ஞாயிறு, 18 அக்டோபர், 2015

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல்; 2 ஆயிரம் பேர் ஓட்டுப்போடுகிறார்கள்

நடிகர் சங்க தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கிறார்கள். மோதலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சரத்குமார் அணியும், விஷால் அணியும் நேரடியாக மோதுகின்றன. சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் நிற்கிறார்கள். 24 செயற்குழு உறுப்பினர்களும் களத்தில் உள்ளனர்.< விஷால் அணியில் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் நிற்கிறார்கள். 24 செயற்குழு உறுப்பினர்களும் இவர்கள் அணியில் போட்டியிடுகிறார்கள்.


இரு அணியினரும் கடந்த ஒரு மாதமாக நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களிடம் தீவிரமாக ஓட்டு சேகரித்தனர். வெளியூர்களில் சுற்றுப்பயணம் செய்தும் ஆதரவு திரட்டினார்கள். வீடு வீடாக சென்றும் ஓட்டு கேட்டனர்.

3,139 வாக்காளர்கள்

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 3,139 பேர். இதில் வெளியூர்களில் உள்ள வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். வெளியூர்களில் இருந்து 241 பேர் நேரில் வாக்களிக்க வருகிறார்கள். சென்னையில் இருந்து 1,964 வாக்காளர்கள் நேரில் வாக்களிக்கின்றனர். மொத்தம் 2,205 பேர் நேரில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்கள் 61 பேருக்கு தனித்தனி எண்கள் தேர்தல் சின்னங்களாக ஒதுக்கப்பட்டு உள்ளன. தபால் ஓட்டுகள் உள்பட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு

பரபரப்பான சூழ்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை ஐகோர்ட்டு நியமித்து உள்ளது. அவர் தலைமையில் அதிகாரிகள் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்துள்ளனர்.

பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு உள்ளது. ஓட்டுப்போட வருபவர்களை கண்காணிக்க பள்ளி வளாகம் முழுவதும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெளியில் நடிகர்-நடிகைகளை பார்க்க திரளும் ரசிகர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வீடியோவில் பதிவு

ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுப்போட வரும் நடிகர்-நடிகைகள் தங்கள் அடையாள அட்டைகளை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அட்டையை ஏஜெண்டு மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு ஓட்டுப்போடலாம். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நடிகர்-நடிகைகளின் கார்களை நிறுத்தவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரைவர்கள் தவிர மற்றவர்கள் காரில் வர அனுமதி இல்லை.

ஓட்டு எண்ணிக்கை

மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பிறகு நேரில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களின் முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவுக்கு மேல் முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடும் dailythanthi.com

கருத்துகள் இல்லை: