செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மது அருந்திய பின் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள் பணி நீக்கம் !

லக்னோ: விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சி பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்ட 11 பயிற்சி நீதிபதிகளை உத்தரபிரதேச அரசு அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு 40 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய சிவில் நீதிபதி, ஜூனியர் சிவில் நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட்டு பதவிகளுக்காக 22 பெண்கள் உள்பட 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் லக்னோ நகரில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 4 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பயிற்சி முடிவடைவதற்கு முதல்நாள் லக்னோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பயிற்சி நீதிபதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, பயிற்சி நீதிபதிகளில் 40 பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த பயிற்சி பெண் நீதிபதி ஒருவரிடம் தகாத முறையிலும், நெறிமுறைகளை மீறி அநாகரீகமாகவும் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.


தனக்கு பயிற்சி நீதிபதிகள் அளித்த தொல்லை குறித்து, அந்த பயிற்சி பெண் நீதிபதி அலகாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அளவிலான நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பெண் பயிற்சி நீதிபதியிடம் 20 பயிற்சி நீதிபதிகள் தவறான முறையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணை அடிப்படையில் 20 பயிற்சி நீதிபதிகளை தற்காலிக நீக்கம் செய்யும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாந்த் சூட் மற்றும் 9 மூத்த நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், உயர் நீதிமன்றத்தின் முழுமையான அமர்வின் நிர்வாக குழு இந்த பரிந்துரையை மாநில முதல்வருக்கு அனுப்பியபோது சம்பவத்தில் நேரடித் தொடர்பு கொண்டிருந்த 11 பேரை பதவி நீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டது. மேலும் அந்த பரிந்துரையில், இந்த பயிற்சி நீதிபதிகள் 11 பேரும் நீதிபதி ஆவதற்கே தகுதி அற்றவர்கள் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த பரிந்துரையை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மாநில நியமன இலாகா, பயிற்சி நீதிபதிகள் 11 பேரையும் நீக்கம் செய்ததற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. vikatan.com

கருத்துகள் இல்லை: