நீதித்துறைக்கு எதிராகப் பேசுவதற்கு ஓட்டுக்கட்சிகள் தயங்குகின்றன. பார்ப்பன ஊடகங்களோ பக்க வாத்தியம் வாசிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கு எதிராக சதித்தனமாக எப்படிக் காய் நகர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் அறிந்து கொள்வது அவசியம். எனவே, நாள் வாரியாக அந்த விவரங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி அளித்த தீர்ப்பில் போலீசின் வசூல் வேட்டைக்குச் சாதகமாக உத்தரவுகளை அளித்த நீதிபதி கிருபாகரன்
24.8.2015 – சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறியதை நம்பி சென்னை வந்த இருவரையும் நீதிபதிகள் அவமானப்படுத்தினர். வழக்கை விசாரிக்கப்போவதாகவும் சமரச தீர்வு கிடையாது என்றும் கூறினர்.
10.09.2015 – அன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையில் நீதித்துறை ஊழலுக்கு எதிராகப் பேரணி நடத்தி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டனர்.
14.09.2015 – தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தலைமை நீதிபதியின் கோர்ட்டில் வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களுமாக 12 பேர், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். அன்று மாலை கைது செய்து சிறை வைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி தலைமை நீதிபதி கவுல் தானே முன்வந்து ஒரு ரிட் மனுவை எடுத்துக் கொண்டார். ஒரு போலீசு உதவி ஆணையர் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவித்த, சில புகார்களை அதில் தொகுத்திருந்தார்.
“நீதிபதிகள் தைரியமாக நீதி வழங்க முடியாத சூழல் நீதிமன்றத்தில் நிலவுவதாகவும், எனவே நீதிபதிகளைப் பாதுகாப்பதற்கு, மத்திய தொழில்படை வர வேண்டும்” என்றும் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பினார்.
15.09.2015 – 16-ம் தேதியன்று நடைபெறவுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை திரைமறைவில்தான் நடத்தப்படும் என்றுநீதிபதிகள் அறிவிக்கவே, இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
திரை மறைவு விசாரணை ரத்து என்ற முடிவு இரவு 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்புக்கு போலீசு குவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகிறது.
16.09.2015 – காலை 10.00 மணிக்கு மதுரை வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை கோரி கவர்னரிடம் மனு கொடுக்கின்றனர்.
அன்று மதியம் போலீசு படை வழக்கறிஞர்களைத் தடுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், சங்கரசுப்பு ஆகியோர் விசாரணையைப் புறக்கணிக்கின்றனர். போலீசு தடையை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்களின் போராட்டம்.
நீதிபதி
கிருபாகரனின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்ற உண்மையை எடுத்துக் கூறியதால்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்து வரும் மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள்
சங்கத் தலைவர் பி.தர்மராஜ் (இடது) மற்றும் செயலர் ஏ.கே.ராமசாமி.
17.09.2015 – ஊடகங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் கலகம் செய்ததாகச் சித்தரிக்கின்றன. ஊழல் நீதிபதிகள் மீது விசாரணை கோரி ஆளுநரிடம் தரப்பட்ட மனு தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்கின்றன.
18.09.2015 – எந்தெந்த மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் இரு நீதிபதிகள் மதுரையிலிருந்து சென்னை சென்று தலைமை நீதிபதியைச் சந்திக்கின்றனர்.
“போராடிய வழக்கறிஞர்களை உடனே நீக்கு, மத்திய போலீசு படையை உடனே அனுப்பு” என்று “தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம்” என்ற புரோக்கர் சங்கத் தலைவர் பிரபாகரன் கடிதம் அனுப்புகிறார்.
21.09.2015 -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான மோதல் தொடர்பான வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, போராடும் வழக்கறிஞர்களை அவதூறு செய்தது மட்டுமின்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலைத் தூண்டுகிறார்.
வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில் தமிழக பார் கவுன்சிலுக்குக் கடிதம் எழுதுகிறது.
அடுத்த சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் பட்டியலைத் தமிழக பார் கவுன்சிலும் உயர்நீதிமன்றமும் அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்புகின்றன.
22.09.2015 – தமிழக பார் கவுன்சிலின் அதிகாரத்தை நிராகரிக்கும் வகையில் 14 மதுரை வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் நேரடியாகவே இடைநீக்கம் செய்துவிட்டு, விசாரணை கர்நாடகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செயுமாறு சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளர் உத்தரவிடுகிறார்.
24.09.2015 – தமிழ்நாடு பார் கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. “நீதித்துறையையோ, போலீசையோ எந்த ஒரு வழக்கறிஞரும் விமரிசித்துக் கூட்டம் நடத்தக்கூடாது, துண்டறிக்கை வெளியிடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பார் கவுன்சில் தலைவர் செல்வம் அறிவிக்கிறார்.
25.09.2015 – வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஆஜராகத் தவறினால், விசாரணை நீதிமன்றமானது வக்கீல் குறித்த புகாரை நேரடியாக அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிடுகிறார்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. சுவரொட்டி, துண்டறிக்கை, பானர் உள்ளிட்ட எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்ற சட்ட விரோதமான பாசிச அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிடுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் நடத்தி வரும் நீதிபதிகள் சி.டி.செல்வம் (இடது) மற்றும் தமிழ்வாணன்.
30.09.2015 – இந்தியாவிலேயே முதன் முறையாக நீதிமன்றத்திற்கு வெளியே அகலத்திரையை வைத்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணை ஒளிபரப்பானது. அவமதிப்புவழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக