வெள்ளி, 23 அக்டோபர், 2015

மனிதக்கறி தின்பது தேசப்பற்று மாட்டுக்கறி உண்பது தேச துரோகமா?

உலக மதங்களிலேயே, மாடுகளை யாகங்களில் எப்படிப் பலியிடுவது? அதை எப்படித் தனித் தனியாகக் கறியாகப் பிரிப்பது, பிரித்த கறிகளை யார் யாருக்கு எந்த எந்தப் பகுதிகளைப் பங்குப்போட்டுத் தருவது’ – ‘அதை எப்படி வேக வைப்பது?’ என்று மாட்டுக்கறிக்கு ‘ரெசிபி’ போட்ட ஒரே மதம் வேதமதம் தான்.
தாத்ரியில் அக்லக் என்ன செய்தார், பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்.’ – என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான பான்ச்ஜன்யா.
அக்லக் பசுவை அல்ல, எருமையைக் கூடக் கொல்லவில்லை. அவரிடம் எந்த மாட்டிறைச்சியும் இல்லை. வெறும் வதந்தியினாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்ற உண்மை விசாரணையில் வந்திருக்கிறது.
இது ஊரறிந்த உண்மை மட்டுமல்ல, உலகறிந்த உண்மை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்க்கு மட்டுமல்ல, இந்து அமைப்புகளுக்கே எப்போதும் உண்மைகள் சுத்தமாகப் பிடிப்பதில்லை. காரணம், பாசிஸ்டுகளின் அடிப்படைத் தத்துவமே பொய். ஹிட்லரிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வரை அவர்களின் பொது மொழியே பொய்தான்.

‘அக்லக்’ என்ற பெயரை ஒட்டுமொத்த முஸ்லீம்களின் குறியீடாகப் பயன்படுத்தி, ‘பசுவதை இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்’ என்று நீட்டி முழங்குகிறது அது.
ஆனால், அதே கட்டுரையில், ‘பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று வேதங்களே சொல்கின்றன.’ என்று ரத்தக் கொதிப்போடு இன்னொரு பொய்யை சொல்கிறது.
வேதங்கள் அப்படிச் சொல்லியிருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.
‘வேதங்களுக்குக் காலமில்லை, அது மிகத் தொன்மையானது. உலகத்தில் அது தான் முதலில் தோன்றியது’ என்றும், ’வேதங்களின் காலம் 5 ஆயிரம் ஆண்டுகள்’ என்பதைக் கூட மறுக்கின்றன இந்து அமைப்புகள். 2 ஆயிரம் ஆண்டுகள் கிறித்துவத்திற்கு, 1500 ஆண்டுகள் தான் இஸ்லாத்திற்கு; இவற்றின் இந்திய வருகை அதற்கும் பிந்தைய காலம்.
உலகில் இந்து மதத்தை அல்லது வேத மதத்தைத் தவிர, வேறு மதங்களே இல்லாத காலத்தில் அதாவது வேத காலத்தில் பசுக்களைத் தின்றது யார்?‘பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும்’ என்று வேதம் யாரை சொல்கிறது?
‘கொலைக்காரர்கள் தங்களை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள்’ என்பது போல், ஆர்.எஸ்.எஸ். பான்ச்ஜன்யாவில் இந்தக் கட்டுரையை எழுதிய வினய் கிருஷ்ணா சதுர்வேதி தன்னை அறியாமலேயே தானே அதற்குச் சாட்சியாகி இருக்கிறார்.
உலக மதங்களிலேயே, மாடுகளை யாகங்களில் எப்படிப் பலியிடுவது? அதை எப்படித் தனித் தனியாகக் கறியாகப் பிரிப்பது, பிரித்த கறிகளை யார் யாருக்கு எந்த எந்தப் பகுதிகளைப் பங்குப்போட்டுத் தருவது’ – ‘அதை எப்படி வேக வைப்பது?’ என்று மாட்டுக்கறிக்கு ‘ரெசிபி’ போட்ட ஒரே மதம் வேதமதம் தான்.
வேதத்தை உருவாக்கியவர்கள் அல்லது தன் அதிகாரத்தையும் மாட்டுக்கறி உண்பதையும் நியாயப்படுத்தியவர்கள், விவசாய வேலைக்குக்கூட மாடுகள் இல்லாமல் 3+1=4 – நான்கு வேளையும் மாட்டுக்கறி உண்பதையே வேலையாகக் கொண்டவர்களைக் கண்டித்து, விவசாயிகளின் தோழனாக எழுச்சி நாயகனாக புத்தர் உருவானார்.
புத்தர் என்கிற தலைவன், தன் அரசியலால் மாடுகளைப் பாதுகாக்காமல் இருந்திருந்தால், டைனோசர்களைப் போல் மாடுகளும் நாம் பார்க்க முடியாத உயிரனமாக மாற்றியிருப்பார்கள் வேதகாலத்து வேதியர்கள்.
வேத காலத்தில் மட்டுமல்ல, புராண காலத்திலும் மாட்டுக்கறி ஒரு பொது உணவாகத்தான் இருந்தது. ‘அவதரா புருஷன்’ ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டவர் தான் என்று வால்மீகி ராமாயணமே சொல்கிறது.
போன நூற்றாண்டில், மத மாற்றத்தைத் தடுக்கவும், இந்து சமயத்தை மீட்டுருவாக்கம் செய்யவும் வந்த சுவாமி விவேகானந்தர்; பசு இறைச்சி உண்பதை நியாயப்படுத்தியும் அதை எதிர்ப்பவர்களை மிகக் கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார்.
ராமனை விட, விவேகானந்தரை விட; ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தக் கட்டுரையை எழுதிய வினய் கிருஷ்ணா சதுர்வேதியும் அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’
‘மாட்டுக்கறிக்குத் தடை’ இது மதவாத அரசியல் மட்டுமல்ல, அப்பட்டமான ஜாதி வெறி அரசியலும் தான் என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இந்த அறிவிப்பு.
‘இன்று பசுக்களைக் கொல்லும் முஸ்லீ்ம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே.’ என்கிறது.
இந்த வரியில் அது சொல்ல மறந்தது அல்லது மறைப்பது, இன்றும் இந்தியாவில் இஸ்லாமியர்களை விட அதிகமாக மாட்டிறைச்சி உண்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்தான் என்பதை.
தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்ற முயற்சிக்கும்போது மட்டும் இந்து அமைப்புகள் ‘நீயும் இந்து நானும் இந்து’ என்று பாசம் காட்டுகின்றன.
இன்றும் இதே மாட்டிறைச்சியை உண்டதற்காக, அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள், இஸ்லாமியர்களை விட அதிகமாக ‘இந்து’ தலித் மக்கள் தான்.
சில ஆண்டுகளுக்கு முன், செத்த பசுமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக ஹரியானாவில் மூன்று இந்து தலித் இளைஞர்களைக் கொன்று அவர்களின் தோலை உரித்தார்கள் பாசக்கார இந்து அமைப்புகள்.
உண்மையில் ஆர்.எஸ்.எஸ். சின் இந்த மாடபிமானம், மாடுகள் மீது கொண்ட அன்பல்ல, மனிதர்கள் மீதான வெறுப்பு.
இந்திய இந்து சமூகத்தில் ‘நரபலி’ பொதுப் பழக்கமாக இருந்துள்ளது. இன்றும் பேராசை காரணமாக, இந்து குழந்தைகளை, மனநலம் பாதிக்கப்பட்ட இந்துக்களைக் கொன்று பலி கொடுக்கிற முறை இருந்து வருகிறது.
கிரைணைட் குவாரி பூஜையிலிருந்து, காளி பூஜை வரை இது தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளைக் கொன்று குவிக்கிற இந்தக் கொடூரத்திற்கு எதிராக இதுவரை ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ஒரு வார்த்தைக் கூடக் கண்டித்ததில்லை.
உயிர்கள் மீதான அன்பு ஒரு பொதுப் பண்பாக இருக்க வேண்டும். பசுவின் உயிர் புனிதம். மனிதர்கள் உட்பட மற்ற உயிர்கள் ஒரு பொருட்டல்ல என்பது எவ்வளவு இழிவான வன்முறை.
தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று உலகத்திற்கு நிரூபித்தார் ஜெகதீச சந்திரபோஸ் என்ற விஞ்ஞானி. அதற்கு முன்பே, தாவரங்களையும் மனிதர்களைப்போல் உயிருள்ள ஜீவனாகப் பார்த்தார் நம் வள்ளலார். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உருகினார். வள்ளலாருக்கும் வள்ளுவருக்கும் யோக்கியதை இருக்கிறது கொல்லாமை குறித்துப் பேசவதற்கு.
‘மனிதர்களைக் கொன்றாவது மாடுகளைக் காப்பற்றுங்கள்’ என்கிற கொலைவெறி கொண்டவர்களுக்கு எதைக் குறித்துக் கண்டிப்பதற்கும் உரிமையில்லை.
‘பசுக்களைக் தான் கொல்வது கூடாது’ என்கின்றன இந்து அமைப்புகள். ஆனால், அவர்கள் ஆள்கிற மாநிலங்களில் ‘மாட்டிறைச்சிக்கே தடை’ இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் ஆடு, கோழி இறைச்சிக்கும் சிவசேனா அரசு ஒரு வாரம் தடை விதித்திருந்தது.
இந்தியாவில் மாட்டிறைச்சி இஸ்லாமியர்கள் உணவு மட்டும் தான் என்று திட்டமிட்டுச் சித்தரிக்கின்றன இந்து அமைப்புகள். ‘மாட்டிறைச்சி’ தலித் மற்றும் மலைவாழ் மக்கள், கிறித்துவ மீனவர்கள், கேரளாவில் எல்லா ஜாதிக்காரர்களின் உணவும் அது.
கடின உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளர்கள் தங்களுக்கான உடல் உழைப்புக்கான சக்தியை மாட்டிறைச்சியிருந்தே பெறுகிறார்கள். உழைப்பாளர்களின் உணவு அது. அதைத் தடை செய்தால் அவர்களுக்கான சக்தியை எதிலிருந்து பெறுவார்கள்?
‘ஆட்டுக்கறி’ இன்று பணக்காரர்களின் உணவாக மாறி வருகிறது. கிலோ 500ரூபாயை தாண்டிவிட்டது. மாட்டிறைச்சிக்குப் பதில் ஆட்டிறைச்சி சாப்பிடச் சொன்னால், கூலித் தொழிலாளர்களுக்கு யார் அந்தப் பணத்தைத் தருவது?
தாய்நாட்டைப் பாதுக்காக்கிற ராணுவ வீரர்களுக்கு உடல் உறுதிக்காக மாட்டிறைச்சியைத் தந்துவிட்டு, உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டால் தேச விரோதம் என்பது எந்த வகையான தேசப்பற்று?
காசியில் மனிதக் கறி தின்கிறார்கள் அகோரிகள். அவர்களை தெய்வமாக வணங்குவதும், மாட்டுக்கறி உண்ணும் மக்களைக் கொலை செய்வதும் தான் மனிதாபிமானமா?
-தின செய்தி இதழுக்காக 19 தேதி இரவு எழுதியது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: