ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

எல்டிடிஇ அயோக்கியத்தனமாகக் கொன்ற பல மாணிக்கங்களில் – இவரும் ஒருவர் ! ரஜினி ராஜசிங்கம் திரணகம

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

ராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள்

21/09/2014

இன்று ஸெப்டெம்பர் 21.  மகத்தான  ராஜனி திராணகம அவர்களின் 25வது நினைவுநாள்.
ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)
பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு,  இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.
இவர்களால், இந்தத் தறுதலைப்புலிகளால், காடுகளில் மனிதர்களுக்குப் பயந்துகொண்டுவாழும் பாவப்பட்ட சாதா புலிகளுக்கே மாளாத அநியாயக் கெட்ட பெயர்… :-(
சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் –  யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)

அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)
இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013   ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ்
போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி  படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது.  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.

ராஜனி அவர்களின் மாணவி ஒருவர் மூலமாக – 1986 வாக்கிலிருந்தே அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன். என் அனுமானத்தில், அவருடைய தைரியமும், புடம் போட்ட நேர்மையும், மனிதாபிமானமும் —  ‘தமிழ்’ ஈழத்திற்கு (அது எப்படியோ முளைத்திருந்தால் கூட) நிச்சயம் தேவைப் பட்டிருக்காது.
ஏனெனில் பிரபாகர போல்பாட்வாதிகளுக்கு, ராஜனி போன்றவர்கள் எதிரிகள் மட்டுமே!
-0-0-0-0-0-0-
… எல்டிடிஇ அயோக்கியத்தனமாகக் கொன்ற பல மாணிக்கங்களில் – இவரும் ஒருவர். ஏனெனில், கொலை செய்யப்பட்ட இம்மாதிரி மனிதர்களெல்லாம் – சுபிட்சத்தை நோக்கிய பாதையில் செல்லும் ஒரு புதிய ஸ்ரீலங்காவை, தமிழர்களுக்கும் சரிசம அதிகாரபங்கீடு இருக்கும் ஆட்சியை ஸ்தாபிப்பதில் — முக்கிய பங்கு வகித்திருப்பார்கள் என்பதில் எல்டிடிஇ கும்பலுக்குச் சந்தேகமே இல்லை.அதனால் தான் பிரபாகரன்களுக்கு இவர்களை – தமிழினத் துரோகிகள், சிங்களவர்களின் கைக்கூலிகள் என்றெல்லாம் சொல்லிக் கொல்லவேண்டி வந்தது.
ஃபாஸ்ஷிஸ்ம் என்பதற்கு – நம் தமிழ் நாட்டில், தமிழைக் கூறு போடும் நல்லுலகில், வேறெங்கெல்லாமோ மஸ்ஸோலினியிடமோ செல்லவே வேண்டாம். நம் உலகத்தின் மகாமகோ ஃபாஸ்ஷிஸ்ட் – பிரபாகரன் தான்.
பயங்கர துரோகங்கள் செய்து, போதை மருந்து கடத்தி, பாண்டி பஜாரில் ‘பெண் விஷயமாக’ துப்பாக்கி விளையாட்டு விளையாடி, பொதுமக்களிடம் கப்பம் வசூலித்து, அடாவடிக் கட்டப் பஞ்சாயத்து செய்து, ஆயிரக்கணக்கில் சகோதர இயக்கக்காரர்களை – பொதுமக்களை ஒழித்து, எதிர்காலத்தில் மகத்தான சமூகத் தலைவர்களாக உருவாகியிருக்கக் கூடுபவர்களை முளையிலேயே இனம் கண்டு கிள்ளியெறிந்து, பச்சிளம் பாலகர்களைக் கொலை செய்து, குடும்பங்களைச் சிதைத்து, இரண்டு தலைமுறை தமிழ் இளைஞர்களை வலிந்து வன்முறை முட்டுச் சந்துக்குள் செலுத்தி ஒழித்துக்கட்டி,  ரத்தக் களறிக் கபடியாடிய  அதே சமயத்தில், தன் குடும்பத்தை  ராஜபோகத்தில் வாழவைத்த இந்தக் கபடவாதி -ஒரு வழியாக போய்ச் சேர்ந்தது, உலகத்துக்கு நிம்மதி.
ஹிட்லர் ஒரு பரிதாபத்துக்குரிய அரைகுறை – அவருடைய குணாதிசியங்கள், அற்பத்தனங்கள் ரீதியாக நம்முடைய  சொந்த பிரபாகரனுடன் அவரைப் பொருத்திப் பார்த்தால்.
-0-0-0-0-0-0-
ராஜனி அவர்கள், தம் சக யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்களுடன் (= ராஜன், ஸ்ரீதரன், தயா சோமசுந்தரம்) இணைந்து ‘முறிந்த பனைமரம்’ எனும் ஒரு ஆவணத்தை – எழுதினார். 1987 வாக்கில் வெளிவந்த இந்த முழு புத்தகமும்  ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்’  இணைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.  ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் புரிந்து கொள்வதற்கு – இந்தப் புத்தகமும் ஒரு முக்கியமான பங்களிப்பைக் கொடுக்கிறது. (இதன் தமிழாக்கம் என்னிடம் இருந்தது – ஆனால் பதிப்பாளர் விவரங்கள் எனக்கு நினைவில் இல்லை)
இப்புத்தகத்தின் 367ஆம் பக்கத்தில் ராஜனி – எல்டிடிஇ கும்பலைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பு (என் அவசர மொழிமாற்றத்தில்):
“… புலிகளின் வரலாறு, அவர்களுடைய சிந்தாந்த வெற்றிடம், அரசியல் முதிர்ச்சியின்மை, சகிப்புத் தன்மையில்லாமை, வெறித்தனமான அடிபணிதல் – இக்காரணங்களாலேயே அந்த அமைப்பு தகர்ந்து விடும். புலிகளால் அநியாயமாக அழித்தொழிக்கப் பட்டவர்களின் ரத்தத்தாலும் கண்ணீராலும் நனைக்கப்பட்ட வரலாறுகள் மிஞ்சியிருக்க – புலிகள் முடிந்து விடுவார்கள். ஒரு புதுப் புலி – அந்தச் சாம்பலில் இருந்து வெளிவராது.”
… நினைவில் கொள்ளவும், மேற்கண்டது எழுதப்பட்டது 1987ல்.  அதாவது, சக இயக்கத்தினர்களை படிப்படியாக ஒழித்து, எல்டிடிஇ கும்பல் கோலோச்ச ஆரம்பித்த கால கட்டம்.
இப்படியெல்லாம் பட்டவர்த்தனமாக எழுத, ஒரு மனிதருக்கு (=ராஜனி) எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்!
-0-0-0-0-0-0-
… இவற்றை என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். :-(
ஏப்ரெல்-மே 1986 – என்னுடைய  கடைசிவருட பொறியியல் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன; மிச்சமும் சொச்சமுமாக முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருந்த என் ஆராய்ச்சி வேறு.  கருணாநிதி தம்முடைய வழக்கம்போல கபட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் – அதாவது தமிழன் ரத்தம், தொப்புள்கொடியுறவு என்றெல்லாம் சுளுவாகப் பொய் பேசிக்கொண்டே,  சர்வசாதாரணமாக ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு. இந்தியாவுக்கு துரோகம் செய்துகொண்டிருந்தார்.
தமிழகத் தமிழர்கள், நம் தானைத்தலைவருக்கு ஒரு பொருட்டேயல்லர் – ஏனெனில், அவர்கள்தாம் திராவிடமாயை சகதியில் மாட்டிக்கொண்டு முடிந்தபோதெல்லாம் அவரை பதவியில் உட்காரவைத்து, அவரது குடும்பத்துக்கு மட்டுமே,  தமிழகத்தை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிக்க அனுமதித்துக் கொண்டேயிருந்தனரே!
ஹ்ம்ம்… அப்போது – என்னுடைய சில நண்பர்கள், அறிமுகமானவர்கள், என் வயதையொத்தவர்கள்  – டெலொ (தமிழீழ விடுதலை இயக்கம் – TELO) அமைப்பில்  இருந்தார்கள். இவர்கள் படித்தவர்கள், யோசித்தவர்கள். பண்பாளர்கள். செயலூக்கம் மிக்கவர்கள்; இவர்களுக்கும் தங்களுடைய டெலோ அமைப்பால் சிலர் கொலை செய்யப் பட்டது பிடிக்கவில்லை – இவர்கள் தேவையற்ற வன்முறைகளை, அரசியல்-நிராயுதபாணிக் கொலைகளை ஆதரிக்கவில்லை. டெலோ ஒரு ஆயுதம் தாங்கி இயக்கமானாலும் – அதற்குள் ஏகப்பட்ட முரண்களும், ரத்தம் சிந்திப் பதவிப்போட்டிகளும் இருந்தாலும்,  அதில் ஓரளவுக்கு ஜனநாயகம், மாற்றுக் கருத்துகளை அறிதல் போன்றவை இருந்திருக்க வேண்டும்; இவர்கள் நிதி சேகரிப்பு உட்பட சில விஷயங்களுக்காகவும் சென்னையில் தங்கியிருந்தார்கள். அப்போது எனக்கு இவர்களுடன் கொஞ்சம் பழக்கம்.
சரி. ஏப்ரல் முதல்வார வாக்கில் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் முகங்களில் சிரிப்பு இல்லை. ஒரு இறுக்கம் தான், பாவம்; தயக்கத்துடன் நான் அவர்களை தடுத்து,  பின்னர் போய்க் கொள்ளலாமே என நானும் என் பிற நண்பர்களும் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை.
ஏனெனில், டெலொ இயக்கத்தினரை (ஜெகன், குட்டிமணி போன்றவர்கள் ஆரம்பித்த இந்த இயக்கத்தின் அப்போதைய தலைவர் சிறீ சபாரத்தினம்) அடியோடு ஒழிக்க, ஃபாஸ்ஷிஸ்ட் பிரபாகரனின் எல்டிடிஇ கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆக, டெலொ விசுவாசிகள் எல்லோரும் தாய் நாட்டை நோக்கி – தங்கள் இயக்கத்தைக் காக்கச் சென்று கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.
ஏப்ரெல் முடிவிலிருந்து படுகொலைகள் ஆரம்பித்தன. மே 5 வாக்கில் நிராயுத பாணியாக்கப் பட்ட சபாரத்தினம், துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்; இவருக்கு ‘மரண தண்டனையை’ பிரத்தியேகமாக வழங்கியவர் -பிரபாகரனின் எடுபிடியான  கொலைவெறி சதாசிவம் ‘கிட்டு’ கிருஷ்ணமூர்தி!
ஆனால் – எவ்வளவு முறை இதே சபாரத்தினம், ஆபத்துக் காலங்களில் பிரபாகரனை அரவணைத்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது இங்கு சிந்திக்கத் தக்கது. பிரபாகரனின் குயுக்தித் துரோக மனப்பான்மைக்கு இணையே  இல்லை.
… டெலொ அமைப்பினர்கள் ஏறத்தாழ அனைவரும், அவர்களுடைய ஆதரவாளர்களும் (என்னுடைய அப்போதைய தகவல்கள் படி, அவர்கள் குறைந்த பட்சம் 500-600 பேர் இருந்திருக்கலாம் – அல்லது இதற்கு மேலாகவும் எண்ணிக்கை இருந்திருக்கலாம்!) நிராயுதபாணிகளாக்கப்பட்டு – யாழ் தெருக்களில், நாற்சந்திகளில் பகிரங்கமாக, பொதுமக்களெல்லாம் பயபீதியுடன் பார்த்துக்கொண்டிருக்கச் சுட்டுத் தள்ளப் பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர். குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்த பலர் –  கும்மாச்சியாகத் தெருமுனைகளில் குவித்து அடுக்கப்பட்டு உயிருடன் எரிக்கப் பட்டனர். (=என் அறிமுகங்கள் அனைவரும் சாம்பலாயினர்)
இப்படி எரிக்கப்பட்ட சிலர் பாலகர்கள், 14-15 வயது குழந்தைகள்.
அச்சமயம் – எல்டிடிஇ கும்பலின் இம்மாதிரி அயோக்கியத் தனங்களை, கொலைவெறியை எதிர்த்து – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்தனர். சில (மெய்யாலுமே) ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’கள், பேரணிகள் நடந்தன.
ஆனால் – இந்த மாணவர்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் எல்டிடிஇ கும்பலால் திட்டமிட்டுக் கொலை செய்யப் பட்டனர். இப்படிப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது  – விமலேஸ்வரன்.
இப்போது யோசித்துப் பாருங்கள் – நேர்மையும் வீரியமும் மிக்க மாணவர்களை அயோக்கியத்தனமாகக் கொன்ற இதே  கழிசடை எல்டிடிஇ இயக்கத்துக்கு ஆதரவாக – தமிழ் நாட்டு இளைஞமாணவ அறிவிலிக் குளுவான்கள் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’கள் வேறு விமரிசையாக, தொலைக்காட்சி அலைவரிசைகள் புடைசூழ நடத்தினார்கள். கேவலம்….
… எது எப்படியோ – கடைசியில், பிணவமைதியும் எல்டிடிஇ பாணி ஜனநாயகமும் அரங்கேறின.
ஆனால் சரித்திர சக்கரம் சுழன்று – ஒரு வழியாக, ராஜனி அவர்கள் ஆரூடம் சொன்னது போல 2009ல் எல்டிடிஇ கும்பலும் ஒழிக்கப் பட்டது. கெடுவான் கேடு நினைப்பான், வேறென்ன சொல்ல.
ஆ… சொல்ல மறந்தேனே! என்னுடைய பரீட்சைகளை நான் சரியாகவே எழுத முடியவில்லை. இது ஒரு பெரிய விஷயமேயல்ல என்றாலும், பல மாதங்களாக ஒரு பிரமையில் இருந்த நான் மீள்வதற்கு மிகுந்த பிரயத்தனம் படவேண்டியிருந்தது.
-0-0-0-0-0-0-0-
தயாபால திராணகம அவர்கள் – 2012ல் எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரை இங்கே இருக்கிறது. [Solitude in Jaffna and the silence of a city– Dayapala Thiranagama’s poignant journey home (by Dayapala Thiranagama, in The Island, 21 September 2012)] இதிலிருந்து ஒரு பகுதி கீழே:
“… I had undertaken this journey to visit Rajani’s grave for the first time. Engraved on the tombstone were the words chosen by her mother Mahila Ruppiam, a devout Christian: “Blessed are those who are persecuted for righteousness sake, for theirs is the kingdom of heaven”.
She outlived her daughter by nearly two decades and her ashes are now buried with her. “I wondered, when I read those words, whether she had chosen those words as a rebuke to the LTTE and their fervent supporters who had denounced her daughter as a ‘traitor’ to the Tamil people, declared her as an outcast from Tamil Eelam and then brutally murdered her.
புனித ஜேம்ஸ் சர்ச் வளாகத்தில் ராஜனி அவர்களின் கல்லறை - படம் எடுத்தது 2002ல், சபா தம்பி அவர்களால். நன்றி: http://dbsjeyaraj.com/dbsj/archives/33112
புனித ஜேம்ஸ் சர்ச் வளாகத்தில் ராஜனி அவர்களின் கல்லறை – படம் எடுத்தது 2002ல், சபா தம்பி அவர்களால். நன்றி: http://dbsjeyaraj.com/dbsj/archives/33112
 -0-0-0-0-0-0-
2005ல் ஹெலென் க்ளடாஸ்கி அவர்கள் சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஓடக்கூடிய ஒரு ஆங்கில ஆவணப் படத்தை – ‘இனிமேல் கண்ணீர் விடவேண்டாம், சகோதரி’ என்பதை எடுத்தார். ( No More Tears Sister (2005)). 2007 வாக்கில் என நினைவு – நான் பெங்களூரில் இதனைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
இன்று  இணையத்தில் தேடிப்பார்த்தால், யூட்யூப் தளத்தில் இந்தப் படம் முழுவதும் (ஆனால் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு) காணக் கிடைக்கிறது.
முடிந்தால் அவசியம் இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவும்; இது ஒரு மகாமகோ சிரத்தையுடன், அழகுணர்ச்சியுடன் எடுக்கப்பட்ட படமல்ல.  சமகால வரலாறுகள், சில கோணங்களில் (‘முறிந்த பனை’ போலவே) சரியாகப் பதிவு செய்யப் படவில்லை. ஆனால் சத்யாவேசம் இருக்கிறது.
ஆக, என் பார்வையில், ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய, பார்த்துவிட்டு ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. முக்கியமாக – அந்த மனிதன், சிந்திக்கவே தெரியாத, வரலாற்றைச் சுத்தமாக  அறியாத, அர்த்தமில்லாமல் தினவெடுத்துக் கொண்டு உணர்ச்சிகரமாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் அற்ப ‘பிரபாகர பூஜை’ செய்யும் தமிழகத் தமிழனானால் – அவன் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்.
சிந்திக்க வேண்டும்.
-0-0-0-0-0-0-0-
… ராஜனி!  உங்களை எப்படி நான் மறக்க முடியும்? :-othisaivu.wordpress.com

கருத்துகள் இல்லை: