வியாழன், 23 ஜனவரி, 2014

மூவரை கொன்ற புலி குண்டுக்கு பலி: 19 நாள் பீதிக்குப்பின் ஊட்டியில் நிம்மதி

 ஊட்டி : ஊட்டி அருகே, இரு பெண்கள் உட்பட மூவரை அடித்துக்கொன்ற புலியை, வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர், நேற்று சுட்டுக் கொன்றனர். இதனால், கிராம மக்கள் ஆரவாரம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, தொட்டபெட்டா சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சோலாடா, அட்டபெட்டு, குந்தசப்பை பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி, அப்பகுதியைச் சேர்ந்த, கவிதா, 32, சின்னப்பன், 58, முத்துலட்சுமி, 38, ஆகியோரை அடுத்தடுத்து தாக்கி கொன்றது.அவர்களின் உடல்களும் புலிக்கு இரையாயின. இதுதவிர, இரு பசு மாடுகளையும் புலி அடித்துக் கொன்றது.இதன் காரணமாக, கடந்த 19 நாட்களாக, 100 கிராமங்களில் பீதி நிலவியது. வனத்துறையினர், அதிரடிப்படை போலீசார் என, 300 பேருக்கும் மேற்பட்டோர், புலியை தேடிவந்தனர். புலி பீதியால் தொட்டபெட்டா முதல், அட்டபெட்டு வரை 48 பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒரு சில பகுதிகளில் திறக்கப்பட்டு, தற்போது, 17 பள்ளிகளுக்கு மட்டும், 24ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 78 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன; ஆறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன.இந்நிலையில், கடந்த 20ம் தேதி, கப்பச்சி என்ற இடம் அருகே, பசு மாட்டை அடித்த புலி, 100 மீட்டர் வரை இழுத்து சென்று ருசித்தது. இதனால், கிராம மக்கள் மிகவும் பீதி அடைந்தனர். அன்று இரவு, மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் இறங்கினர். நான்கு பேர் புலி கூண்டுக்குள் அமர்ந்து, இரவு முழுவதும் கண்காணித்தனர்; புலி வரவில்லை. இதனால், புலியை சுட்டுப் பிடிக்க அனுமதி கோரி, தலைமை முதன்மை வனப்பாதுகாவலருக்கு, நீலகிரி மாவட்ட வன அதிகாரிகள் கடிதம் எழுதினர்.நேற்று காலை, 10:30 மணிக்கு வனத்துறையினருடன், 300க்கும் மேற்பட்ட மக்களும், உருட்டு கட்டை மற்றும் கம்பு, குச்சிகளுடன், வனப்பகுதிக்குள் புகுந்தனர்; ஆனால், மாலை வரை, புலி சிக்கவில்லை.


அதிர்ச்சி:

அனைவரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்ப தயாரான நிலையில், மாலை, 6:10 மணியளவில் கப்பச்சி கிராமத்தில், நுழைந்த புலி, ஒரு பசு மாட்டை அடித்து இழுத்து சென்றது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. பின், அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் அப்பகுதியில் முகாமிட்டனர்.முதற்கட்டமாக, புலியை வெளியே வரவழைக்கும் வகையில், வானை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். எனினும், புலி வெளியே வரவில்லை. சந்தேகத்துக்குரிய பகுதியில் நுழைந்த வீரர்கள், 10 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டதில் புலி இறந்தது.


உற்சாகம்:

நேற்று இரவு, 8:00 மணிஅளவில் வனப்பகுதியில் இருந்து, 'வயர்லெஸ்' மூலம், மாவட்ட கலெக்டர், வன அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, புலி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று பேரை அடித்துக் கொன்ற புலி பலியானதை அறிந்த கிராம மக்கள், உற்சாகத்துடன் கொண்டாடினர்.இத்தகவல், உடனடியாக கொடநாட்டிலுள்ள, முதல்வர், ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப் பட்டது. முதல்வர் இன்று, சென்னை திரும்பவுள்ள நிலையில், புலி பீதிக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.dinamalar.com 

கருத்துகள் இல்லை: