புதன், 24 செப்டம்பர், 2014

கடத்தல், கொலை ! Ex திமுக அமைச்சர் பெரியசாமி மகள் மதுரையில் கைது

மதுரை: மதுரை ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜமால்முகமது, (61) சொத்துக்காக கடத்தப்பட்டு செப்டம்பர் 2ல் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், சொத்து வாங்கிய தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, (36) உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை சின்ன சொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2ம் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று ஜமால்முகமது உடலை மீட்டனர். பின்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக பலரை தேடி வந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் முக்கிய குற்றவாளிகளான முகமது சித்திக் (35), மாரிமுத்து (27) ஆகியோர் சரண் அடைந்தனர். இதற்கிடையே, கலெக்டர் சுப்ரமணியத்திடம் ஜமால் முகமது உறவினர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், 'போலி ஆவணங்கள் மூலம் டிரஸ்ட் சொத்துக்களை சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். புது சிறைச்சாலை ரோடு பகுதியில் உள்ள இடம் போலி 'பவர் பத்திரம்' பெற்ற கணேசன் என்பவர் மூலம் இந்திரா, பழனிவேலு, 55, உமாராணி,43, ஆகியோருக்கு விற்கப்பட்டுள்ளது. ஜமால் முகமது கடத்தப்பட்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திரா, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள். இவரின் சித்தி உமாராணி. கொலை மற்றும் சொத்து வாங்கியது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளவரசு நேற்று விசாரித்தார்.மோசடி செய்து, ஜமால் முகமதுவை மிரட்டி சொத்து வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்திரா கைது செய்யப்படுவதை அறிந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஸ்டேஷன் முன் குவிந்தனர். இந்திராவையும், உமாராணியையும் பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக்கூடாது என்பதற்காக கேமரா முன் துண்டை உயர்த்தி பிடித்தனர். போலீஸ் வேனில் கண்ணாடிகளை இறக்குமாறு கூறினர். போலீஸ் வேனை சுற்றிலும் துண்டை வைத்து மறைத்துக் கொண்டனர்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: