வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஓ காதல் கண்மணி - அடிமை விலங்கை ஆராதிக்கும் வியாபாரம்

thamizhstudio.com  தன்னுடைய இத்தனை ஆண்டுகால திரைப்பட அனுபவத்தில் மணிரத்னம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை நேர்மையான கருத்தியலோடு எடுத்திருக்கிறாரா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது. ஒரு நேர்காணலில் தான் எதற்கு தீர்வு சொல்லமுடியாது என்று சொல்லியிருந்தார். ஆனால் மணியின் ஒவ்வொரு படத்திலும் எல்லாவற்றிற்கும் அவரால் ஒரு தீர்வை முன்வைக்க முடிகிறது. ஓ காதல் கண்மணி திரைப்படத்திலும், திருமண பந்தம்தான் சிறந்தது என்கிற கருத்தை மிக தெளிவாகவே தீர்வாக முன்வைக்கிறார். திருமணம் என்பது என்ன? இரண்டு உடல்கள் சேர்ந்துகொள்ள நான்கு பேர் முன்னிலையில் நடக்கும் ஒரு சம்பிரதாயம். ஆனால் இந்த திருமணம் என்கிற சம்பிரதாயத்தின் பின்னணியில் மோசமான அரசியல், பெண்ணின் மீது கட்டவிழ்த்துப்படும் வன்முறை, அடிமைத்தனம் போன்ற விரும்பத்தாகத நிகழ்வுகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பெற்றோரிடம் பணமில்லாத காரணத்தால் எத்தனை பெண்கள், இந்த திருமண பந்தத்தில் நுழைய முடியாமல் பரிதவித்திருக்கிறார்கள் என்பதை இந்த தமிழ் சமூகம் நன்கறியும். என்றாலும், மீண்டும் மீண்டும் திருமணம் என்கிற மிக மோசமான அடிமை சாசனத்தை ஆதரித்து அல்லது அதன் கட்டமைப்பு குலையாமல் பார்த்துக் கொள்வதைத்தான் இந்த சமூகம் விரும்புகிறது. அப்போதுதான் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும், சாதி, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட எல்லா மோசமான விசயங்களும் போற்றிக்காக்கப்படும்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இனைந்து வாழ ஆசைப்பட்டால், அதுவும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இணைந்திருக்க ஆசைப்பட்டால் அதனை இந்த சமூகம் அங்கிகரிக்க விரும்புவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம், திருமணம் என்கிற பந்தம் இருவரையும் எப்போதும் இணைத்து வைத்திருக்கும் என்பதுதான். ஓ காதம் கண்மணி திரைப்படத்தில் கூட பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் இணையைப் பார்த்து பொறாமைப்படும் கதாநாயாகி நீயும் என்னை இப்படி பார்த்துக்கொள்வாயா என்று கதாநாயகனிடம் கேட்கிறாள். இப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இருவரும் வெவ்வேறு நாடுகளில் தங்கள் பணியை முடித்துக்கொண்டு, மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும்போது இதே பந்தம் தொடர வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள். அதற்கு சரியான தீர்வு திருமணம் செய்துக்கொள்வதுதான் என்கிற முரட்டுத் தீர்வை மணிரத்னம் முன்வைக்கிறார். திருமணம் செய்துக்கொன்டால்தான், முதுமையில் ஒரு ஆண் பெண்ணை நல்லபடியாக பார்த்துக்கொள்ள முடியுமா? திருமணம் செய்துக்கொண்டால், வெவ்வேறு நாடுகளில் வாழும் ஆணும், பெண்ணும் வேறு துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள மாட்டார்களா? திருமணம் என்பது வெறும் வார்த்தைதானே? அதன் பின்னணியில் இருப்பது நம்பிக்கைதானே. அதே நம்பிக்கையை ஏன் திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழும்போது ஒருவர் மீது ஒருவர் வைக்க முடியாது. குடும்பம் என்பதும் திருமணம் என்பதும் மிக மோசமான கட்டமைப்பு. புரிந்துணர்வு இல்லாமல், இந்த கட்டமைப்பை பேணிக் காக்க வேண்டும் என்று கலாச்சாரக் காவலர்கள் நினைப்பதில் அர்த்தம் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளி நினைப்பதில் என்ன அர்த்தம் இருந்துவிட முடியும்?
தவிர இந்த படத்தில் எங்கே காதல் இருக்கிறது என்பதை கண்டுணர்ந்த நண்பர்கள் கூறலாம். படம் முழுக்கவே காமமும், உடல்சார்ந்த போதையும் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் கூட இருவருக்குமான காதல் மலரும் இடத்தை பார்வையாளன் கண்டுணர முடியாது. இளைஞர்களை மிக மோசமாக காமப் போதையை காட்டி, கொஞ்ச நேரம் கிளு கிளுப்பாக உணரவைத்து அதன் மூலம் ஒரு வெற்றியை பெற்றுவிடுவது எளிதானதுதான். அதைத்தான் மணிரத்னம் இந்த படத்தில் செய்திருக்கிறார். காதல் படம்தான் எடுக்க வேண்டும், அதில்தான் நம்முடைய திறமையைக் காட்ட முடியும் என்பது மணிரத்னத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. எனில், காதல் என்றால், ஒரு ஆணும் பெண்ணும் செய்வதுதானா? உலகில் எத்தனை விதமான காதல் இருக்கிறது, ஆண்-ஆண், பெண்-பெண், மாற்றுத் திறநாளிகள், திருநங்கைகள், சில பல பிறவி நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் இடையே எழும் காதல் என காதலிலும் பல்வேறு கோணங்கள் இருக்கத்தானே செய்கிறது. மணிரத்னத்திற்கு தெரிந்தது எல்லாம், காதலின் மூலம் எழும் காமத்தை பிரதானப்படுத்தி, அதன் மூலம் காசு சம்பாதிப்பதுதான். இந்த படத்தில் லீலா சாம்சன் நடித்திருப்பது ஆறுதலை கொடுத்தாலும், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னத்தை பார்த்து அவர் பேசிய விதம் ஆயாசத்தையே உண்டுபண்ணுகிறது. லீலா சாம்சன் உங்களுக்கும் மணி சார் தானா?
மிக முக்கியமாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வாழ்பவர்களிடம் காமம் மட்டுமே இருக்கிறது, திருமணம் என்கிற பந்தம்தான் ஆண்-பெண் இடையே ஒரு பிணைப்பை உருவாக்கி, ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுக்கும் பண்பை வளர்க்கிறது என்பதுதான் படத்தின் அடிநாதமாக அல்லது மைய இழையாக இருக்கும் சரடு. ஒரு மஞ்சள் கயிறுதான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவை, பிணைப்பை அர்த்தப்படுத்துகிறதா? தாலிக்கட்டாமல், உறவினர்களை, நண்பர்களை அழைத்து திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்பவர்கள் காமத்திற்காக மட்டுமே அத்தகைய உறவை விரும்புகிறார்களா? எத்தனை மோசமான பொதுப்புத்தி அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான நுண்ணரசியல் இதில் இருக்கிறது பாருங்கள். ஒரு ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் புரிந்துக்கொண்டு வாழ்வதற்கு தாலிக்கயிறு அல்லது சொந்தபந்தங்கள் என்கிற உறவுதான் முக்கியமாக இருக்கிறது என்பது எத்தனை கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். ஆணும் பெண்ணும் நான்கு பேர் முன்னிலையில் திருமணம் செய்துக்கொள்வதன் வாயிலாக ஒரு ஆண் பெண்ணை அடிமைப்படுத்தவே விரும்புகிறான். அவள் இனி தன்னைத் தவிர வேறு ஒரு ஆணை மனதாலும், உடலாலும் அணுகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டைத்தான் இந்த தாலிக்கயிறும், இன்னபிற சொந்தங்களும் கூடி முடிவு செய்கின்றன. இந்த அடிமைத்தனைதைத்தான், மணிரத்னம் போற்றி பாதுகாக்க விரும்புகிறார்.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

கருத்துகள் இல்லை: