திங்கள், 1 ஏப்ரல், 2013

கணவனின் சபலம் கலங்கிப் போன பெண் விதியின் விளையாட்டு

கணவனின் சபல புத்தியினாலும் தனது ஆத்திர குணத்தினாலும் வாழ்க்கையை சீர்குலைத்த இந்தப் பெண் சிறையில் வேதனைப்படுகிறாள்

கொழும்பு 7, கறு வாக்காட்டில் உள்ள  பல வாகனங்களின் உரிமையாளரான வர்த்தகரை தந்தையாகக் கொண்டிருந்த  இந்தப் பெண்ணுக்கு தாயும், ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் இருக் கிறார்கள்.
இவரது தந்தைக்கு ஐந்து ஆறு வாகனங்கள் இருந்தன. கொழும்பிலுள்ள பிரபல பெளத்த அரசாங்க மகளிர் பாடசாலையில் கல்வி கற்ற இந்தப் பெண் தந்தையாரின் காரிலேயே பாடசாலைக்குச் சென்று திரும்பினார். எவ்வளவுதான் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டாலும் இந்தப் பெண் பாடசாலையில் இருக்கும் போதே ஒரு ஆடவனுடன் காதல் கொண்டாள்.
இந்தப் பெண் பெளத்த மதத்தைச் சார்ந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனாலும் இவள் காதலித்த ஆடவன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். காதல் தலைக்கேறியதனால் இப்பெண் தனது 15வது வயதிலேயே காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
இந்தப் பெண் தன்னிச்சையாக பெற்றோரையும் சகோதர, சகோதரியை யும் மறந்து காதலனுடன் தப்பி ஓடிய தனால் ஆத்திரமடைந்த அவளது பெற்றோர் இவள் இறந்து விட்டாள் இனி நாம் இவளை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்பதை உலகத்துக்கு காட்டுமுகமாக வீட்டு வாசலில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டு தங்கள் மன அழுத்த த்தை வெளிப்படுத்தினர்.

இனிமேல் வீட்டுக்கு போக முடியாது போனாலும் வீட்டில் உள்ளோர் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி தலைமறைவாக வாழ்ந்தாள். இவளுடன் அந்த ஆடவன் குடும்பம் நடத்திய போதிலும் பெண்ணின் வயது குறைவாக இருந்ததனால் இவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெறவில்லை.
மிகவும் கஷ்டப்பட்டு அந்த இளைஞன் அரசாங்க சேவையில் சேர்ந்து கொண்டான். அவனுக்கு கிடைக்கும் சம்பளத்துடன் இவர்கள் இருவரும் மிகவும் சிக்கனமாக குடும்பம் நடத்தினர். இவளது காதலனுக்கு  மின்சார இணைப்புடைய  ஒரு சிறிய வீடு இருந்ததனால்  வாடகை செலுத்தாமல் கிடைத்த சம்பளத்தில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். வயது வந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 3 பிள்ளைகள் பிறந்த னர். மூத்தவர் மகன். அதையடுத்து இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். அதன் பின்னர் பிள்ளைகளின் கல்வியில் இவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
இந்தப் பெண் தன் கணவனுடன் நுகேகொடையில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். சந்தைக்குப் போய் காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்குவதற்கு அந்தப் பெண் பொதுவாக பஸ்களில் செல்வாள். ஒரு நாள் அவள் சந்தைக்கு போகும் போது தனது பாடசாலை சினேகிதி ஒருவரை சந்தித்து உரையாடினாள்.
முன்பு அழகாக இருந்த அந்த சினேகிதி இப்போது மெலிந்து, எலும்பும் தோலுமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். தனக்கு வசிப்பதற்கு இடமில்லை என்று அழுது புலம்பிய போது வேதனைப்பட்ட இந்தப் பெண் தனது வீட்டு விலாசத்தை அவளுக்கு கொடுத்திருக்கிறாள்.
கணவனின் அனுமதியுடன் தனது சினேகிதியையும் தங்கள் வீட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கினாள். தாயும், பிள்ளைகளும் அவளுடன் அன்போடு பழகினார்கள். அதற்கு பின்னர் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த சினேகிதியை தனது கணவருடன் தனியாக இருக்க விட்டு செல்லவும் தயக்கம் காட்டவில்லை. அந்தளவுக்கு தனது சினேகிதி மீது நம்பிக்கை வைத்திருந்தாள்.
ஒரு நாள் இவள் தன் பிள்ளைகளை டியுசன் எடுத்துச் சென்று வீடு திரும்பும் போது கணவனும்   தனது  சினேகிதியும்   படுக்கையறையில் பரவசத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதை பார்த்து இந்தப் பெண் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தாள். தனக்கு துரோகம் செய்த கணவனுடன் வாழக்கூடாது என்று ஆத்திரமடைந்த இந்தப் பெண்  இரவோடு  இரவாக   தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கணவன் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அன்றிரவு  முழுவதும் இந்தப் பெண்ணும் பிள்ளைகளும் பஸ்தரிப்பு நிலையத்திலேயே இரவைக் கழித்தனர். இரண்டு மூன்று நாட்களாக பிள்ளைகளுடன் வீதியில் அலைந்து திரிந்த பெண் இறுதியில் செய்வதறியாது தன் தாய் வீட்டுக்கே சென்றாள். முதலில் ஆத்திரமடைந்த தாயார் ஏசினாலும் தன் பேரப்பிள்ளைகளைப் பார்த்து மனமிரங்கி அந்தப் பெண்ணையும் பிள்ளைகளையும் வீட்டில் அனுமதித்தார். இதனால், அந்தப் பெண்ணின் பிள்ளைகள் மீண்டும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
தந்தையும் இவளைப் பார்த்து அனுதாபப்பட்டு தனக்கு சொந்தமான கம்பனியில் ஒரு வேலையும் ஒழுங்கு செய்து கொடுத்தார். இவ்விதம் நன்றாக படித்த இவளது பிள்ளைகளில் மூத்தவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டான். பின்னர் அந்த மகன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று உயர்கல்வி பெற விரும்பியதனால் அவன் தனது பாட்டனாரிடம் பணம் கேட்க விரும்பாத காரணத்தினால் தனது தந்தையிடம் சென்று பணம் கேட்க தீர்மானித்தான்.
மகன் தந்தையை சந்தித்த போது ஆத்திரமடைந்த தந்தை மகனை தகாத வார்த்தைகளால்  ஏசி வெளியில் போடா என்று கூறி கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத மகன் தனது  தாயிடம்  விடயத்தை கூறி கதறி அழுதான். அத்துடன்  தனது  தந்தைக்கு  என் கையால் தான் மரணம் ஏற்படும் என்று  அம்மாவிடம்   உறுதிமொழியும் வழங்கினான்.
மகனை ஒரு கொலையாளியாக மாற்றக்கூடாது என்ற எண்ணத்துடன் இந்தப் பெண் மாறு வேடம் அணிந்து தனது கணவனின் வீட்டுக்கு சென்றாள். தனது குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கச் செய்த பாடசாலை சினேகிதியை கண்டவுடன் ஆத்திரமடைந்த இந்தப் பெண் அவளை கத்தியால் குத்தி படுகொலை செய்தாள்.
கொலை செய்த பின்னர் வீட்டுக்கு வந்து சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்திற்கு சென்று சரணடைந்தாள். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இந்த கடுமையான தீர்ப்பை  கண்டு கலங்கிப் போன தனது  மகன் மேன்முறையீடு   செய்ததை   அடுத்து மரண தண்டனை 25 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது 15 வருடகாலம் சிறையில் இருக்கும் இந்தப் பெண் இன்னும் ஓரிரு வருடங்களில் விடுதலை செய்யப்படுவாள்.  
இவளது மூன்று பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்து நல்ல செல்வாக்குடன் இப்போது வாழ்ந்து வருகிறார்கள். அடிக்கடி பிள்ளைகள் இலங்கைக்கு வந்து தாயை சிறையில் வந்து பார்ப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனக்கு ஏற்பட்ட ஒரு நொடிப்பொழுது சலனத்தினால் தனது குடும்ப வாழ்க்கையே சீர்குலைந்து போய் தான் விரும்பி மணம்புரிந்த மனைவியும் சிறையில் வாடுகிறாள் என்பதனால் மனம் நொந்து போன அந்தக் கணவன் இப்போது தன் மனைவியை பார்ப்பதற்கு அடிக்கடி சிறைச்சாலைக்கு வந்து போவானாம்.
முதல் இரண்டு மூன்று தடவைகள் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த கணவனை ஏசி விரட்டிய அந்தப் பெண் பின்னர் மனம் உருகி கணவனுடன் சிறைச்சாலையில் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறாள்.
கணவனும் பிழை செய்துவிட்டான். நானும் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறினேன். ஆகவே, இது விதியின் விளையாட்டு என்று மனதை தேற்றிக் கொண்ட இந்தப் பெண் தான் விடுதலையானவுடன் மீண்டும் கணவனுடன் அமைதியான இல்லற வாழ்க்கையை நடத்தப் போகிறேன் என்று எனக்கு உறுதியளித்தாள்  ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: