சனி, 6 ஏப்ரல், 2013

பஸ் சாரதி, நடத்துனருக்கு மரண தண்டனை. பஸ் – ரயில் கோர விபத்து சம்பவம்

train_accident2005 அளவ்வ பஸ் – ரயில் கோர விபத்து சம்பவம், 41 பேரின் மரணத்துக்கு காரணமான பஸ் சாரதி, நடத்துனருக்கு மரண தண்டனை 10 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் தலா 5,000 ரூபா அபராதம் விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பு< அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளாகி 41 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாகவிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு குருநாகல் – கொழும்பு வீதியில் அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயில் கடவை மூடப்பட்டிருந்த சமயத்தில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட தனியார் பஸ் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெறுவதற்குக் காரணமாகவிருந்த பஸ் சாரதியும், நடத்துனருக்கும் குருநாகல் மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. மரண தண்டனைக்கு மேலதிகமாக 10 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னான்டோ தீர்ப்பளித்தார்.அப்துல் வாஹிட் ஹப்ருல் அசாத் என்ற சாரதிக்கும், மில்லவானகெதர புத்திக்க ருவன் குமார என்ற நடத்துனருக்குமே இவ்வாறு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 41 பேரின் சார்பில் கொலைக்குற்றங்களும், படுகாயமடைந்த 35 பேரின் சார்பில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுக்களும் முதலாவது பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
கொலை செய்தல்,கொலை செய்ய முயற்சித்தல், கொலைக்கு உடைந்தையாக இருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இரண்டாவது பிரதிவாதிக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ளன. இவ்விருவருக்கும் எதிராக 75 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கொலை, கொலை முயற்சி, அதற்கு உடந்தையாதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதிவாதிகள் இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட் டுள்ளது.152 கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் இருவரையும் குற்றவாளிகளாகக் கருதி 180 பக்க தீர்ப்பை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ வாசித்தார். குற்றச்சாட்டுக்கள் சிலவற்றுக்குப் பிரதிவாதிகள் விடுதலையாகினர். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் வழங்கப்பட்ட சிறைத் தண்டனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை வாவலையிலிருந்து கொழும்பு நோக்கி 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி பயணித்த மேற்படி தனியார் பஸ் காலை 8.20 மணிக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. யாங்கல் மோதர ரயில் கடவையை அண்மித்த போது கடவை மூடப்பட்டிருந்ததால் வாகனங்கள் இரு பக்கமும் நிறுத்தப்பட்டிருந்தன.
ரயில் வருவதற்கு சற்றுத் தாமதம் ஏற்பட்டதால் பஸ்ஸிலிருந்து இறங்கி ரயில் வருகிறதா எனப் பார்க்குமாறு சாரதி நடத்துனருக்குக் கூறியிருக்கிறார்.நடத்துனர் ரயில் பாதையருகே சென்று பார்த்தபின் சமிக்ஞை செய்து பஸ்சை மூடப்பட்ட ரயில் கடவையூடாக வருமாறு கூறியிருக்கிறார். இதன்படி சாரதி ரயில் கடவையை நோக்கி பஸ்ஸை செலுத்தி யுள்ளார். கடவை மூடப்பட்டதற்கான மணியும் ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் பஸ் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயில் வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் நின்று கொண்டிருந்தவர்கள் போக வேண்டாம் என்று கூறிய போது பொருட்படுத்தாமல் பஸ்ஸை செலுத்தியுள்ளார்.முறைப்பாட்டாளர் சார்பில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், காயமடைந்தவர்கள், டொக்டர்கள், ரயில் சாரதி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அரச சட்டத்தரணி குணசேகரவின் வழிகாட்டலின் கீழ் சாட்சியமளித்தனர்.இதன் போது முதலாவது பிரதிவாதி சாட்சியமளித்ததுடன் இரண்டாவது பிரதிவாதி பிரதிவாதிகளின் கூண்டில் இருந்தவாறு அறிக்கை ஒன்றினை வழங்கினார்.
சாரதி தவறிழைக்கும் போது நடத்துநர் அதனை தடுப்பதற்கு முயற்சி எடுக்கவில்லை எனவும், அதற்கு அவர் மேலும் ஆதரவளித்ததாகவும் அவர் கூறினார். எனவே, இதனை தெரிந்து தெரிந்தே செய்தமையால் இது மன்னிப்பு வழங்கக்கூடிய குற்றமொன்றாக கொள்ள முடியாதெனவும் வலியுறுத்தினார்.அவசரமாக செல்வதே நோக்கமாக அமைந்ததாக பிரதிவாதிகளின் கருத்து அமைந்தது. பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி நலின் எதிரிசிங்க ஆஜரானார்.மேற்படி விடயங்களை ஆராய்ந்த நீதவான் பர்னாந்து பிரதிவாதிகளை குற்றவாளிகளாக தீர்மானிப்பதற்கான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சந்தேகமின்றி உறுதிப்படுத்தக்கூடியவாறு முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ளதாக உத்தரவிட்டார்.mahaveli.com

கருத்துகள் இல்லை: