ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

151 தொகுதியில் சிவசேனா போட்டி !119 இடங்களில் பாஜக போட்டி ? பா.ஜனதா-சிவசேனா கூட்டணி நீடிக்குமா?

மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறியே ஏற்பட்டு வருகிறது. சிவசேனாவுடன் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி நடக்கும் தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு இன்னும் முடியவில்லை. இதே போல் சிவசேனா-பா.ஜனதா கூட்டணியும் இன்னும் உறுதி ஆகவில்லை. தொகுதி பங்கீட்டில் இந்த இரு கட்சிகள் இடையே இன்னும் ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. 151 தொகுதிகளில் சிவசேனா போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவுக்கு 119 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் பா.ஜனதாவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா கோரி வருகிறது.


பாரதீய ஜனதா, சிவசேனாவின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மும்பை மற்றும் டெலியில் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இறுதியாக சிவசேனா 151 தொகுதிகளியில் போட்டியிடும் என்றும் பாரதீய ஜனதாவுக்கு 119 தொகுதியும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதியும் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார். சிவசேனா மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதி படுத்தியுள்ளது. ஏற்கனவே சிவசேனாவின் கோரிக்கையை பாரதீய ஜனதா ஏற்க மறுத்தும், பாரதீய ஜனதாவிற்கு 119 தொகுதி மட்டுமே கொடுக்கப்படும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை என்பது போல் தேர்தல் பொறுப்பாளர் ஓம் மாத்தூர் அளித்த நேற்றைய பேட்டி அமைந்திருந்தது. டெல்லியில் இன்று நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிவசேனா ஒதுக்கும் 119 தொகுதிகளில் போட்டியிடுவதா? அல்லது கூட்டணியை விட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்குவதா? என்ற முடிவை பா.ஜனதா எடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் இதனால் சிவசேனா - பா.ஜனதாவின் 25 ஆண்டு கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.dailythanthi .com

கருத்துகள் இல்லை: