சனி, 25 ஜனவரி, 2014

ராகுல்: நாடு முழுவதும் சமச்சீர் கல்வி !

நாடு முழுவதும் சமச்சீர் கல்வி கொண்டு வர தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு : ராகுல் காந்தி<சேவாகிராம்: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஊட்டும் விதமாக ராகுல் காந்தி அவர்களை சந்தித்து பேசி வருகிறார். மகாராஷ்ட்ராவில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ள வார்தாவில் பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் சமூக சேவகர்கள், மற்றும் அதிகாரிகளை நேற்று சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் பேசியதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் பெண்கள். ஆனால் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

இதேபோல் இளைஞர்க ளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. சட்டம் தொடர்பான எந்த முடிவு குறித்தும் இவர்களிடம் ஆலோசிக்கப்படுவது இல்லை. கட்சி மேலிடம் கூறும் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகின்றனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்காமல் இந்தியாவால் வல்லரசாக முடியாது. இன்று கட்சியில் மேல்மட்டத்தில் உள்ள 5-7 பேர் மட்டுமே வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் ஊழல் பெருகுகிறது. இந்நிலை மாறவேண்டும். அதிகாரங்கள் பரவலாக அடிமட்டத்தில் உள்ள கிராமத் தலைவர்களுக்கும் சென்று சேர்ந்தால் 50 சதவீத ஊழல் ஒழிந்துவிடும். இன்றைக்கு பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு  மாநிலங் களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை. இவர்களின் குரல் கேட்பதில்லை. இந்த நிலை மாறுவதற்கு கண்டிப்பாக முயற்சி செய்வேன்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வருவது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை: