திங்கள், 20 ஜனவரி, 2014

புலம்பிய ADMK எம்.எல்.ஏ. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் ! தலித் என்பதால் கட்சியில் புறக்கணிக்கிறார்கள்

தலித் என்பதால் கட்சியில் என்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என்று நேற்று அதிமுக மேடையில் புலம்பிய அதிமுக எம்.எல்.ஏவை இன்று கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.   சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் எஸ். மாதேஸ்வரன் எம்.எல்.ஏ.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.மாதேஷ்வரன் பேசும்போது, ’’இங்கு நடைபெறும் நிகழ்ச்சி அரசு விழாவாகத் தெரியவில்லை. நான் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுகவில் தொடர்ந்து என்னைப் புறக்கணிக்கின்றனர். என்னைப் புறக்கணிப்பதை ஆத்தூர் தொகுதி மக்களைப் புறக்கணிப்பதாகவே கருதுகிறேன்.
கடந்த செப்டம்பர் மாதம் எனது தொகுதிக்குள்பட்ட தாண்டவராயபுரத்தில் விலையில்லா மின்சாதனப் பொருள்கள் வழங்கும் விழா எனக்குத் தெரியாமலேயே நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு தங்களுக்கும், அந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு இதுகுறித்து விசாரித்து படத்தில் கொடுக்கிறேன் என்றார். ஆனால், இதுவரை எனக்கு பதில் கொடுக்கவில்லை. இன்றைய நிகழ்ச்சிக்குகூட  முறைப்படி அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை’’ என்றார்.
தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உடனடியாக எழுந்து, இதுகுறித்து மேலே எம்.எல்.ஏ.வை பேச வேண்டாம் என்று கூறி தடுத்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி  சமாதானப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியபோது,  ’’நம்மையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கையால் பிடித்து வைத்ததனால்தான் பிள்ளையார் என்கின்ற மரியாதை கிடைகிறது, இல்லையென்றால் நாமெல்லாம் என்னவென்று (சாணம்) உங்களுக்கு தெரியாதா...? தன்னை அனைவரும் புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. மாதேஷ்வரன் கூறினார். ஆனால், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அனைத்தையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும்.
நான் பொது வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்துதான் அமைச்சராக வந்திருக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தாலும் ஒருவருக்குதான் பதவி கிடைக்கும். எனவே, இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு எம்.எல்.ஏ. அமைதியாக இருக்க வேண்டும்.  அதை விட்டுவிட்டு யார் பெரியவர் என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது.
மாணவ, மாணவிகள் முன்னிலையில் இதுபோன்று யாரும் பேசக் கூடாது. இது அவர்களது மனதில் நன்கு பதிந்துவிடும். இவர்கள் நாளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது நம்மைப்போல அரசியல் வாதிகளாகவோ வரக்கூடும்.  இதுபோன்ற நிகழ்வுகள் அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும்’’ என்றார் அமைச்சர்.
இந்நிலையில் இன்று முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.  சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் எஸ். மாதேஸ்வரன் எம்.எல்.ஏ. nakkheeran.in

கருத்துகள் இல்லை: