செவ்வாய், 21 ஜனவரி, 2014

பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன? யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த


Myth of the Holy Cow“பசுவதை தடை சட்டம் வேண்டும்.”
“பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.”
“பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.”
“பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”
மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.
இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

“பசு புனிதமானது”
“கோமாதா பால் கொடுக்கிறது”
“பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது”
“இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்”
என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.
பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா?
அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா?
பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை தரும் விதமாக வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை தந்துள்ளார். மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.
வேதங்கள் மற்றும் இதர பார்ப்பன வரலாறு நூல்கள், இலக்கியங்கள், பவுத்த, சமண சமய நூல்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டைய கால இந்தியாவில் மாட்டுக் கறி உண்ணுவதும், பசுவை பலியிடுவதும், குறிப்பாக பசுவின் மாமிசத்தை உண்ணுவதும், இந்து, பவுத்த, சமண சமய மக்களிடம் மிக இயல்பாக இருந்த ஒரு நிகழ்வு என்பதை பல ஆய்வுகள மூலம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். முழு முடிவுகளும், ஆதாரங்களும், வேதம் மற்றும் பிற இந்து சமய நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மதவாதிகள் இந்த புத்தகத்தை வெளிவரவிடாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் இதை பதிப்பிக்க ஒப்புக் கொண்ட டெல்லியை சேர்ந்த புத்தக பதிப்பகம், மதவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது. பின்னர் இதை மேட்ரிக்ஸ் நிறுவனம் பதிப்பிக்க முன் வந்தது. ஆனால் 2001 ஆகஸ்டில் வந்த இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் மதவாதிகள். அதனால் லண்டனில் இருக்கும் வெர்சோ பதிப்பகத்தாரின் மூலம் உலகம் முழுவதும் இந்த புத்த்கம் முதலில் வெளியிடப்பட்டது. இந்து மதவெறியர் ஒருவர் டி.என். ஜாவுக்கு மரண தண்டனை அறிவித்து ‘பத்வா’ கொடுத்து விட்டார்.
வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.
the-myth-of-the-holy-cowவேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம். வேத காலத்திலேயே மருத்துவத்தை உலகிற்கு சொன்னவர் என்று சுஸ்ருதரை குறித்து பெருமை அடித்துக் கொள்ளும் இந்துத்வா கும்பல் அவரின் நூல்களை படிக்கவில்லை என்பது தான் உண்மை என்று இதிலிருந்து தெரிகிறது.
பொதுவாகவே “பசுவின் புனிதம்” புத்தகத்தில், பல ஆதாரங்கள் வேதத்திலும், இந்து மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்படும்போது. இப்படி ஆதாரங்கள் இருக்க இந்து மதத்தை பற்றி பல பொய்களை இந்துத்துவா கும்பல் பெருமையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி வருவதை என்னவென்று சொல்வது? பொதுவில் மதவெறியர்கள அனைவரும் தமது மதப் புனிதத்தை இப்படித்தான் பொய்களாலும், புனைவுகளாலும், மற்ற பிரிவினர் மீதான கசப்புணர்விலும் கட்டியமைக்கின்றனர். அதில் இந்துமதவெறிப் பாசிஸ்ட்டுகள் முன் வரிசையில் இருக்கின்றனர்.
வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளின் பொய்களை அம்பலப்படுத்த அவர்கள் முன்வைக்கும் நூல்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் உண்மைகளை ஆய்வு செய்து தொகுத்து அம்பலப்படுத்த வேண்டியது அறிவுத் துறையினர், ஆய்வாளர்களின் கடமை. அதை மக்களுக்காக செய்பவர்களே உண்மையான அறிவுஜீவிகள். அந்த வகையில் டி.என். ஜா மிக அரும்பணியை செய்திருக்கிறார்.
டி.என். ஜாவின் “பசுவின் புனிதம்” எனும் நூல் வேத காலம் முதல் மக்கள் பசுவின் மாமிசத்தை உண்டு வந்ததை மட்டும் ஆதாரத்துடன் நம் முன் அம்பலப்படுத்தவில்லை, இந்து மதவாதிகள் எப்படிப்பட்ட பொய்களை வாய் கூசாமல் சொல்லுகிறார்கள், இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் மறைத்து விட்டு தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது, என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கும் நம் நன்றிகள்.
பசுவின் புனிதம்
ஆசிரியர் : டி.என்.ஜா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் கடைகள் போக கீழைக்காற்றிலும் கிடைக்கும்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370 vinavu.com 

கருத்துகள் இல்லை: