செப்டம்பர்
- பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய
இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும்.
இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது!
தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக
தி.மு.க-வுக்கு தலைவர் ஆகிவிடுவோம் எனத் தனி ஆவர்த்தன குதிரையை
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தட்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல்
தோல்வி, 'இந்தக் குதிரையை நம்பி பணம் கட்டலாமா?’ என்ற பயத்தை தி.மு.க
நிர்வாகிகள் மத்தியிலேயே விதைத்தது. ஆனால், சில 'விடலை’களுக்கு இது
விளங்கவில்லை. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவரைத் தூக்கியும்
கருணாநிதியைப் பலவீனப்படுத்தியும் இணையதளங்களில் கருத்துக்களைப் பரப்பினர்.
இவையெல்லாம் தனது கையெழுத்துப் பத்திரிகைக் காலத்திலேயே கருணாநிதி
பயன்படுத்திய அஸ்திரங்கள்தான் என்பது, அந்தப் புதியவர்களுக்குப் புரிவதற்கு
முன், 'தலைவரை வீழ்த்த நினைக்கிறாரா தளபதி?’ என்ற கெட்ட பெயர் ஸ்டாலின்
மீது ஏற்பட்டது.
'கருணாநிதியா... ஸ்டாலினா?’ என்ற நேருக்கு நேர் கோதா தொடங்கியது!
'கருணாநிதியா... ஸ்டாலினா?’ என்ற நேருக்கு நேர் கோதா தொடங்கியது!
ஜெயலலிதாவுக்கு
சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு நெருக்கடி நெருங்கும் நேரத்தில்,
இப்படி ஓர் உள்குத்து கோபாலபுரத்தில் நடப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதை
உணர்ந்த ஸ்டாலின், தி.மு.க முப்பெரும் விழாவில் தன்னிலை விளக்க முரசு
கொட்டினார்... 'தலைவருக்கும் எனக்கும் தகராறு என பத்திரிகைகள் எழுதுகின்றன.
தலைவரைவிட்டால் இந்த நாடு இல்லை; நான் இல்லை; நீங்கள் இல்லை. அவருக்காக
இன்னும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைக்கவே விரும்புகிறேன். வேறு பதவியை
விரும்பவில்லை. அண்ணன் துரைமுருகன் சொன்னதுபோல 2016-ல் தலைவர் கலைஞர்
தலைமையில் கழக ஆட்சி அமையும்’ என்று ஸ்டாலின் சொன்னது கடந்த இரண்டு மாத
மனக் கசப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே
நிம்மதியைக் கொடுத்துவிட்டது. இணைந்தும் பிணைந்தும் ஸ்டாலின் செயல்பட
முடிவெடுத்தது கட்சியினர் மத்தியில், பெங்களூரு தீர்ப்பைவிட மகிழ்ச்சியைக்
கொடுத்துள்ளது.
இது தி.மு.க நிலவரம் என்றால்... இதுவரை தனது உடல்நலன்
பற்றியும் மகனது நடிப்புத் திறன் பற்றியும் மட்டுமே
கவலைப்பட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியல் தூக்கத்தில் இருந்து கொஞ்சம்
எழுப்பியிருக்கிறது இந்தத் தீர்ப்பு தேதி. 'ஜெயலலிதாவின் சட்டவிரோத
ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற மாண்பைக் காப்பதற்காக அனைத்து கட்சிகளும்
ஒன்றுசேர வேண்டும்’ என கருணாநிதி பலதடவை வலைவிரித்தபோது எல்லாம் அதைக்
கண்டுகொள்ளாமல் இருந்த விஜயகாந்த், 'உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகப்
படுகொலையைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என
அறிக்கைவிடும் அளவுக்கு யதார்த்த நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். எதிர்
அணியினரது வாக்குகளை மொத்தமாக வாங்க, ஐக்கியம் முக்கியம் என்பதை
உணர்ந்துவிட்டார் அவர். பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே இந்த
நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; தனித்துச்
செயல்படுவதால் லாபம் இல்லை என்பதுதான் விஜயகாந்தின் இப்போதைய புரிதல்!
இந்தச் சூழ்நிலையில் அதிரடியாக வைகோவும் ஜெயலலிதா
எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாகக் கையில் எடுத்துவிட்டார். கடந்த செப்டம்பர்
15-ம் தேதி, பூவிருந்தவல்லியில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
மாநாட்டில் பேசிய வைகோ, சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை மட்டுமே
விமர்சித்தார். 'முல்லைப் பெரியாறுக்காக எதையுமே செய்யாதவர் தனக்குத்தானே
பாராட்டு விழாவை நடத்திக்கொள்கிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி
அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. எதிர்க்கட்சிகளே இல்லை எனச் சொல்லும்
ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் தெருத்தெருவாகப் போய் எதற்காகப் பிரசாரம்
செய்யவேண்டும்?’ என்று கேட்டு, 'ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு கட்சிகள்
ஒன்றுபட்டு கைகோக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உள்ளாட்சி
தேர்தலில் பா.ம.க.வும் பா.ஜ.க-வை வலியப் போய் ஆதரித்து தனது இருப்பை
கூட்டிக் கொண்டது.
பா.ஜ.க-வைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போதைக்கு
அ.தி.மு.க.வு-க்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருந்த ஒரே கட்சி
அதுதான். பா.ஜ.க வேட்பாளர்களை வாபஸ் வாங்கவைத்து, அவர்களது கட்சி
வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்யவைத்து, தேவைக்கு அதிகமான
முக்கியத்துவத்தை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டது அ.தி.மு.க..
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க உருவாக்கிய கூட்டணியை அப்படியே
தக்கவைத்திருக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றாவிட்டாலும், ஒரே கூட்டணியில்
விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோரைக் கட்டிவைத்துள்ளது பா.ஜ.க.
பொதுவாக, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு
முன்பு எத்தகைய அனல், கனல், கொந்தளிப்பு இருக்குமோ... அந்த வெப்பம் இப்போதே
தகிக்கிறது, தமிழக அரசியல் வட்டாரத்தில்!
அதில், பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா? vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக