல முடியாதது மட்டுமல்ல, இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமே இந்த அரசுதான்.
இதையெல்லாம் எதிர்த்துக்கேட்டால் தேசத்துரோகி. அதுதான் இன்று டெல்லி ஜே.என்.யு வில் நடக்கிறது. பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகள் யாரை கை காட்டுகிறார்களோ அவர்கள் எல்லாம் தேசதுரோகிகள்தான். ஜே.என்.யு விற்கும் நமக்கும் என்ன சம்மந்தம், டாஸ்மாக்குக்கும், பார்ப்பன பாசிசத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்காதீர்கள். டாஸ்மாக்கை எதிர்த்தால் தமிழ்நாட்டில் தேசத்துரோகி. டாஸ்மாக்கிற்கு எதிராகப் பாடிய தோழர் கோவன் மீது தேசத்துரோக வழக்கு. பார்ப்பனியத்தை எதிர்த்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தேசதுரோகி.
பார்ப்பனிய எதிர்ப்புக் கோட்டையான பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தை தேசவிரோத அமைப்பு என்று சொல்லி தடைசெய்தார்கள். அதை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் நாடெங்கும் போராட்டம் நடத்தியதால் வேறு வழியின்றி பின்வாங்கினார்கள். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அத்தகைய நிலை இல்லாததால் தலித் மாணவர் ரோகித் வெமுலாவை தூக்கிலேற்றினார்கள். இன்று ஜே.என்.யு வில் பார்ப்பன பாசிஸ்டுகள் வாலாட்டுகிறார்கள்.
தேசபக்தி பேசும் ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி யின் உண்மை முகம் என்ன? முஸ்லீம்கள் என்றாலே தேசவிரோதிகள், பயங்கரவாதிகள், நாட்டை துண்டாடி விடுவார்கள், கிருத்துவர்கள் இந்துக்களை எல்லாம் மதம் மாற்றி விடுவார்கள் என்று பீதியூட்டுகிறார்களே, இவர்கள் யோக்கியதை என்ன? குண்டு வைப்புகளில், மதக்கலவரங்களை தூண்டி படுகொலைகள் நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் யை விஞ்சியர்கள் நாட்டில் உண்டா? தலித்துக்கள், பெண்கள் ஆகியோர்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ். உழைக்கும் மக்களை சாதிகளாக, மதங்களாக கூறுபோட்டு கொல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பிதான். உடுமலை சங்கர் வரை நடக்கும் ஆதிக்க சாதிப் படுகொலைகளின் மூலவேரே இந்த பார்ப்பனியம்தான். ‘முஸ்லீம்கள், கிருத்தவர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள். இந்திதான் தேசிய மொழி, நாம் அனைவரும் இந்தியர்கள்’ என்று இவர்கள் கட்டியமைக்க விரும்பும் இந்து தேசியத்தை இந்திய தேசம் என்று திணிக்கிறார்கள். இதை முறியடிக்க வேண்டும்.
ஒரு பக்கம், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக நாடே மறுகாலனியாக்கப்படுகிறது. உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை கூட்டிக்கொடுக்க அடிமை சேவை செய்யும் பார்ப்பன பாசிஸ்டுகள், மறுப்பக்கம் நாட்டை பார்ப்பனியமயமாக்கும் தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அதற்கு தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களை தேசத்துரோகியாக்கி விடுவார்கள். உயர்கல்வி நிறுவன மாணவர்கள் பார்ப்பனியத்தையும், நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதையும் எதிர்க்கிறார்கள். அதனால்தான் அக்கல்வி நிறுவனங்களை தேசவிரோதிகளின் கூடாரம் என்கிறார்கள். ஏ.பி.வி.பி நச்சுப் பாம்பை உயர்க்கல்வி நிறுவனங்களில் நுழைத்து பார்ப்பனியமயமாக்க துடிக்கிறார்கள். இதையெல்லாம் மூடிமறைக்கத்தான் தேசபக்தி வேடம் போடுகிறார்கள். ஆனால் உணமையில் இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பார்ப்பன கும்பல்தான் தேசதுரோக கூட்டம்.
இறுதியாக, தமிழ்சமூகத்தை டாஸ்மாக் போதை சீரழிக்கிறது என்றால், ஒட்டுமொத்த நாட்டையும் பார்ப்பனிய தேசபக்தி போதை அபாயமாக சூழ்ந்திருக்கிறது. டாஸ்மாக் ஆதரவுக் கட்சிகளும் தனித்துவிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனிய அரசியல் படையான பி.ஜே.பியும் தனித்து விடப்பட்டிருகிறது. இவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
ஜனநாயகத்தின் திருவிழா என்று கொண்டாடப்படும் இந்தத் தேர்தல் நாம் அன்றாடம் அனுபவிக்கும் டாஸ்மாக் பிரச்சனை, பார்ப்பனிய கொடுமை உள்ளிட்ட எந்த பிரச்சனையாவது தீர்க்கப் போகிறதா? இல்லை. இது நமக்கான தேர்தலும் அல்ல, இது ஜனநாயகமும் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நடப்பது பணநாயகம். நம்முடைய வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத இந்த தேர்தல் மாயாஜாலத்திற்கு நாம் ஏன் மயங்க வேண்டும்? நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போன,திவாலாகி, மக்களுக்கு எதிராக மாறிப்போன இந்த அரசுக்கட்டமைப்பை தகர்த்தெரிவதும் மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவுவதும்தான் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு என்கிறது மக்கள் அதிகாரம். அந்த மக்கள் அதிகாரத்தில் பங்கேற்போம்”
தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக