ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தமிழகத்தில் பழைய பயிர் காப்பீட்டு திட்டம் தொடரும் ! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை:'தமிழகத்தில், புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக, பழைய பயிர் காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இயற்கை சீற்றங்களால், பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை போக்க, தமிழகத்தில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.இத்திட்டத்தில், காப்பீட்டு கட்டணம், பயிர் மற்றும் பருவத்திற்கேற்ப, 2 சதவீதம் முதல், 3.5 சதவீதம் வரை இருந்தது. இதில் 50 சதவீதத்தை தமிழக அரசு செலுத்தியது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தினர். இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களால் வசூல் செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணத்திற்குள் இருந்தால், அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளுக்கு வழங்கும்.மொத்த இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு கட்டணத்தை விடக் கூடுதலாக இருந்தால், அந்தக் கூடுதல் இழப்பீட்டுத் தொகையை, மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து, காப்பீட்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும்.இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இருந்தது.
ஆனால் இத்திட்டத்தை, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், முந்தைய மத்திய அரசு, 2013 நவம்பரில் திடீரென ரத்து செய்தது.அதற்கு பதிலாக, 'தேசிய பயிர் காப்பீட்டு திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கணக்கீடு விவரம்:

இத்திட்டம், திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் என, இரண்டு அம்சங்களைக் கொண்டது.திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அந்தந்த இடங்களில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பின் அடிப்படையில், காப்பீட்டுத் தொகை, காப்பீட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில், சம்பா நெல் பயிருக்கு, காப்பீட்டுத் தொகையாக, ஒரு எக்டேருக்கு (2.47 ஏக்கர்), 6,440 ரூபாய் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டு கட்டணம், 3,349 ரூபாய். இதில், மத்திய, மாநில அரசு, தலா 1,256 ரூபாய் செலுத்த வேண்டும். மீதமுள்ள 837 ரூபாயை, விவசாயி செலுத்த வேண்டும்.

கருத்துரு:

இழப்பீடு ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை முழுவதையும், காப்பீட்டு நிறுவனமே அளிக்கும். பயிர் இழப்பு ஏற்படும் நேரங்களில், தன் பங்காக வழங்க வேண்டிய தொகையை, குறைக்கும் வகையில், இத்தகைய பயனற்ற காப்பீட்டு திட்டத்தை, முந்தைய மத்திய அரசு அறிமுகம் செய்தது.இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 5ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 2 சதவீதத்திற்கு மேல் உள்ள காப்பீட்டு கட்டணத்தை, மத்திய அரசும், மாநில அரசும், சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என, ஆலோசனை தெரிவித்தேன். அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.புதிய காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக, பழைய காப்பீட்டு திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமிழக விவசாயப் பிரதிநிதிகள், கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசுக்கு, ஒரு கருத்துரு அனுப்பப்பட்டது.ஒப்புதல்அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கு மட்டும், பழைய பயிர் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.எனவே, விவசாயிகள் நலன் கருதி, 2014ல், சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில், பயிரிடப்படும் நெல் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படும், இதரப் பயிர்களுக்கு, பழைய பயிர் காப்பீட்டு திட்டமான, 'தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: