திங்கள், 20 ஜனவரி, 2014

தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணம் லஞ்சம் ஆகாது என்கிறார் முதல்வர் வீர்பத்ரர்

புதுடில்லி: தனியார் மின் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று, அந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ள புகாரை, இமாச்சல பிரதேச, காங்., முதல்வர், வீர்பத்ர சிங் மீண்டும் மறுத்துள்ளார். ''நான் பணம் பெற்றது உண்மை; ஆனால் அதை அந்நிறுவனத்திடமிருந்து கடனாக, காசோலை மூலம் பெற்றேன்'' எனக் கூறியுள்ளார். தனியார் மின் நிறுவனம்:இமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான காங்., ஆட்சி உள்ளது. தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, முதல்வர் வீர்பத்ர சிங், லஞ்சம் பெற்று, முறைகேடான வகையில் அந்நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, எதிர்க்கட்சியான, பா.ஜ., குற்றம் சாட்டியது. இதில், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, அக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், வீரபத்ர சிங், தன் மீதான குற்றச்சாட்டை மீண்டும் மறுத்துள்ளார்.
>வங்கிகள் மறுப்பு:இதுகுறித்து, வீரபத்ர சிங் கூறியதாவது:சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து, என் சொந்த தேவைக்காக, பணத்தை கடனாகப் பெற்றேன். என் வயதை கருத்தில் கொண்டு, வங்கிகள் எனக்கு கடன் தர மறுத்ததால், நான் தனியார் நிறுவனத்திடம் கடன் பெறும் சூழல் ஏற்பட்டது. அத்தொகையானது, காசோலை வடிவில் பெறப்பட்டு, அவை காசோலையாகவே திருப்பித் தரப்பட்டுள்ளது.நாட்டில் லஞ்சம் பெறும் எவரும், பணத்தை காசோலை வடிவில் பெறுவதில்லை. 2011ம் ஆண்டு, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, அப்பணம் பெறப்பட்டுள்ளது. அப்போது நான் மாநில முதல்வர் ஆவேன் என, நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.இமாச்சல பிரதேச மாநில அரசியலில், பா.ஜ.,வின் முன்னேற்றத்திற்கு நான் பெரும் தடைக்கல்லாக இருப்பதால், அவர்கள் என் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: