ஞாயிறு, 19 ஜனவரி, 2014

அழகிரி கலைஞர் சந்திப்பு ! விஜயகாந்த் பற்றி அழகிரியின் கணிப்பு சரி ?


சென்னை, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தென் மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
அதை தொடர்ந்து மதுரையில் சர்ச்சை அளிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப் பட்டு இருந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க கூடாது என்று மு.க.அழகிரி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அழகிரியின் கருத்துக்கும், தி.மு.க.வுக்கும் சம்மந்தம் இல்லை என்று கருணாநிதி தெரிவித்தார்.
அதோடு கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மு.க. அழகிரி கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது தனது நிலை குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார்.
இந்த நிலையில் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு இன்று காலை 9.40 மணியளவில் மு.க.அழகிரி சென்றார். சுமார் 1 மணி நேரம் கருணாநிதியுடன் பேசிக் கொண்டு இருந்தார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக தெரிகிறது.
மு.க.அழகிரி வெளிநாடு செல்ல இருப்பதால் கருணாநிதியை சந்தித்ததாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. malaimalar.com 

கருத்துகள் இல்லை: